தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சுந்தரி வந்தாள்!

சுந்தரி வந்தாள்!

சுந்தரி வந்தாள்!


PUBLISHED ON : ஜூன் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படுக்கையில் கண்களை மூடி படுத்திருந்த நான், ஓசை கேட்டு கண்களைத் திறந்தேன்.

'வந்துட்டிங்களா?' என, முனகத்தான் முடிந்தது.

உடலை அசைக்க முடியவில்லை. கர்ப்பப்பை அகற்றப்பட்டதால், அடிவயிற்றில் வலி.

''இப்ப, வலி எப்படியிருக்கு?'' என்றவாறே மருத்து, மாத்திரைகள் இருந்த பாலிதீன் கவரை மேசை மீது வைத்தார், கணவர்.

''ம்... முன்னைக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை.''

என்னை மெல்ல அணைத்து எழுப்பி சாய்ந்த நிலையில் உட்கார வைத்து, ஆப்பிள் ஜூசை குடிக்க வைத்தார். கொஞ்சம் தெம்பாக இருந்தது.

''மருத்துவமனை மருந்து, மாத்திரை, ஊசி, ட்ரிப்ஸ் என, எல்லாமும் என்னை போட்டு வாட்டி வதைத்ததில், எப்படா வீட்டுக்குப் போவோம்ன்னு இருக்கு,'' என்றேன்.

''ம்... போயிடலாம் போயிடலாம்,'' என்றார்.

''எழுந்து நல்லபடியா நடமாடி, வேலை செய்ய ரெண்டு மாசமாவது ஆகும். அதுவரைக்கும் வேலை செய்ய, சமைக்க என்ன பண்றது?''

''அதான், மகள் திவ்யா வந்து இருக்கறதா சொல்லியிருக்கால்ல?''

அதே நேரம் அவரின் மொபைல்போன் சிணுங்கியது.

''யாரு... திவ்யாவா?'' நான் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல், மொபைல் போனை எடுத்து வெளியே போனார்.

சில நிமிடங்களில் திரும்பி வந்தவரின் முகத்தில் இதுவரை இல்லாத அமைதி.

''யாரு போன்ல?''

''உன் தங்கை, சுந்தரி.''

''சுந்தரியா?'' எனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி, குரலிலும் வெளிப்பட்டது.

'ஆமாம்...' மவுனமாக முனகினார்.

''செத்தாலும் என் முகத்தில் விழிக்க மாட்டாள் என்று, நான் நினைத்த சுந்தரியா போன் செய்திருக்கிறாள். என்ன சொன்னா?''

''நீ ஆபரேஷன் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரியில கெடக்கன்னு, உன் தம்பி சொல்லியிருப்பான் போல. அதான் உன்னை பார்க்க வர்றேன்னு சொன்னாள்,'' என்றார்.

ஒப்புக்காக விசாரிக்க போன் செய்திருப்பாள் என்று நினைத்தால், பார்க்க வருகிறாள் என்றதும், என்னால் நம்ப முடியவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு, மனதுக்குள் விரிந்துக் கொண்டேயிருந்தது. உறங்கவும், வலி தெரியாமல் இருக்கவும், நர்ஸ் வந்து ஊசி போட்டு போன பிறகும் கூட துாக்கம் வரவில்லை. வலி கூடியது. உடல் வலியல்ல, மன வலி.

திவ்யாவிற்கு கல்யாணம் கூடி வந்த சமயம். நல்ல இடம், அரசு உத்தியோக மாப்பிள்ளை.

கடனை உடனை வாங்கி கல்யாணத்தை முடித்து விடலாம் என, எல்லாரும் சொல்ல, மனதிலும் அதுவே சரியென பட்டது.

'ஜெய்ப்பூரில் இருக்கும் தங்கையிடம் ரெண்டு லட்சம் ரூபாய் கேட்கலாம்...' என, கணவரிடம் சொன்னேன்.

ஜெய்பூரில் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார், தங்கையின் கணவர். அவளின் ஒரே மகள், மருத்துவம் படிக்கிறாள்.

'என் மகள் படிக்கிறது, சாதாரண படிப்பு இல்லை; தனியார் கல்லுாரியில் மருத்துவம் படிக்கிறாள். பணம் ரொம்ப செலவாகுது. சமாளிக்க முடியாம, நாங்களே, 'லோன்' போட்டு தான் படிக்க வைக்கிறோம். இந்நிலையில் என்னால உதவ முடியாதுன்னு தோணுது...' என்று கூறி விட்டாள், சுந்தரி.

எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை. கூடப்பிறந்த அக்காவுக்கு இந்த சமயத்துல உதவி செய்யலைன்னா, அப்புறம் என்ன, அக்கா - தங்கை உறவு வேண்டியிருக்கு. ஆத்திரத்தில் நிச்சயதார்த்தத்துக்கு சொல்லவில்லை.

'சித்தி... சித்தி...' என்ற மகளிடம், 'இனிமே, அவகிட்ட நீ பேசக் கூடாது...' அவளை கண்டித்தேன்.

திருமணத்திற்கு, ஒப்புக்காக பத்திரிகை அனுப்பி வைத்தேன்.

'இதப்பார்... அவங்க குடும்பத்துல என்ன பிரச்னையோ? அவ பொண்ணு டாக்டருக்கு படிக்குது; எவ்வளவோ செலவு இருக்கும்; அவ எப்படி உதவ முடியும்? இதுக்குப் போய் நீ ஆத்திரப்படறது தப்பு...' என்றான், தம்பி.

'போடா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு...' என, திட்டினேன்.

ஒப்புக்காக பத்திரிகை வைத்தாலும், திருமணத்திற்கு வந்த சுந்தரி, மேடையேறி திவ்யாவிற்கு ஆசையாய் மோதிரம் போட்டாள்.

அந்த நிமிடமே நான் ஆவேசமாக சென்று, திவ்யாவின் விரலிலிருந்து மோதிரத்ததை கழற்றி, 'இந்தாடி உன் மோதிரம். என் பெண்ணுக்கு நீ இதைப் போட்டுத்தான் அவ வீட்ல போய் வாழணும்ன்னு, தலையெழுத்து இல்லை. வந்துட்டா அரை பவுன் மோதிரத்தை துாக்க முடியாம துாக்கிக்கிட்டு. எடுத்துக்கிட்டு போடி...' என, அவள் கையில் திணித்தேன்.

திருமண மேடை அருகிலிருந்த அத்தனை உறவுகளும் ஸ்தம்பித்து நின்றனர். அவமானம் தாளாத சுந்தரி, கண்ணீர் பொங்க சாப்பிடாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.

அத்தனை உறவுகளும், என்னை திட்ட, அதைப் பற்றியெல்லாம் நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

அவளை அவமானப்படுத்தியதில் உள்ளுக்குள் எனக்கு குரூரமான திருப்தியே.

அவமானத்தால் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மாதம் துாக்கமின்றி அவஸ்தைப்பட்டதாக, என் தம்பி மூலம் தெரிந்து கொண்டேன். இருந்தாலும், எனக்குள் எந்த குற்ற உணர்வும் இன்றி, அனுபவிக்கட்டும் என்று நினைத்தேன்.

அதன்பின், சுந்தரிக்கும், எனக்கும் பேச்சும் இல்லை. அவளைப் பற்றி நினைப்பதே பாவம் என, எண்ணி ஒதுக்கி விட்டேன்.

அவளும் அதன்பின், ஊர் பக்கம் வருவதையே நிறுத்திக் கொண்டாள்.

''ம்... நீ இத்தனை அவமானப்படுத்தியும், மனசு கேட்காம, அவ உன்னை பார்க்க வர்றாப் பாரு,'' என்றார், கணவர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு வந்தாள், சுந்தரி.

பல ஆண்டுகள் பார்க்காத தங்கையின் முகத்தை பார்த்ததுமே, மனதில், தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பதை போன்ற நெகிழ்வு.

என் கையைப் பற்றி, சுந்தரி, மாலை மாலையாய் கண்ணீர் வடித்த போதும், உள்ளுக்குள் எனக்கும் அருவி பெருக்கெடுத்தது. ஆனாலும், என்னால் எதையும் வெளி காட்டிக்கொள்ள முடியவில்லை.

இன்னும், அவள் மேல் கோபம் இருப்பதை உணரட்டும் என, என் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன். உடல் நிலை பற்றி அவள் விசாரித்தபோது, கணவரும், திவ்யாவும் தான் மாறி மாறி பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஓரளவிற்கு உடல் தேறியிருந்தாலும், அவளிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, கண்களை மூடி, வேதனையில் கஷ்டப்படுவதை போல் பாவனை செய்தேன்.

அவள் கிளம்பிய போது, 'ஒரு வாரம் இருந்துவிட்டுப் போயேன்...' என்று சொல்ல மனம் துடித்தாலும், எனக்குள் இருந்த, 'ஈகோ' தடுத்தது.

''அம்மா... நீ இவ்வளவு அவமானப்படுத்தினதுக்கு, வேற யாராயிருந்தாலும் நம் வீட்டு வாசலை மிதிக்க மாட்டாங்க. ஆனா, சித்தியைப் பாரு... உனக்கு உடம்பு சரியில்லைன்னதும் துடிச்சுப் போய், வந்து பார்த்துட்டுப் போறாங்க,'' என்று உருகினாள், திவ்யா.

''ஆமா, என்ன இருந்தாலும் அவ மனசு யாருக்கும் வராது. அக்காதானேன்னு மனசுல எதையும் வச்சுக்காம வந்தா பாரு,'' என, கணவரும் சேர்ந்து உருக, என் மனமும் உருகியது.

''ஆமா, வந்துட்டா பெரிசா... 'அக்காகாரி ஆபரேஷன் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரியில கிடக்காளா... திடீர்னு போயிட்டாளா'ன்னும், 'கடைசியில அக்காகாரியை போய் கூட பார்க்கலையேன்'னு உறவுகள் நாளைக்கு மொத்தும்ல... அந்த பழி வரக் கூடாதுன்னு, 'பார்மாலிட்டி'க்கு வந்து பார்த்துட்டுப் போறா. அப்படியே என் மேல பாசத்துல உருகி ஓடி வரலை,'' என்றேன்.

இதுக்கு மீறி ஏதாவது சொன்னால், நான் திட்டுவேன் என, திவ்யாவும், கணவரும் அதற்கு மேல் பேசவில்லை.

சுந்தரி வந்து போனதைப் பற்றி கேள்விப்பட்டு விசாரித்த சொந்த பந்தங்களிடமும் இதையேத் தான் சொன்னேன்.

ஒரு வாரம் சென்றது. எழுந்து என் வேலைகளை பார்க்கத் துவங்கிய போது, சுந்தரியிடமிருந்து மறுபடியும் போன் வந்தது.

''உடம்பு இப்ப எப்படியிருக்குன்னு கேட்க, சுந்தரி போன் பண்றா போலிருக்கு. நல்லவிதமா பேசு. ஏடா கூடமா எதையாவது பேசிடாதே,'' என மிரட்டி, மொபைல்போனை என்னிடம் நீட்டினார், கணவர்.

வாங்கி, ''ஹலோ!'' என்றதும், அவளது கணவர், ''அண்ணி... அண்ணி...'' என்றார்.

''என்ன?''

''அண்ணி, சுந்தரி இறந்துட்டா.''

''என்ன...'' ஆடிப்போய் விட்டேன்.

''ஐய்யோ... எப்படி எப்படி?'' என, கதறினேன்.

''அவளுக்கு ரெண்டு வருஷமாவே, ரத்த புற்றுநோய். அதுக்கு சிகிச்சை எடுத்திட்டிருந்தா. கடைசி நிலை. சொன்னா நீங்களெல்லாம் தாங்கிக்க மாட்டிங்கன்னு, சொல்லக் கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டா. அதனாலதான் நான் யாருகிட்டயும் சொல்லலை.

''கொஞ்ச நாள்ல இறந்துடுவோம்ன்னு, உங்க முகத்தை கடைசியா பார்த்துடணும்ன்னு துடிச்சுக்கிட்டிருந்தா. செத்த பிறகு அவளோட ஆத்மா சாந்தி அடையணும்ன்னு தான் உங்களைப் பார்க்க, அவளை அனுப்பி வச்சேன்.

''வம்பு, சண்டைன்னு பேசாம போய் சேர்ந்திருந்தாள்ன்னா, 'கூடப் பிறந்த அக்கா கூட கடைசி வரை பேசாமலே போயிட்டோமே'ன்னு, அவ ஆத்மா துடிச்சுக்கிட்டே இருந்திருக்கும். இப்ப சாந்தியடைஞ்சிருப்பா. பாடியை ஊருக்கு கொண்டு வர்றோம். உங்க பக்கம் சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிடுங்க,'' என தொடர்பு துண்டிக்கப்பட்டது.

'நான் செத்துப் போயிட்டா, உறவுகள் பழி சொல்லுமேன்னு தான் பார்க்க வந்தா...' என் குரலே எனக்குள் ஒலிக்க, ''இல்லை... தான் செத்துப் போயிடுவோமோன்னு தான் என்னை பார்க்க வந்திருக்கா...'' என பெரிதாக கதறியழத் துவங்கினேன்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்போது, ஆணவமெல்லாம் அழிந்து ஓடிக்கொண்டிருந்தது.

ஆர். சுமதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us