PUBLISHED ON : ஆக 10, 2025

அவல் பாயசம்!
தேவையானவை: நன்கு சுத்தம் செய்த அவல் - 300 கிராம், சர்க்கரை - 400 கிராம், முந்திரி, திராட்சை - தலா 15, நெய் - கால் கப், கெட்டி தேங்காய்ப்பால் - அரை கப், பசும்பால் - இரண்டு கப், ஏலக்காய்த்துாள் - அரை தேக்கரண்டி, குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை.
செய்முறை: அவலை மிக்சியில் பொடித்து, பின் வாணலியில் நெய் விட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். பொடித்த அவலை பசும்பால் விட்டு வேக விடவும்.
நன்கு வெந்ததும் சர்க்கரையைப் போடவும். சர்க்கரையுடன் சேர்ந்து கொதிக்கும் போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, ஒரு கொதி வந்ததும், ஏலத்துாள் போட்டு இறக்கவும். குங்குமப்பூ மற்றும் நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.
கைமுறுக்கு!
தேவையானவை: பச்சரிசி - 5 கப், வெள்ளை உளுந்து - ஒரு கப், வெண்ணெய் - 100 கிராம், கறுப்பு எள், சீரகம் - தலா ஒரு மேஜைக்கரண்டி, உப்பு - தேவைக்கு, பொரிக்க எண்ணெய்.
செய்முறை: பச்சரிசியை, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டி உலர வைத்து, மாவாக அரைத்துக் கொள்ளவும். உளுந்தை லேசாக வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். பிறகு, இரண்டு மாவையும் கலந்து அதில் உப்பு, பெருங்காயத்துாள், எள் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
மாவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுச் சற்று தளர்வாகப் பிசையவும். சிறிது நேரத்துக்கு பின், மாவை இரண்டு, மூன்று முறை நன்கு பிசைந்து வைக்கவும். அப்போது தான், முறுக்கு சுற்ற வரும்.
சிறிது மாவு எடுத்து எண்ணெய் தொட்டு ஒரு வெள்ளைத் துணியில் முறுக்காகச் சுற்றவும். ஈரம் கொஞ்சம் காய்ந்த பிறகே, எண்ணெயைக் காயவைத்து மிதமான தீயில் முறுக்குகளைப் பொரித்து எடுக்கவும். சுவை பிரமாதமாய் இருக்கும்.
பாம்பே ரவா சீடை!
தேவையானவை: பாம்பே ரவை - ஒன்றே கால் கப், வறுத்துப் பொடித்த உளுந்து மாவு- கால் கப், தேங்காய்த் துருவல் - நான்கு தேக்கரண்டி, பெருங்காயத்துாள் - அரை தேக்கரண்டி, மிளகு, சீரகப் பொடி - தலா ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேஜைக்கரண்டி, எண்ணெய், தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு.
செய்முறை: வெறும் வாணலியில் ரவையைப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும். பிறகு, வறுத்துப் பொடித்த உளுந்துப் பொடி, தேங்காய்த் துருவல், பெருங்காயத் துாள், மிளகு, சீரகப் பொடி, நெய், உப்பு எல்லாவற்றையும் ஆறின ரவையுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
இந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்த சீடைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மிளகு, சீரகத்துக்குப் பதிலாக, ஓமம் அல்லது எள்ளு சேர்த்தும் செய்யலாம்.