PUBLISHED ON : ஆக 10, 2025

இன்று யார், யாரோ மாவீரன் பட்டத்துடன் வலம் வருகின்றனர். ஆனால், வீரச் செயல் புரிந்த ஒருவர், நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது, நமக்குத்தான் பெருமை. அவர், மன்னார்குடி அருகில் உள்ள சேரங்குளம் பகுதியை சேர்ந்த, பாஷ்யம் எனப்படும் ஆர்யா.
கடந்த, 1907ல், பிறந்த இவர், தன் 12வது வயதிலேயே, 1919ல், நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை அறிந்து, வெள்ளையர்கள் மீது கடுங்கோபம் கொண்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக போராட முடிவு செய்தார்.
கடந்த, 1928ல், சைமன் தலைமையில் வந்த குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதில், கல்லுாரி முதல்வர் விதித்த ஐந்து ரூபாய் அபராதத்தை கட்ட மறுத்தார். கல்லுாரி பாஷ்யம் முதல்வரே இவரின் அபராதத்தை கட்டி விட்டார்.
இதை, தன் தேசபக்திக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட துவங்கினார். அதற்கு பணம் தேவைப்பட்டதால், நண்பர்களுடன் சேர்ந்து, மதுரையில் செயல்பட்ட இம்பீரியல் வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டார்.
நண்பர்கள் ராமசாமி, மாரியப்பன் ஆகியோர், கடைசி நேரத்தில் சொதப்பியதால், இருவரும் போலீசில் சிக்கியதோடு அல்லாமல், கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது, பாஷ்யம் தான் என்றும் கூறிவிட்டனர். பாஷ்யத்தை கைது செய்து, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியும், எந்தவித ஆதாரமும் கிடைக்காததால், விடுதலை செய்யப்பட்டார். பாஷ்யம்.
அவர் நடத்திய இந்திய விடுதலைக்கான போராட்டங்களில் மிக முக்கியமானது. கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றியது தான். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், 140 அடி உயர கம்பத்தில் இங்கிலாந்தின், 'யூனியன் ஜாக்' கொடி பறப்பதை பார்க்கும் போதெல்லாம், பாஷ்யத்திற்கு கடும் கோபம் ஏற்படும். இந்த கொடியை அகற்றிவிட்டு, இந்திய கொடியை ஏற்ற வேண்டும் என, முடிவு செய்தார்.
இதற்காக, மிகப்பெரிய அளவில் மூவர்ண கொடியை தானே தைத்து, நடுவில் ராட்டையை வரைந்தார். ராட்டையின் கீழ், 'இந்தியா இன்று முதல் சுதந்திரம் அடைந்து விட்டது...' என எழுதினார்.
ஜனவரி 25, 1932, அன்று மாலை, அந்த கொடியை தன் உடைக்குள் மறைத்துக் கொண்டு தயாரானார். தியாகி சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனை, தன்னைப் பின் தொடருமாறு கூறினார்.
நள்ளிரவு, 12:00 மணிக்கு போலீஸ் உடையில் ரகசியமாக, கோட்டையின் தென்புற வாசல் வழியாக, கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு, 14 அடி உயரமும், 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார்.
அப்போது, சென்னை கலங்கரை விளக்கில் உள்ள சுழலும் விளக்கின் வெளிச்சம், இவர் மீது பட்டது. ஒளி படும் நேரத்தில், மறுபுறம் ஒளிந்து ஏறி, 'யூனியன் ஜாக்' கொடியை இறக்கிவிட்டு, இந்திய தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின் கம்பத்தில் இருந்து இறங்கி ஓடி தப்பி விட்டார்.
மறுநாள் காலை, கம்பத்தில் இந்திய கொடி பறப்பதை பார்த்து, பதட்டமடைந்தனர், பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள். கவர்னருக்கு செய்தி போனது. இதை செய்தவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
அதன்பின்னரும், பல்வேறு புரட்சிகள் செய்து, ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்தார், பாஷ்யம். ஆனால், அவரின் வீர தீர செயல்கள் பெரும் பாராட்டுதல்களை பெறவில்லை என்பது தான் வேதனை.
கடந்த, 1945ல், முழு நேர ஓவியரானார். 'யுனைடெட் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தை துவங்கி நடத்தினார். இப்போது பயன்படுத்தப்படும் பாரதியார் படம். இவர் வரைந்தது தான். 'துக்ளக்' பத்திரிகையில், ஆர்யா என்ற பெயரில், படங்கள் வரைந்து கொடுத்தவரும் இவரே. 1999ல், சென்னையில் இவர். இயற்கை எய்தினார்.
கே.எஸ். கிருஷ்ணராஜ்.

