PUBLISHED ON : ஆக 10, 2025

பண்டரிபுரியில், பானுதாசர் என்ற துணிக்கடைக்காரர் இருந்தார்; மிகவும் நேர்மையானவர்.
தன் கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம், 'ஐயா! இதன் விலை ஐந்து செம்பு நாணயம் மட்டும் தான். நீங்கள் எனக்கு குறைந்த லாபத்தைக் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள்...' என்பார்.
'இந்தப் புடவை நன்றாக நெய்யப்பட்டது. ஆனால் பழைய சரக்கு, குறைந்த விலைக்குத் தருகிறேன்...' எனக் கூறுவார்.
'இவர் நேர்மையானவர். சிறிய லாபம் வைத்து, குறைந்த விலைக்கு இத்துணிகளை விற்கிறார். அவர் அப்படி செய்வது, நம் வியாபாரத்தின் மீது பாதிப்பை உண்டாக்குகிறது. இது போன்ற மனிதர் வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும்...' என, பேசிக் கொண்டனர், ஊரிலுள்ள மற்ற வியாபாரிகள்.
மற்ற வியாபாரிகள் ஒன்று சேர்ந்து, அவரை சந்தித்தனர்.
'நீ தொடர்ந்து இப்படி வியாபாரம் செய்து வந்தால், நாங்கள் கடைகளை மூடிக்கொள்ள வேண்டி வரும். யாரும் எங்களிடம் வருவதில்லை. நீ உன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தயவுசெய்து வியாபாரத்தை நிறுத்திக் கொள்...' என்றனர்.
'ஐயா என்னை மன்னியுங்கள். நேர்மைக்கு மாறாக ஒருபோதும் நான் நடந்து கொள்ள மாட்டேன்...' என, திட்டவட்டமாக கூறினார், பானுதாசர்.
ஒருநாள், கோவில் பஜனையில் பங்கேற்க நினைத்தார், பானுதாசர். அருகே இருந்தவரிடம், 'கொஞ்சம் என் கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் கடையை மூட விரும்பவில்லை...' எனக் கூறி, கோவிலுக்கு சென்றார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மற்ற வியாபாரிகள், அவர் கடையிலுள்ள சரக்கு அனைத்தையும் எடுத்துச் சென்று, ஒரு பாழும் கிணற்றில் போட்டு விட்டனர்.
வியாபாரிகள் இப்படி செய்துவிட்டு திரும்பும் நேரம், அவர்களின் கடைகளைச் சூறையாடி, துணிகள் அனைத்தையும் திருடி, எதிரே வந்த இவர்களையும் அடித்துவிட்டுச் சென்றது, திருடர் கூட்டம்.
தம் தவறை உணர்ந்தனர், வியாபாரிகள்.
'கடவுள் நம்மைத் தண்டித்து விட்டார். நாம் எதை விதைக்கிறோமோ, அது தான் பலனாக கிடைக்கும்...' என, வருந்தினர்.
பானுதாசரிடம் சென்று, தாம் செய்த ஈனச் செயலை கூறி, மன்னிப்புக் கேட்டனர்.
'நீங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தீர்கள். அது போதும், பாண்டுரங்கனை வணங்குங்கள். அவர் உங்களை மன்னிப்பார். கடவுள் கருணையுள்ளவர். விரைவில் நீங்கள் நலம் பெறுவீர்கள். வியாபாரத்தை மீண்டும் துவங்குங்கள்...' என, ஆறுதல் கூறினார், பானுதாசர்.
பணம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. நேர்மையுடன் நாம் செயல்படுவது தான், ஆண்டவனை அர்ச்சிப்பதாகும்!
அருண் ராமதாசன்

