
டோலிவுட் செல்ல திட்டமிடும், சிவகார்த்திகேயன்!
தற்போது, தமிழ் சினிமாவை சேர்ந்த, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களும், தெலுங்கில் மார்க்கெட்டை பிடிப்பதால், சிவகார்த்திகேயனும் தான் நடித்து வரும், பராசக்தி படத்தில், தெலுங்கு நடிகர், ராணாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்.
பராசக்தி படத்தை தெலுங்கிலும் வெளியிட்டு, தன்னை அங்குள்ள மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். அடுத்தபடியாக தான் நடிக்கும் படங்களில், தனுஷ் பாணியில் தமிழ், தெலுங்கு என, நேரடியாகவே இரண்டு மொழிகளிலும் நடிப்பதற்கு திட்டமிட்டு வருகிறார்.
— சினிமா பொன்னையா
ரஜினிக்கு வந்த, வில்லன் ஆசை!
ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், எந்திரன் படத்தில், 'ஹீரோ - வில்லன்' என, இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது, கூலி படத்தில், 'நெகட்டீவ்' கலந்த, 'ஹீரோ' ஆக நடித்துள்ளார், ரஜினி.
அடுத்தபடியாக ஒரு படத்தில் மீண்டும், 'ஹீரோ - வில்லன்' என, இரண்டு வேடங்களில் நடிக்க திட்டமிட்டு வருகிறார். தன் எதிர்பார்ப்புகளை சில இயக்குனர்களிடம் சொல்லி, அதற்கேற்ற, 'ஸ்கிரிப்ட்' தயார் செய்யுமாறும் கூறியுள்ளார்.
சினிமா பொன்னையா
கிராமத்து வேடங்கள் பக்கம் திரும்பிய, நித்யா மேனன்!
விஜய் சேதுபதியுடன், தலைவன் தலைவி , தனுஷுடன், இட்லி கடை போன்ற படங்களில் கிராமத்து கதைகளில் உணர்வுபூர்வமான காட்சிகளில் நடித்துள்ளார், நித்யா மேனன். 'அது போன்ற கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற பிறகும், அந்த காட்சிகள் மனதுக்குள் நிழலாடுகின்றன.
'எப்போதுமே அந்த கதாபாத்திரத்தின் தன்மை, நமக்குள் அன்பு, பாசம் கலந்த ஒரு வாசனையாக வீசிக்கொண்டே இருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் இன்னும் நிறைய மாறுபட்ட கிராமத்து வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டுள்ளது...' என்கிறார், நித்யா மேனன்.
எலீசா
கருப்பு பூனை!
தன் தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்து கொண்ட சின்ன குஷ்பூ நடிகை, தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதால் கணவருக்கும், அவருக்கும் இடையே முட்டல் மோதல் நடந்து வருகிறது.
குறிப்பாக, அம்மணியை பொறுத்தவரை, சினிமா, 'பாய்பிரண்டு'களுடன் இப்போது வரை நெருக்கம் வைத்திருக்கிறார். அதோடு சில, 'பிரண்டு'களுடன் வெளிநாடுகளுக்கும், 'டூர்' அடிக்கிறார். இதுபோன்ற விஷயங்களால் அம்மணியின் கணவர், கடுமையான கொந்தளிப்புக்கு ஆளாகி வருகிறார். இதனால், ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக, தற்போது கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார், சின்ன குஷ்பூ நடிகை.
சினி துளிகள்!
* 10 ஆண்டுகளுக்குப் பின், கில்லர் என்ற படத்தை இயக்கி நடிக்கும், எஸ்.ஜே.சூர்யா, இந்த படத்தில் பயன்படுத்த, 'பிஎம்டபிள்யூ' கார் ஒன்று வாங்கி இருக்கிறார்.
* தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர், 5 கோடி ரூபாயில் இருந்த தன் சம்பளத்தை, 6 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்.
* காதல் தேசம் படத்தில் நடித்து பிரபலமான, நடிகர் அப்பாஸ், 11 ஆண்டுகளுக்குப் பின், தற்போது ஒரு புதிய படத்தில், 'ரீ-என்ட்ரி' கொடுக்கிறார்.
* எதிர்பார்த்தபடி புதிய படங்கள் ஒப்பந்தமாகாததால், தன், 'பிகினி' புகைப்படங்களை வெளியிட்டு, 'கமர்ஷியல்' இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார், நடிகை கயாடு லோஹர்.
* தமிழில், ஹன்சிகா நடித்த, மூன்று படங்களுமே கிடப்பில் உள்ளதால், தற்போது தாய் மொழியான ஹிந்தி படங்களில் நடிக்க, ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளார்.
* திருமணத்திற்கு பின், தன் மார்க்கெட் மந்தமாகிவிட்ட போதும், 'தற்போது நடித்து வரும், ராமாயணா படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பேன்...' என்கிறார், காஜல் அகர்வால்.
* மலையாளத்தில், பிரேமலு படத்தில் நடித்து புகழ் பெற்ற, மமிதா பைஜு, தற்போது தமிழில், மூன்று படங்களில், 'ஹீரோயின்' ஆக நடித்து வருபவர், தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்து விட்டார்.
* விஜய் ஆண்டனி நடித்துள்ள, சக்தி திருமகன் என்ற படம், செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கு, பத்ரகாளி என, 'டைட்டில்' வைத்துள்ளனர்.
அவ்ளோதான்!

