PUBLISHED ON : நவ 07, 2010

நவ., 11 - கந்தசஷ்டி!
எதிரிகளை மன்னிக்கும் மனப்பக்குவம் யாருக்கு இருக்கிறதோ, அவரே உலகில் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடக்கிறது. காஷ்யபர் என்ற முனிவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவி தேவர்களையும், இன்னொரு மனைவி அசுரர்களையும் பெற்றாள். தேவ குழந்தைகளின் தலைவனாக தேவேந்திரனும், அசுரக் குழந்தைகளின் தலைவனாக அசுரேந்திரனும் இருந்தனர். அசுரேந்திரன், மங்களகேசினி என்பவளை மணந்து, சுரசை என்ற மகளைப் பெற்றான். அவளுக்கு, பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார் அசுரகுரு சுக்ராச்சாரியார். மாயை என்ற மாற்றுப் பெயரையும் சூட்டினார். தேவர்களை விட, அசுரர்கள் குறைந்த வலிமையுடன் இருந்தனர். அவர்கள் ஒரு தகப்பன் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்தாலும், தாயாதி சண்டை நடப்பது வாடிக்கையாக இருந்தது. இதுகண்டு சுக்ராச்சாரியார் வருத்தப்பட்டார். அசுரகுலத்தின் பெருமையை உயர்த்த முடிவெடுத்தார். இதற்கு, மாயையைப் பயன்படுத்த விரும்பினார். காஷ்யபரை மணந்து பல பிள்ளைகளைப் பெற்று, அசுரகுலத்தைக் காப்பாற்றும்படி உத்தரவிட்டார். தவமுனிவரான காஷ்யபர் மூலம் பிறக்கும் குழந்தைகளே அறிவாளிகளாகவும், பலசாலிகளாகவும் இருப்பர் என்பது அவரது நம்பிக்கை.
மாயையும் இதற்கு சம்மதித்தாள். அவளது அழகு கண்டு காஷ்யபரும் மயங்கினார். 'கிழ வடிவிலுள்ள உங்களை மணக்க மாட்டேன்; மன்மதன் போல் உருமாறினால் சம்மதிக்கிறேன்...' என்றாள் மாயை. காஷ்யபரும் அவ்வாறே உருமாறி பத்மாசுரன், சிங்கமுகன், தாரகன் எனும் மூன்று வீரப்பிள்ளைகளையும், பல்லாயிரம் பிற பிள்ளைகளையும் பெற்றனர். அசுரகுலம் தழைத்தோங்கியது. இவர்களை தவவாழ்வு வாழும்படி தந்தை காஷ்யபர் உத்தரவிட்டார். அன்னை மாயையோ இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கும்படி அறிவுரை சொன்னாள். அன்னையின் கோரிக்கையை ஏற்ற அசுரர்கள், சிவனை நினைத்து தவமிருந்து, உலகையே ஆளும் வரம் பெற்றனர். சிவனின் சக்தியைத் தவிர யாராலும் அழிவு வராது என்பது அவர்கள் பெற்ற வரம். இதைப் பயன்படுத்தி, தேவர்களை விரட்டிவிட்டு தேவலோகத்தைக் கைப்பற்றினர். உலகில் அநியாயங்கள் நடந்தன. தேவர்கள் இதுபற்றி சிவனிடம் முறையிட்டனர். தன் வரத்தை தவறாகப் பயன்படுத்திய அவர்களை அழிக்க, தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உருவாக்கிய சிவன், அவற்றை சரவணப் பொய்கையில் மிதக்க விட்டார். அந்தப் பொறிகள், ஆறு குழந்தைகள் ஆயின. அவற்றை பார்வதிதேவி ஒன்று சேர்த்து, 'ஆறுமுகன்' என பெயர் சூட்டினாள். இவன் சூரர்களை வென்று, சாதனை படைத்தான். தாரகன், சிங்கமுகன் ஆகியோரின் அழிவுக்குப் பின், பத்மாசுரனுடன் போரிட்டார் முருகன். அவன் மாமரமாக உருமாறி, திருச்செந்தூர் கடற்கரையில் நின்றான். தன் வேலை எறிந்து மாமரத்தை பிளந்த அவர், அதில் ஒரு பிரிவை மயிலாக மாற்றி, தன் வாகனமாக்கிக் கொண்டார்; மற்றொரு பிரிவை சேவலாக்கி, தன் கொடியின் சின்னமாக்கிக் கொண்டார். எதிரியான பத்மாசுரனையும் இதன் மூலம் ஆட்கொண்டார். அதனால் தான், அந்தக் கருணைக்கடலை நினைத்து, சஷ்டி கவசம் பாடி, சரண் அடையும் கெட்டவர்கள் கூட மனம் திருந்தி, சகல நலமும் பெற்று வாழ்வர் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கந்தசஷ்டி நன்னாளில் திருச்செந்தூர் சென்று, நம் எதிரியையும் மன்னிக்கும் நற்குணத்தைப் பெற்று வருவோம். ***
