PUBLISHED ON : நவ 07, 2010

இளைஞர்கள் இப்படித்தான்!
என் ஆறு மாதக் குழந்தையுடன், ரயிலில் பயணித்துக் கொண்டி ருந்தேன். எனக்கு எதிர் சீட்டில் நான்கு இளைஞர்கள் பயணித்தனர். வழிசலான பார்வை, அசட்டு சிரிப்பு, ஒரு மாதிரியான பேச்சு என, நால்வருமே அக்மார்க் ஜொள்ளர்களாக இருந்தனர். என்னையும், என் அருகிலிருந்த நடுத்தர வயது பெண்ணையும், 'சைட்' அடித்ததோடு, ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போதெல்லாம் பிளாட்பாரத்தில் நின்றிருந்த பெண்களையும் பார்த்து ஜொள்ளிய படி இருந்தனர்.
அவர்களது பேச்சும், பார்வையும், சிரிப்பும் எனக்கு கடுப்பை ஏற்படுத்தியது; மனதுக்குள் அவர்களைத் திட்டினேன். ஒரு மணி நேர பயணத்திற்குப் பின், குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. சும்மா இருக்கும் போதே ஜொள்ளுப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நான்கு பேருக்கு முன்பாக, உடையை விலக்கி, குழந்தைக்கு எப்படி பாலூட்டுவதென தவித்தேன்.
குழந்தை அழுவதைக் கவனித்த அந்த நால்வரில் ஒருவன், 'ஏங்க பாப்பா அழுது... பசியமர்த்துங்க...' என்றபடி எழ, மற்ற மூவரும் அங்கிருந்து எழுந்து போய் விட்டனர். இன்றைய இளைஞர்கள் ஜொள்ளர்கள், வழிசல் பார்ட்டிகள், பெண்களை கேலி செய்பவர்கள் என்றெல்லாம் நினைத்திருந்த எனக்கு, அவர்கள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சைட் அடிப்பது, ஜொள்ளு விடுவது, பெண்களை கிண்டல் செய்வது போன்றவை அந்த வயதுக்கே உரித்தான இயற்கையான உணர்வு என்பதையும், உள்ளூர அவர்கள் படு டீசன்ட்டான மனிதர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன். பெண்களே... இளைஞர்களை புரிந்து கொள்ளுங்கள். எம்.ஜோதி சுந்தரபாண்டியன், கோவில்பட்டி.
தோழி செய்த ஐடியா!
கல்லூரி மாணவியான என் தோழி, விடுதியில் தங்கிப் படிக் கிறாள். ஒரு நாள் அவளது மொபைல் போன் ரிப்பேராகி விட்டது. ரிப்பேரை சரி செய்ய கடையில் கொடுக்கும் முன், அதிலிருந்த மெமரி கார்டை எடுத்துவிட்டு, தன்னிட மிருந்த புது மெமரி கார்டை போட்டுக் கொடுத்தாள்.
அவளிடம் விளக்கம் கேட்ட போது, 'விடுதியில் பொழுதுபோக்காக சக மாணவி யரை ஏடாகூடமாக படம் பிடிப்பேன். பிறகு, ஓரிரு நாளில் அதை அழித்து விடுவேன். ஒரு ஜாலிக்காக இப்படி செய்வேன். 'பழைய மெமரி கார்டோடு கடையில் கொடுத்தால், அவர்கள் கம்ப்யூட்டர் உதவி யுடன் அழித்த படங்களை பிரதி எடுத்துவிட வாய்ப்புண்டு. அதனால், ரிப்பேருக்கு கொடுக்கும் போதெல்லாம், இந்த புது கார்டை போட்டுக் கொடுப்பேன்...' என்றாள். 'மெமரி கார்டை எடுத்துவிட்டு, அது இல்லாமல் கொடுக்க வேண்டியது தானே...' என்று கேட்டேன். 'அது நம் மீது தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும். அதனால் தான் இப்படி...' என்றாள். பாராட்ட வேண்டிய விஷயம் தான். — ராமலட்சுமி, விருதுநகர்.
பாதுகாப்பான சட்டை!
ஆயத்த ஆடை அணிவதே தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. துணி எடுத்து தைப்பதால் கால விரயமும், பண விரயமும் ஏற்படுவதாக கருது கின்றனர். இதில், ஒரு சிறு குறை என்ன வென்றால், ஆண்களுக்கான சட்டை யில் உள்புறம் பாக்கெட் வைத்து தயாரிப்பதில்லை. சட்டையில் உள் பாக்கெட் என்பது தற்சமயம் மிகவும் அவசியமானது. பஸ் பயணம் செய்யும்போது ஜேப்படிக்காரர்களிடமிருந்தும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, மேல் பாக்கெட்டில் உள்ளவை தவறுதலாக கீழே விழுந்து தொலைவதையும் தடுக்கலாம். ஆகவே, ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள், ஆண்களுக்கான சட்டையில் உட்புறம் ஒரு பாக்கெட் வைத்து தயாரிக்கலாம். இதற்கான செலவு ஒன்றும் அதிகமாகப் போவதில்லை. அப்படியே ஆனாலும், விலையை கூட்டுவதன் மூலம் சமாளிக்க முடியும்; நமக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
— பி.ஜீவகன், ஆழ்வார்திருநகர்.
