தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஒன்றிணைவோம்... ஓசோன் காப்போம்!

ஒன்றிணைவோம்... ஓசோன் காப்போம்!

ஒன்றிணைவோம்... ஓசோன் காப்போம்!


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்., 16 - உலக ஓசோன் தினம்

சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தைத் தடுத்து, ஒரு கவசம் போல இருந்து, பூமியைப் பாதுகாக்கிறது, ஓசோன் படலம். மெல்லிய வாயுப் படலமான இது, ஆக்ஸிஜனின் ஒரு வடிவமாகும். அதாவது, மூன்று ஆக்சிஜன் அணுக்கள் (O3) சேர்ந்தது, ஒரு ஓசோன் மூலக்கூறு.

இப்படலத்தின் அளவையும், பரப்பையும், செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். அவ்வாறு ஆராய்ந்த போது, ஓசோன் படலத்தின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருவதை கண்டறிந்தனர், விஞ்ஞானிகள்

'ஸ்ட்ரேடோஸ்பியரில்' உள்ள ஓசோனின் அளவு, 1 சதவீதம் குறைந்தாலும், பூமியை வந்தடையும் புற ஊதாக்கதிர்களின் அளவு அதிகரித்து, உயிரிகளின், டி.என்.ஏ.,வை நேரிடையாக பாதிக்கும். இதனால், அனைவரும் கடலுக்கு அடியிலோ, தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் தான், ஓசோனைப் பாதுகாக்க, செப்., 16, 1987ல், கனடாவிலுள்ள மான்ட்ரியல் நகரில், 'மான்ட்ரியல் ஒப்பந்தம்' ஏற்படுத்தப்பட்டது. இதனைக் குறிக்கும் விதமாக, அவ்வாண்டிலிருந்து, ஐ.நா., சபையின் அறிவுறுத்தலின்படி, செப்., 16ம் தேதி, 'உலக ஓசோன் தினம்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஓசோன் படலம், பூமியிலிருந்து, 20 - 60 கி.மீ., உயரத்திலும், 20லிருந்து 25 கி.மீ., வரை அடர்த்தியாகவும், பரவியுள்ளது.

இது, சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில், 93 சதவீதத்தைத் தடுக்கிறது. 1913ல், சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்து தான் இந்த ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.

புவியையே காக்கும் அந்த ஓசோன் படலம், தன்னைக் காத்துக் கொள்ள இயலாமல், பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், குளோரோ புளூரோ கார்பன், மித்தைல் குளோரோபார்ம் போன்றவை தான்.

இவ்வாயுக்களில், குளோரா புளூரோ கார்பன் வாயுவை, நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி, ஏர் கூலர்கள், புகையிலை தொழிற்சாலைகள் மற்றும் தீயணைப்பு கருவியில் குளிரூட்டுவதற்கு என, பலவாறு பயன்படுத்துகின்றனர்.

இவ்வாயுவை அதிகம் வெளியிடும் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போதே எழுந்தது. இவற்றால், ஓசோன் படலத்தில் பெரிய துளை விழுந்திருப்பதும், பின்னர் கண்டறியப்பட்டது.

ஓசோனை பாதுகாக்க, குளோரோ புளூரோ கார்பன் பயன்பாட்டை தவிர்ப்பதோடு, மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்கச் செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலமே ஓசோனை பாதுகாக்க முடியும்.

ஓசோன் படலத்தின் அளவு குறைந்தால், பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், கால நிலை மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு, கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை உண்டாக்கும் அபாயம் இருக்கிறது.

பெரும்பாலும் ஆபத்தையே தரும் இந்த புற ஊதா கதிர்கள் உண்டாக்கும் தோல் புற்றுநோயால், உலகில் ஆண்டுதோறும், 66 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பதையும், இவை பயிர்களையும் பாதித்து, உணவுச்சங்கிலியை சீர்குலைக்க கூடியவை என்பதையும், யாரும் மறந்துவிடக் கூடாது.

ஓசோன் படலத்தைக் காக்க, அதை பாதிக்கும் வாயுக்களை வெளியேற்றும் கருவிகளின் பயன்பாட்டை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக, அனைவரும் ஒன்றிணைந்து, புவியில் அதிகமான மரங்களை நட்டு வளர்த்து, ஓசோன் படலத்தின் பாதுகாப்புக்கு உதவ வேண்டும்.

எம். முகுந்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us