தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரிக்கு —

வயது: 52, கணவர் வயது: 56. எங்களுக்கு, 26 வயதில் மகனும், 23 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மகனுக்கு, 10 வயதும், மகளுக்கு, ஏழு வயதாக இருந்தபோது, குடும்ப பொருளாதார பற்றாக்குறையை போக்க, வெளிநாட்டு வேலைக்கு சென்றார், கணவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இரண்டு மாத விடுமுறையில் இந்தியா வந்து செல்வார். வாரம் ஒருமுறை போனில் எங்களோடு பேசுவார். மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை, என் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுவார். அதை வைத்து, குடும்ப செலவு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவுகளை பார்த்துக் கொள்வேன்.

அப்பா உடன் இல்லாத குறையை, பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, மகள். ஆனால், 'எங்களை விட, பணம் தான் அவருக்கு முக்கியமா போச்சா...' என்று, குறைபடுவான், மகன்.

'நம் எதிர்காலத்துக்கு தான் அப்பா, நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். சொந்தமாக வீடு கட்டும் வரை தான். பிறகு அவர் இங்கே வந்து விடுவார்...' என்று, எவ்வளவோ சமாதானப்படுத்தியும், அவனது கோபம் தணியவே இல்லை.

இருபது ஆண்டுகள் பணிபுரிந்து, இப்போது நிரந்தரமாக இந்தியா வந்து விட்டார், கணவர். பையனும் படித்து முடித்து, வேலைக்கு செல்கிறான். அப்பா இல்லாத நேரத்தில், எங்களை பொறுப்பாக கவனித்துக் கொண்டான். ஆனால், அவனுக்கும், அப்பாவுக்குமான இடைவெளி அதிகமாகி விட்டது. எதற்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டிதான். தன் கட்டுப்பாட்டில் இருந்த குடும்ப நிர்வாகத்தை, இப்போது அப்பாவிடம் தர மறுக்கிறான்.

எந்த முடிவையும், அப்பாவை எடுக்க விடுவதில்லை. இதுதான் சமைக்கணும் என்பதிலிருந்து, இந்த, 'டிவி' சேனல் தான் பார்க்கணும் என்பது வரை, தன் வசம் இருக்க வேண்டும் என்கிறான், மகன்.

இவர்கள் இருவரையும் சமாளிப்பதே, பெரும் பிரச்னையாக உள்ளது, எனக்கு.

இந்நிலையில், ஒரு பையனை காதலிக்கிறாள், மகள். அந்த பையன், எங்களின் துாரத்து சொந்தம் தான். படிப்பு, வேலை, குடும்ப பின்னணி அனைத்திலும் சிறப்பானவன்.

இதை வீட்டில் சொன்னால், அப்பாவுக்கும், மகனுக்கும் உள்ள, 'ஈகோ' பிரச்னையால், ஒருவர் ஒப்புக் கொண்டாலும், இன்னொருவர் எதிர்ப்பர். இதனால், மகளின் வாழ்வு கேள்விக்குறியாகி விடுமோ என்று அச்சப்படுகிறேன்.

பிரச்னை தீர, நல்ல ஆலோசனை கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

— இப்படிக்கு,

உங்கள் சகோதரி.



அன்பு சகோதரிக்கு —

இருபது ஆண்டுகள், தாம்பத்யத்தை தொலைத்து, குடும்பத்துக்காக உழைத்த, கணவரின் ஆன்ம ஓலம், உன் மகனுக்கு ஒரு நாளும் கேட்காது.

குடும்பத் தலைவன் பதவியிலிருந்து, உன் கணவரை நிரந்தரமாக நீக்கிவிட்டு, தான் அந்த பதவியில் இருந்து, குடும்பத்தின் முக்கிய முடிவுகளை எடுக்க விரும்புகிறான், மகன்.

'தந்தை வெறுப்பு' என்ற ஒற்றை, 'நெகடிவ்' அம்சத்தை தவிர்த்து விட்டு பார்த்தால், குடும்பத் தலைவனாக இயங்க தகுதியானவனே, மகன்.

ஆண் துணை இல்லாத வீட்டில், தாயையும், தங்கையையும் பாதுகாத்து, தானும் படித்து, நல்ல வேலைக்கும் போயிருக்கிறான். அவனது கோணத்தில், உன் கணவர், உள்ளூரில் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வக்கில்லாதவர். உறவுகளும், நட்புகளும் பேசிய ஆயிரம் புறணிகள், மகனை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்திருக்கும்.

அடுத்து நீயும், கணவரும் செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* உன் கணவரிடம் மனம் விட்டு பேசு. '20 ஆண்டு இளமையை, கனவுகளை கருக்கி குடும்பத்துக்காக உழைத்தீர்கள். அது ஒரு தியாகம். மகனுக்கு குடும்பத்தலைவன் பதவியை விட்டுக் கொடுத்து, இன்னொரு தியாகத்தையும் செய்து விடுங்கள். குடும்ப வாகனத்தை நம் மகன் ஓட்டட்டும். நாம், 'ஹாயாய்' பின்னிருக்கையில் அமர்ந்து அவனுடன் சேர்ந்து பாதுகாப்பாய் பயணிப்போம்...' எனக்கூறு

* உன் மகனுக்கு திருமணமாகி, குழந்தை பெற்று, பொருளாதார சுனாமியில் துாக்கி எறியப்படும்போது, உன் கணவரின் நியாயங்கள் அவனுக்கு முழுமையாக புரிபடும்

* மகளின் காதலை, உன் மகனின் மேஜையில் பரிசீலனைக்கு வைத்து விடு. உன் மகள் கெட்டிக்காரியாக இருந்தால், அண்ணனிடம் நைச்சியமாக பேசி, தன் காதலில் வெற்றி பெறுவாள். 'உன் புருஷன், தங்கச்சி காதலை பற்றி என்னம்மா சொல்கிறார்...' என கேட்பான், மகன். 'அவருக்கு உன் தங்கச்சி காதலில் துளியும் உடன்பாடில்லை...' எனக் கூறு. அதுபோதும் உன் கணவருக்கு எதிர் நிலை எடுத்து, தங்கையின் காதலை நிறைவேற்றி தருவான், மகன்.

* உன் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால், எதாவது ஒரு வேலைக்கு போகச் சொல். சோம்பி தனிமையில் கிடக்கும் மனதில்தான், 'ஈகோ' தலைவிரித்தாடும்

* நீயும், மகளும் உன் கணவர் பக்கமோ, மகன் பக்கமோ சார்புநிலை எடுக்காதீர்கள். குடும்ப நலன் பக்கம் சார்புநிலை எடுங்கள்.

என்ன முட்டல் மோதல் இருந்தாலும் கிழவனுக்கும், இளந்தாரிக்கும் இடையே ஆழ்மன பாசம் பீறிடதான் செய்யும். யார் கண்டது, உன் மகளின் கல்யாணத்தில் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டாலும், ஆச்சரியபடுவதற்கில்லை.

இனி எல்லாம் சுகமே சகோதரி!

— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us