PUBLISHED ON : ஜன 18, 2015

மீண்டும் மருதநாயகம்!
கமலின் கனவுப்படமான, மருதநாயகம், கடந்த, 1997ல் துவங்கப்பட்டது. அப்படத்தின் பூஜைக்கு, இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சென்னைக்கு அழைத்து வந்து, பிரமாண்டப்படுத்தினார் கமல். அதையடுத்து, படப்பிடிப்பும் பரபரப்பாக துவங்கியது. ஆனால், சில மாதங்களிலேயே, பைனான்ஸ் பிரச்னை காரணமாக, படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, 'என் கனவு படமான, மருதநாயகத்தை மீண்டும் தூசுதட்டும் வேலைகள் விரைவில் துவங்கும்...' என்று சூசகமாக அறிவித்திருக்கிறார் கமல். காரணம், லண்டனைச் சேர்ந்த கமலின் நண்பர் ஒருவர், மருதநாயகம் படத்தை தயாரிக்க இருக்கிறார். அதனால், கமலின் கனவு, இம்முறை கண்டிப்பாக நனவாகி விடும் என்கின்றனர்.
-சினிமா பொன்னையா
நடிகைகளை எரிச்சல் படுத்தும் நயன்தாரா!
செகண்ட் இன்னிங்சில் நயன்தாராவுக்கென்று எந்த படமும் ஓடவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அவர் நடித்த, அனாமிகா படம் தோல்வி அடைந்த போதும் கூட, அவருக்கு கைநிறைய படங்கள் இருப்பதோடு, இப்போதும், ஒன்னே கால் முதல், ஒன்றரை கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அதிலும், சில இளவட்ட கதாநாயகர்களும், அவருக்கு சிபாரிசு செய்து வருகின்றனர். இதை அறிந்த காஜல் அகர்வால் மற்றும் சமந்தா அதிர்ச்சியடைந்துள்ளனர். 'நாமளும் நயன்தாரா மாதிரி தான் நடிக்கிறோம்; அவரை விட இளமையாக இருந்தபோதும், அவருக்கு இருக்கிற மார்க்கெட் நமக்கு இல்லையே...' என்று புலம்பும் இவர்கள், நடிகர்கள் யாராவது நயன்தாராவின் பர்பாமென்ஸ் மற்றும் அழகு குறித்து பெருமையடித்தால், எரிச்சலடைந்து, அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விடுகின்றனர்.
—எலீசா
லட்சுமி மேனனுக்கு போட்டியாக ப்ரணிதா!
சகுனி மற்றும் உதயன் படங்களில் நடித்த ப்ரணிதா, பின், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களுக்கு சென்று விட்டவர், தற்போது, மாஸ் படம் மூலம் கோலிவுட்டில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவே முதன்மை நாயகி என்ற போதும், அப்பட இயக்குனர் வெங்கட்பிரபுவின் கருணையால், இப்போது ப்ரணிதாவின் வேடமும் பெரிதாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் நடித்துக் கொண்டே, புதிய படங்களில் நடிக்க கல்லெறிந்து வரும் அவரிடம், லட்சுமிமேனனின் மார்க்கெட் விழுந்து விட்டதால், அந்த இடத்தை பிடிக்குமாறு சிலர் ஐடியா கொடுத்துள்ளனர். அதனால், இதுவரை கோலிவுட் வீதிகளில் கவர்ச்சிகரமாக உலா வந்தவர், தற்போது லட்சுமிமேனன் பாணியில் புடவை காஸ்டியூமில் வளைய வரத் துவங்கியுள்ளார்.எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேணும்!
— எலீசா
மீண்டும் வருகிறார் ஆனந்தராஜ்!
தமிழ் சினிமாவில் மெகா வில்லனாக இருந்த ஆனந்தராஜின் மார்க்கெட், சூர்ய வம்சம் படத்திற்கு பின் சரிந்தது. அதனால், அவ்வப்போது சில படங்களில், சிறிய வேடங்களில் முகம் காட்டி வந்தவரை, இந்தியில், தான் இயக்கிய, ஆக்சன் ஜாக்சன் என்ற படத்தில் வில்லனாக்கினார் பிரபுதேவா. அப்படம் வெற்றி அடைந்தால், பாலிவுட்டின் முன்னணி வில்லனாகி விடுவோம் என்று நினைத்திருந்தார் ஆனந்தராஜ். ஆனால், அப்படம் தோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில், அவரே எதிர்பார்க்காத வகையில், விஜயசேதுபதி நடிக்கும், நானும் ரவுடிதான் படத்தில் அவருக்கு வில்லன் வேடம் கிடைத்துள்ளது. இதனால், தன் ஆரம்ப காலத்தில் கதாநாயகர்களுடன் அதிரடியாக மோதியது போன்று, இப்படத்திலும் அதிரடி சண்டை காட்சியில் நடிக்கிறார். மேலும், இப்படத்துக்காக தன் உடல் எடையையும் குறைத்துள்ளார்.
— சினிமா பொன்னையா.
கறுப்பு பூனை!
கப்பல் படத்தில் நடித்த அந்த இந்தி நடிகை, முதல் படத்திலேயே, கோலிவுட் இயக்குனர்களை சுண்டியிழுக்கும் நடிப்பை வெளிப்படுத்தியதால், சிலர், அவரை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், நடிகைக்கோ, அடுத்தபடியாக பிரபல கதாநாயகர்களுடன், 'டூயட்' பாட வேண்டும என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், கோலிவுட் பிரபலங்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களுடன் ரகசிய, 'மீட்டிங்' போடும் நடிகை, விரைவில், பாலிவுட் பாணியில் ஒரு மெகா பார்ட்டி வைத்தும் அசத்தப் போகிறார்.
தற்போது, தெலுங்கில் நடித்து வரும் அஞ்சான் நடிகை சில படங்களில், படு ஆபாசமாக நடித்துள்ளார். அதனால், இதுவரை ஒரு கோடி ரூபாய் கொடுக்கவே தயங்கி நின்ற பட அதிபர்கள், இப்போது அவர் கேட்காமலேயே கோடிகளை சொல்லியடிக்கின்றனர். அதனால், அம்மணியின் ஆபாச அட்டகாசம் படத்துக்குப் படம் எகிறுவதால், நடிகையின் இந்த அதிரடி பிரவேசம் கண்டு, ஆந்திராவின் அயிட்டம் நடிகைகளே ஆடிப்போயிருக்கின்றனர்.
துளிகள்:
* பிசியான நடிகையாகி விட்டபோதும், சென்னை பல்லாவரத்தில், தான் படித்த பள்ளிக்கு, நேரம் கிடைக்கும் போது, 'விசிட்' அடித்து, ஆசிரியைகளை சந்தித்து நலம் விசாரிக்கிறார் சமந்தா.
* கப்பல் படத்தில் நடித்த சோனம் பாஜ்வா, அனுஷ்கா போன்று நல்ல உயரம். அதனால், தன்னைப் போன்று உயரமான நடிகர்களுடன் நடிக்கவே ஆசைப்படுகிறார்.
* கன்னடத்தில் வெளியான, லூசியா படத்தில் நடித்த தீபா சன்னதி, எனக்குள் ஒருவன் மற்றும் யட்சன் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
* ஐ படத்தையடுத்து விக்ரம் நடித்து வரும், பத்து எண்றதுக்குள்ள படம், மே மாதம் திரைக்கு வருகிறது.
அவ்ளோதான்!
