தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நோய்களும், மருந்துகளும்' நூலிலிருந்து: ஊரெங்கும், 'டெங்கு' காய்ச்சல் பீதி உள்ளது. இத்தகைய காய்ச்சலைப் பரப்புவது கொசு. இந்த கொசுத் தொல்லை, சில பசிபிக் தீவுகளைத் தவிர, உலகெங்கிலும் நீக்கமற பரவி உள்ளது.

மனிதனுக்கு முன் தோன்றியது, கொசு. மலேரியா, யானைக்கால் மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்குக் காரணம் கொசு. பெண் கொசு ஒருவருடைய ரத்தத்தை உறிஞ்சி குடித்தபின், இன்னொருவரைக் கடிக்கும்போது, முதல் நபரிடம் உள்ள கிருமிகள் அடுத்தவரின் ரத்தத்தில் கலந்து விடுகிறது. இதுவே, நோய் பரவுவதற்கு காரணம்.

மலேரியா நோய் பரவக் காரணமான ஒரு வகை கொசு, 'பிளாஸ்மோடியம்' எனும் நுண்ணிய கிருமியை தன்னுடன் எடுத்துச் சென்று, மனிதனின் ரத்தத்தில் விடுகிறது. அந்தக் கிருமி ரத்தத்தில் இனப்பெருக்கம் செய்யும்போது, மலேரியா பாதிப்பு ஏற்படுகிறது.

சரித்திரத்தில் கிரேக்க, பாபி லோனிய நாகரிகங்கள் அழிந்ததற்கு காரணம் மலேரியா என்றே சொல்லப்படுகிறது. மலேரியா என்ற சொல்லுக்கு, 'கெட்ட காற்று' என்று பொருள்.

கொசுக்கள் மனிதனை மட்டும் கடிப்பதில்லை. வளர்ப்பு மிருகங்கள், காட்டு விலங்குகள், கால்நடைகள் மற்றும் பறவைகள் என, எதையும் அவை விட்டு வைப்பதில்லை.

கொசுக்கள் பறக்கும் போது கூட, உறவு கொள்வதுண்டு. பெண் கொசுவுக்கு ஒரு தடவை உறவு கொள்வதே, பல முறை இன விருத்தி செய்யப் போதுமானது.

பெண் கொசு ஒரு முறை உறவு கொண்ட தும், முதல் வேலையாக ரத்தம் குடித்து, ஈரப்பத மான இடத்தில் முட்டை (அதிகபட்சம், 500 முட்டைகள்) இடுகின்றன. 24 மணி நேரத்தில் முட்டையிலிருந்து வரும் குஞ்சு, பெரிய கொசுவாகி விடுகிறது.

முருக. தனுஷ்கோடி எழுதிய, 'காமராஜ் ஒரு சரித்திரம்' நூலிலிருந்து: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ராமதாஸ், பல முறை காமராஜரிடம் அடி வாங்கியிருக்கிறார். தேர்தல் நேரங்களில் ஒரு கூட்டம் முடிந்து, இன்னொரு கூட்டத்துக்குச் செல்லும்போது, காரின் முன் சீட்டில், டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்து, வழி காட்டிக் கொண்டே போவார் ராமதாஸ்.

திடீரென காமராஜர், 'பொத் பொத்'தென்று ராமதாசின் முதுகில் நாலு அடி போட்டு, 'இவ்வளவு குறுகிய வழியிலா கூட்டிச் செல்வாங்க... அந்தப் பக்கமாகப் போனால், எந்த தடங்கலுமின்றிப் போகலாம்ல்ல...' என்று கோபமாக கூறுவார். நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்ததும், அவரைக் கூப்பிட்டு, 'நாளை, 6:00 மணிக்கு மேல் புறப்படலாம்...' என்று கூறி, வீட்டுக்குத் திரும்புவார்.

காமராஜரின் கார் மறைந்ததும், ராமதாசின் நண்பர்கள் அவரிடம், 'என்ன... இன்னக்கி அடி பலமோ?' என்று கேட்பர்.

மறுநாள், காமராஜர் வீட்டுக்குச் சென்று, அவரை நிகழ்ச்சிக்கு அழைக்கப் போவார் ராமதாஸ். 'என்னமோ, நேத்து அடிச்சுட்டேன் இல்ல; இன்னக்கி அடி கிடைக்காம பாத்துகோ...' என்றவாறு காரில் ஏறிப் பொதுக்கூட்டங்களுக்கு கிளம்புவார். தலைவரிடம் பட்ட அடியை, ராமதாஸ் பெருமையாக எண்ணினார். அது தான், பின்னாளில் அவரை ஒரு பொறுப்புள்ள பதவிக்கு உயர்த்தியது.

'சாமி நாயக்கர் வரலாறு' என்ற நூலிலிருந்து: இந்தியாவில், முதல் உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) சென்னையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்தவர், ராபர்ட் கிளைவ்!

சென்னையில், 1723ம் ஆண்டு முதல், 'மாநகரத் தலைமை நீதிமன்றம்' (மேயர்கோர்ட்) என்ற பெயரில் இருந்ததைத் தான், செப்., 4, 1801ல் ஒரு தலைமை நீதிபதி மற்றும் இரண்டு துணை நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றமாக ஆக்கினார் கிளைவ்.

மேயர் கோர்ட்டில், மாநகரத் தலைவர் (மேயர்) மற்றும் பத்து உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள், சிவப்பு அங்கியை அணிந்து, குற்றவியல் வழக்குகளை விசாரித்தனர்.

இதுவே பின்னாளில், உச்ச நீதிமன்றமாக வளர்ச்சி அடைந்து, பின், சென்னை உயர் நீதிமன்றமானது. இப்போதுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 1892ல் இந்திய - இஸ்லாமிய கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்டது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us