PUBLISHED ON : ஜன 18, 2015

மறக்க முடியாத அந்த நாளை!
அந்த நாள்...
ஒரு முறைதான் வரும் நாள்
அதை மறக்க முடிகிறதா
இன்று வரை!
படபடப்பைக் கூட்டி
பசிமயக்கம் ஓட்டி
பயணத்தில் வேகம் சேர்த்து
தூக்கத்தை மறக்க வைத்த
துடிப்பான நாள், அந்த நாள்!
கண்ணிலே கனிவும்
காரியத்தில் குழைவும்
நெஞ்சில் எதிர்பார்ப்பும்
நெருங்க நெருங்க சுகமும்
நிறைத்த நாள், அந்த நாள்!
ஆழ்மனத் தேவைகளும்
அடிமனத்து ஆசைகளும்
மெல்ல மெல்ல மேல்வந்து
மிடறு சுட்ட நாள், அந்த நாள்!
கைப்பையைக் கணக்கின்றி
திறந்து திறந்து மூடியதில்
கைவலித்துப் போன போதும்
கனத்த மனவலிக்கு முன்
கைவலி லேசாக...
கருதிய நாள், அந்த நாள்!
காகிதத்தில் மடித்து வைத்த
கையளவு பவுடர்
கன்னத்தில் போட்டு,
கண்ணாடி பார்த்து ரசித்த நாள், அந்த நாள்!
சொந்த கனவுகளையே
சுமக்க முடியாத வேதனையில்
சொந்தங்களின் எதிர்பார்ப்பையும்
சேர்த்தே சுமந்த நாள், அந்த நாள்!
முழம்பூவும், இனிப்பும்
தவிப்பை மறைத்தபடி
தப்பாமல் வீடு சேர்க்கும்
தங்கமான நாள், அந்த நாள்!
அந்த நாளின் ஆனந்தம்
விடிவதற்குள் விலகிவிட
மீண்டும் சோகத்தை
மீட்டெடுக்கும் நம்வாழ்க்கை!
ஒற்றைநாள் மட்டும்
தவணையில் மகிழ்ச்சி தந்து
தலைமறையும் அந்த நாள்
எந்த நாள்!
அந்த நாள் நம் அனைவருக்கும்
அறிமுகமான நாள்தான்!
சராசரி குடும்பங்களில்
சந்தோஷம் நிறைகிற
சம்பள நாள் என்னும் முதல் தேதி...
அந்த நாளை மறக்க முடியுமா?
— சிவ.சூர்யா, கல்பாக்கம்.
