தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக.... (24)

உயிரே உனக்காக.... (24)

உயிரே உனக்காக.... (24)


PUBLISHED ON : மே 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: கவிதாவை சந்தித்து, ஆறுதல் கூறி, வீடு திரும்பிய நரேனுக்கு, ஆச்சரியம் காத்திருந் தது. அங்கு, கவிதாவின் குழந்தை இருப்பதை அறிந்து, சந்தோஷமும், குழப்பமும் அடைந்தான். உடனே, கவிதாவுக்கு போன் செய்து, குழந்தை, அவன் வீட்டில் இருப்பதாகத் தெரிவித்தான். மறுநாள் காலை, கவிதா வந்தால், குழந்தையை ஒப்படைத்து விடும் படி ஜெசிகாவிடம் கூறிவிட்டு, ஆஸ்திரேலியாவிருந்து வரும் மதுரிமாவை அழைத்து வர விமான நிலையத்துக்கு சென் றான் நரேன். அவன் திரும்பி வரும்வரை, கவிதாவின் குழந்தை அவன் வீட்டிலேயே இருந்தது. வீட்டில் அக்குழந்தையை பார்த்ததும், மதுரிமாவிற்குள் பலவித எண்ணங்கள் தோன்றின —

'ஜெசிகா... உன்னைத்தான் கேட்கிறேன்... இந்த குழந்தை யாருடையது?' என்று மதுரிமா கேட்டபோதிலும், அக்கேள்வி தன்னை நோக்கி கேட்பதைப் போலவே உணர்ந்தான் நரேன்.

''இதில், இத்தனை யோசிப்பதற்கு என்ன இருக்கிறது ஜெசிகா?''

''அதுக்கில்ல மேடம்... இந்தக் குழந்தை யாருடையது என்று எனக்குத் தெரியாது.''

ஜெசிகா பொய் சொன்ன போதிலும், அவளது பதில் மூலம், அவள், தன்னை காட்டிக் கொடுக்கவில்லை என்ற தற்காலிக நிம்மதி நரேனுக்கு ஏற்பட்டது.

''உனக்குத் தெரியாது என்றால்... இவருக்குத் தெரியும் என்று அர்த்தமா?'' நரேனை விரலால் சுட்டியபடி கேட்டாள் மதுரிமா.

''மது... என்ன கேள்வி இது. ஜெசிகாவிற்கு தெரியாமல், எனக்கும் தெரியாமல் இந்தக் குழந்தை எப்படி நம் வீட்டிற்குள் வர முடியும்?''

''ஸோ... இந்த குழந்தை நம் வீட்டிற்கு வந்திருக்கும் விஷயம் உங்கள் சம்பந்தப்பட்ட ஒன்று... அப்படித்தானே?''

மதுரிமாவின் கேள்விக்கான பதில் என்ன என்பது அவன் உள் மனதில் அடுத்த சில விநாடிகளில் தயாராகி விட்டது.

''ஆமாம் மது... இந்தக் குழந்தை நம் வீட்டிற்குள் வந்திருப்பது முழுக்க, முழுக்க நான் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.''

நரேனின் பதில் அழுத்தமாக வெளி வந்தது.

''ஓ.கே., பிரச்னை குழந்தை என்பதால், இது நீங்கள் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்க முடியாது.''

''நீ சொல்வதற்கு என்ன அர்த்தம்?''

''ரொம்பவும் சிம்பிள்... உங்களோடு சேர்த்து வேறு ஒருவரும் சம்பந்தப்பட்ட விஷயம் இது என்று அர்த்தம்.''

''அந்த வேறு ஒருவர் யார் என்று நீ நினைக்கிறாய்?''

''கவிதா!''

''எப்படி அத்தனை உறுதியாய் சொல்கிறாய்?''

''உண்மையை மறைக்க முயற்சிக்கலாம்; ஆனால், உண்மையை என்றைக்கும் யாராலும் அழித்துவிட முடியாது. உண்மைகள் நிச்சயம் ஒரு நாளில் வெளிவந்தே தீரும். உண்மை என்னவென்று எனக்குத் தெரிந்து விட்டது.''

''என்ன பெரிசாய் தெரிந்து கொண்டாய்?''

''நான் ஏன், என் ஆஸ்திரேலியப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்பினேன் என்று தெரியுமா?''

''நிச்சயம் என்னைப் பார்க்க வேண்டும் என்ற அன்பின் காரணமாகவோ, ஆசையின் காரணமாகவோ இல்லை என்பது மட்டும் தெரியும்.''

நரேனிடமிருந்து இப்படி ஒரு பதிலை மதுரிமா கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. இதைக் கேட்டு, பதறிப் போனாள் மதுரிமாவின் தாய்.

''நரேன்... நீ என்னப்பா சொல்ற... உம்மேல அன்போ, ஆசையோ இல்லாமத்தான் மது உன்னை கல்யாணம் செய்துகிட்டாளா?''

''அத்தை... நான் அப்படி சொல்லவில்லை. நான் சொன்ன காரணம் மதுரிமா ஆஸ்திரேலியா விலிருந்து, அமெரிக்காவிற்கு அவசரமாக திரும்பியதைப் பற்றி மட்டுமே.''

''இல்ல நரேன்... இது நீ இப்போ சொல்ற சமாதானம். இந்த அர்த்தத்துல நீ அதை சொல்லலே. வேறு எதையோ சொல்லி மதுவை காயப்படுத்திட்டு, இப்ப மாத்தி சொல்லி, சமாளிக்கப் பாக்குற!''

'இந்தியர்கள், ஆண் - பெண் விஷயத்தில் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் பெரிய முக்கியத்துவத்தைத் தாமாகக் கற்பித்துக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் நரகமாக்கிக் கொள்கின்றனர்...' என்ற நினைவில், அவர்கள் சம்பாஷணையை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் ஜெசிகா.

''ஜெசி... இது, எங்களோட பர்சனல் விஷயம். உள்ள போய், உன் வேலையைப் பாரு...''

அங்கிருந்து அகன்று, சமையல் கட்டிற்குப் போனாள் ஜெசிகா.

''மது... எதுக்காக உன் கோபத்தை ஜெசி மேல காட்டுற... என்ன கோபம் இருந்தாலும் அத நீ எங்கிட்டேயே காட்டலாம்.''

''ஜெசி மட்டுமல்ல... எம் பொண்ணு மதுவும் பாவம்தான் நரேன். மத்த பெண்களுக்காக இத்தனை இரக்கப்படற நீ, மதுவும் ஒரு பொண்ணுதான் என்பதை முதலில் நினை. மது பொண்ணு மட்டுமல்ல; உன்னோட மனைவியும் கூட.''

மகளுக்காக பரிதாபப்படும் சாக்கில், மருமகனைக் கேவலப்படுத்திப் பார்க்கும் மாமியாரைப் போல், மதுரிமாவின் தாய் பேசிய விதம், நரேனை கோபப்படுத்தியது. மிகவும் சிரமப்பட்டு, அவனது கோபத்தைக் கட்டுப்படுத்தி, எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

தான் கிளப்பிய பொறியைத் தன் தாய் ஊதிப் பெரிதாக்குவதையும், அதன் அனல் நரேனை சுடுவதையும் உணர்ந்த மது, ''அம்மா... நீ எதுவும் கேட்காதே... இது நானும், அவரும் சம்பந்தப்பட்ட விஷயம்.''

''தன் பெண்ணை பாதிக்கிற விஷயத்தை எந்தத் தாயாலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.''

''இப்போது பாதிக்கப்பட்டுவிட்டதாக நான் உன்னிடம் சொன்னேனா?''

''என் கண்களின் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை, எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை மது.''

அதற்கு மேலும் நரேனால் பொறுமையாக இருக்க முடியாமல், ''இப்போது என்ன நிகழ்ந்து விட்டது அத்தை?'' என்றான்.

''நிகழ்ந்ததுதான் நம் முன்னாடி சாட்சியாக குழந்தை வடிவில் நின்று கொண்டிருக்கிறதே... இதைவிட வேறென்ன வேண்டும்?''

மதுரிமாவின் தாய் இப்படி ஒரு பதிலை சொல்வாள் என நரேன் மட்டுமல்ல, மதுவும் எதிர்பார்க்கவில்லை.

ஏதோ ஒரு திசையில் ஆரம்பித்த பிரச்னை, இப்போது அவளுக்கு முற்றிலுமான எதிர்திசையில் மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் மது.

''நரேன்... ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது தெரியுமா?''

''என்ன நடந்தது அத்தை?''

''மதுவைத் தேடி, ஆஸ்திரேலிய போலீஸ் வந்தது.''

நரேன் கொஞ்சமும் எதிர்பார்க்காத இந்த பதில், அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

''மதுவைத் தேடி போலீஸ் வந்ததா... எதற்கு?''

''வேறு எதற்கு? இந்தக் குழந்தையைப் பற்றி விசாரிப்பதற்குத்தான்.''

''இந்தக் குழந்தையைப் பற்றி எதற்காக மதுவிடம் போலீஸ் விசாரிக்க வேண்டும்?''

''போலீஸ் என்னை விசாரித்தது இருக்கட்டும்... போலீஸ் உங்களை விசாரித்ததா நரேன்?''

''ஆமாம்... விசாரித்தனர்; அது, உனக்கு எப்படித் தெரியும்?''

''ஆஸ்திரேலிய போலீஸ்தான் சொன்னது. காணாமல் போன கவிதாவின் குழந்தை என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வந்ததாக கூறினர். இந்தக் குழந்தை எப்படி இங்கே வந்தது?''

''நிச்சயமாய் எனக்கு தெரியாது மது. நான் ஆபீஸ் முடிந்து, வீட்டுக்கு திரும்பி வந்தபோது, இந்தக் குழந்தை நம் வீட்டில் இருந்தது. நீ கேட்ட இதே கேள்வியை நான் ஜெசிகாவிடம் கேட்டேன்; அவளுக்கும் தெரியவில்லை.''

''நீங்கள் சொல்ற விஷயம் நம்புகிற மாதிரியா இருக்கிறது?''

''சரி... குழந்தை நம் வீட்டிலிருக்கும் விஷயத்தை கவிதாவிடம் சொன்னீர்களா?''

''சொன்னேன்... கவிதாவிற்கும் இந்த விஷயம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.''

''கவிதா, இந்தக் குழந்தையின் தாய்தானே... அவள் ஏன் வந்து இந்தக் குழந்தையை இன்னமும் எடுத்துச் செல்லவில்லை?''

''அதுதான் எனக்கும் தெரியவில்லை.''

''ஆனால், எனக்குத் தெரியும் மிஸ்டர் நரேன்.''

குரல் வந்த திசையில் இருவரின் பார்வையும் திரும்ப,வாசலில் நின்று கொண்டிருந்தான் கவிதாவின் முன்னாள் கணவன் ஆண்டர்சன்.

கவிதாவின் குழந்தை இங்கே எப்படி வந்தது என்பது தனக்கு தெரியும் என்றபடி நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் இவன் யார் எனத் தெரியாதவளாய், அவனை உற்றுப் பார்த்தாள் மதுரிமா.

'இருக்கிற பிரச்னைகள் போதாதென்று இன்னும் ஒரு பிரச்னையாக இவன் எதற்காக இந்த நேரத்தில் இங்கே வந்து நிற்கிறான்...' என்று யோசித்தான் நரேன்.

''நரேன்... யார் இந்த மனிதர்?''

''கவிதாவின் முன்னாள் கணவர்... மிஸ்டர் ஆண்டர்சன்.''

'இவன் கவிதாவின் கணவனா?' பார்வையாலேயே அவனை அளந்தாள் மதுரிமா.

'பார்வைக்கு நன்றாகத்தானே தெரிகிறான்... இவன் எதனால் கவிதாவின் முன்னாள் கணவனாக மாறிப் போனான்? வெளித் தோற்றத்திற்கும், உள் மனதுக்கும் உள்ள தொடர்புகள் வேறுபட்டவையோ!'

''சொல்லுங்கள்... உங்கள் குழந்தை இங்கே எப்படி வந்தது?''

''அதை இங்கே கொண்டு வந்து விட்டதே நான்தான். நான் ஒரு சிகரட் பற்ற வைத்துக் கொள்ளலாமா?''

கேட்டவன், அவர்கள் பதிலுக்குக் காத்திருக்காதவனாய், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, புகையை வெளியே ஊதினான்.

''குழந்தையைக் கொண்டு வந்து விட்டது நீங்களா? எதற்காக அப்படி செய்தீர்கள் மிஸ்டர் ஆண்டர்சன்?''

நரேனின் கேள்வியில் ஆண்டர்சன் மீதான வெறுப்பும், கோபமும் வெளிப்பட்டது.

''இந்தக் குழந்தையை இங்கே கொண்டு வந்து விட்டது அத்தனை பெரிய பாவமா?''

''நீங்கள் செய்திருப்பது பாவமா, புண்ணியமா என்பதல்ல பிரச்னை. எதற்காக அப்படி செய்தீர்கள் என்பதுதான் கேள்வி.''

''நினைவூட்டியதற்கு நன்றி நரேன்... நான் எந்தக் காரியத்தையும் அதற்கான வலுவான காரணம் இன்றி செய்வதில்லை.''

''அப்படியா? தன் சொந்த மனைவியையே செக்ஸ் பற்றிய ஆய்வுக்கான பரிசோதனைப் பொருளாக மாற்ற நினைத்தீர்களே... அதையும் சேர்த்துத்தான் சொல்கிறீர்களா?''

நரேனின் கேள்வியால் சில விநாடிகள் இருண்டு இறுக்கமாகியது ஆண்டர்சனின் முகம். ஆனால், வெகு எளிதில் அவனுக்குள் ஏற்பட்ட பாதிப்பை மாற்றி, இயல்பாகச் சிரித்தான்...

''பரவாயில்லையே... கவிதாவும், நீங்களும் அதுபற்றி கூட பேசி இருக்கிறீர்களா? குட்... ஐ லைக் இட்.''

''நீங்கள் இருவரும் பேசிக் கொள்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை,'' அவர்கள் பேச்சை இடைமறித்துப் பேசினாள் மதுரிமா.

''மது... அது, உனக்கு புரியாமலும், தெரியாமலும் இருப்பதே நல்லது. தெரிந்தால் இந்த மனிதனை நீ மதிக்கவும் மாட்டாய்; மன்னிக்கவும் மாட்டாய்.''

நரேன் சொன்னதைக் கேட்டு, வாய்விட்டு சிரித்தான் ஆண்டர்சன்.

''மிஸ்டர் நரேன்... யாருடைய மதிப்பையும், மன்னிப்பையும் எதிர்பார்த்து நிச்சயமாக இங்கே வரவில்லை நான்.''

''வேறு எதை எதிர்பார்த்து வந்தீர்கள்?'' நரேனின் கோபம் குறையவில்லை.

''நரேன்... அளவுக்கு மீறிய கோபம் அழுத்தத்தை அதிகரிக்கும்; அவாய்டு இட்...''

''நன்றி... என் கேள்விக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லை.''

''அதற்குத்தானே வந்திருக்கிறேன்... இந்தக் குழந்தை உங்கள் வீட்டில்தான் இருக்கிறது என்பது கவிதாவிற்கு நன்றாகவே தெரியும்.''

''தெரியுமா? இப்படி ஒரு காரியத்தை ஒரு நல்ல பெண், அதிலும் குறிப்பாக ஒரு தாயாக இருப்பவள் செய்வாளா... சே!''

''மது, அவசரப்பட்டு எதையும் பேசி விடாதே... குழந்தை இங்கேதான் இருக்கிறது என்பதை கவிதாவிற்கு நான்தான் சொன்னேன்.''

''நரேன்... அவசரப்படுவது மது அல்ல; நீங்கள் தான். நீங்கள் சொல்வதற்கு முன்பாகவே, கவிதாவிற்கு குழந்தை இங்கே இருப்பது தெரியும்.''

''மிஸ்டர் ஆண்டர்சன்... நீங்கள் பொய் சொல்கிறீர்கள்.''

''நோ... நான் பொய் சொல்வதற்கான எந்த அவசியமும் எனக்கில்லை. நீங்கள் கவிதாவின் வீட்டில் குழந்தையைக் காணவில்லை என பேசிக் கொண்டிருந்த போதே, குழந்தை, உங்கள் வீட்டில் இருக்கும் விஷயம் கவிதாவிற்குத் தெரியும்.''

''எப்படி அத்தனை உறுதியாக சொல்கிறீர்கள்?''

''குழந்நை காணவில்லை என்று புகார் கொடுத்த பின், போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து, காபி ஷாப்புக்கு போனீங்களா? அப்போது, கவிதாவிற்கு ஒரு போன் கால் வந்திருக்குமே...குழந்தை உங்கள் வீட்டில் இருப்பதை அப்போது நான்தான் கவிதாவிடம் முதலில் சொன்னேன்.''

ஆண்டர்சன் சொல்லிய விஷயம், நரேன், மதுரிமா இருவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக் கியது. கவிதாவின் குழந்தை காணவில்லை என்றதும், நரேனின் சந்தேகம் முதலில் பதிந்தது இந்த ஆண்டர்சனின் மேல்தான். அதை, கவிதாவிடம் அவன் சொன்ன போது, அவள் ஏற்க மறுத்தது நினைவில் வந்தது.

'அவள் எதற்காக அப்படி ஒரு காரியத்தை செய்தாள்? அதன் மூலம் சாதிக்க விரும்புவது என்னவாக இருக்கும்?'

''எதற்காக இப்படி ஒரு குற்றத்தை செய்தீர்கள் ஆண்டர்சன்?''

''ஆமாம் நரேன்... இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கவிதா என்ன செய்கிறாள் என்பதை அறிந்து கொள்ளத்தான்?''

''இதில், நீங்கள் அறிந்து கொள்ள என்ன இருக்கிறது?''

''நிறையவே இருக்கிறது. காணாமல் போன தன் குழந்தை இருக்கும் இடம் தெரிந்ததும் ஒரு தாய் என்ன செய்வாள்?''

''இதென்ன கேள்வி... ஓடோடிச் சென்று குழந்தையைத் தூக்கிவாரி, அணைத்து முத்தமிட்டு, கண்ணீர் மழை பொழிவாள்.''

''உண்மையாகவா? அப்படியென்றால் கவிதா ஏன் அதை செய்யவில்லை நரேன். அவள், ஏன் குழந்தையைத் தூக்கிச் செல்ல இன்னமும் வரவில்லை?''

ஆண்டர்சன் கேட்ட அதே கேள்வியை நரேன், மதுரிமா இருவரின் உள்மனமும் கேட்கத் தொடங்கியது.

''இரண்டு பேரும் இப்படி மவுனமாக நின்றால், என் கேள்விக்கு என்ன பதில்?''

''தெரிய வில்லை... நீங்களே சொல்லுங்கள்.''

''அந்தக் குழந்தை உங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் கவிதாவின் விருப்பம். அதனால்தான், குழந்தையை எடுத்துச் செல்ல அவள் வரவில்லை.''

''இந்த வீட்டில் குழந்தை பாதுகாப்பாக இருக்கும் என்பது கவிதாவின் எண்ணமா?''

''அதுவும் ஒரு காரணம்!''

''வேறு என்ன காரணம்?''

''பாதுகாப்பைக் காட்டிலும் தன் குழந்தை தனக்குப் பிரியமான இடத்தில் இருக்கட்டும் என, கவிதா நினைப்பதுதான்.''

''கவிதாவிற்குப் பிரியமான இடம் இதுவா... என்ன சொல்கிறீர்கள்?''

''யெஸ்... நான் ஒரு மனோவியல் ஆய்வாளன். பிறர் மனதுக்குள் நிகழும் விசித்திரங்களை என்னால் உணர முடியும்.''

''கவிதாவின் மனதுக்குள் அப்படி என்ன விசித்திரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது?''

''உங்கள் கணவர் நரேன் பற்றிய எண்ணங்கள் மெல்ல, மெல்ல வியாபித்து விருட்சமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது.''

தன் அழகான கண்களை அகல விரித்து, நரேனை முறைத்துப் பார்த்தாள் மதுரிமா.

''மது... இந்த ஆள் சொல்வதை நம்பாதே. இவர் பொய் சொல்கிறார்.''

''நான் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும் நரேன்?''

''வேறு எதற்கு... கவிதாவைப் பழி வாங்கத்தான்.''

''சரி... எதற்காக கவிதாவை நான், பழி வாங்க வேண்டும்?''

''உங்கள் விருப்பத்தை ஏற்க மறுத்து, கவிதா உங்களை விவாகரத்து செய்து விட்டாள். அந்த அவமானமும், ஆத்திரமும் உங்களை கவிதாவிற்கு எதிராகத் திருப்பி இருக்கிறது. அதற்கு எங்களைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீர்கள்... கவிதா நல்ல பெண்.''

நரேன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான் ஆண்டர்சன். அவனது சிரிப்பு நரேனை ஆத்திரமூட்டியது.

''தயவு செய்து இங்கிருந்து போய் விடுங்கள்... என் முன் நிற்காதீர்கள்.''

''கோபப்படாதீர்கள் நரேன்... எதை வைத்து கவிதாவை நல்ல பெண் என்று சொன்னீர்கள்? இன்னொரு பெண்ணின் கணவராகிய நீங்கள், இன்னொருவனின் மனைவியை நல்ல பெண் என்று எதன் மூலமாகத் தெரிந்து கொண்டீர்கள்? நீங்கள் என்ன செய்தீர்கள்? அதற்கு கவிதா என்ன செய்தாள்? உங்களால் சொல்ல முடியுமா?''

'நல்ல நட்பை கொச்சைப் படுத்தும், கேவலமான கேள்வியை இவனால் எப்படி இத்தனை சாதாரணமாக கேட்க முடிகிறது? இவனை அப்படியே கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும்...' என்று நரேனுக்கு தோன்றியது.

கவிதா அவனைத் தேடிவந்து, அவளது தனிமையைச் சொல்லி அழுத போது கூட, முதலில் அவளைத் தவறாகத்தான் நினைத்தான் நரேன். ஆனால், தான் தவறான எண்ணங்கள் கொண்ட மிகச் சாதாரணமான பெண் அல்ல என்பதை, கவிதா எத்தனை நாசூக்காகவும், எளிதாகவும் அவனுக்குப் புரிய வைத்தாள்; அவளைப் போய்...

''என்ன நரேன்... பதிலையே காணோம்... பதில் இல்லையா, சொல்ல சங்கடமாக இருக்கிறதா?''

''முட்டாள்தனமான கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்வதில்லை.''

அதுவரையில் அவர்கள் கவிதா பற்றி பேசுவதை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த மதுரிமா, நரேனைப் பார்த்து, ''நான் கேட்கிறேன். சொல்லுங்கள்... கவிதா நல்ல பெண் என்பதை, எதை வைத்து நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்? உங்களுக்குள் அப்படி என்ன நடந்தது நரேன்?''

மதுரிமாவின் கேள்வியில், உறைந்து போய் நின்றான் நரேன்.

— தொடரும்.

-தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us