PUBLISHED ON : மே 22, 2011

கடந்த, 1906ம் வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும். அவரும், நானும் கல்கத்தா காங்கிரசுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரசுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி; நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால், சாதாரண விஷயம் அல்ல. சூரத் காங்கிரசில் நாற்காலிகள் வீசி எறியப்பட்டன; செருப்புகளும் பறந்தன. ஆனால், இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்த போது, பாரதியார் தூரத்தில் போய் ஜி.ஏ.நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞர் என்பதால், அப்படிச் செய்தார். கவிஞர்கள் சாதாரண மனிதர்களைப் போல் இறங்கி விட்டால், அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.
அந்தக் காலத்தில் பாரதியாரைப் போற்றும் விஷயத்தில் ஜாதியை யாரும் கவனிக்கவில்லை. உண்மையில் அவர் என்ன ஜாதி என்பது கூட, அநேகருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. நானும், என் நண்பர் ஒருவரும் ஒரு சமயம் புதுச்சேரிக்குப் போய் பாரதியாரைப் பார்த்தோம். அப்போது, எங்களுக்குள், 'பாரதியார் என்ன ஜாதி?' என்ற கேள்வி எழுந்தது. பாரதியார் மேல் பூணூல் இல்லையாதலால் விவாதத்தை எங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே, பாரதியாரையே கேட்டு விடுவது என்று தீர்மானித்து, கேட்டோம். அவர் பிராமணர் என்று அறிந்ததும், 'பூணூல் எங்கே?' என்று கேட்டோம். 'அது எங்கே போயிற்றோ? யார் கண்டது?' என்றார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நம் நாட்டில் எப்போதுமே கவிஞர்களைப் போற்றும் விஷயத்தில், ஜாதி குறுக்கிட்டது கிடையாது என்பதற்காகத்தான்!
— 'பாரதியாரும், நானும்' கட்டுரையில் ராஜாஜி.
முகவை மாவட்டம், சொக்கநாதன் புத்தூரில் மதிய உணவு, ஓய்வு, இரவு பொதுக் கூட்டம். எல்லாம் முடிந்து, விடியற்காலை நெருங்கும் நேரத்தில், மதுரையைத் தாண்டிக் கொண்டிருக்கிறது ஈ.வெ.ரா.,வின் வேன்.
முனகல்களுடன் எழுந்து உட்கார்ந்த அய்யாவைப் பார்த்து, உறங்கிக் கொண்டிருந்த மற்ற தோழர்களும் எழுந்தனர். வண்டியை வழியிலேயே நிறுத்தி, ஈ.வெ.ரா., மலம் கழிப்பதற்காக, 'கமோட்' வைத்து, பின் எல்லாம் முடிந்து வண்டியில் ஏறிய ஈ.வெ.ரா., 'இதோடு நான்கு முறை வயிற்றுப்போக்கு...' என்றார். அந்த சிரமத்திலும், 'ஏம்பா... மீசைக்காரருக்கும், (கூட்டம் ஏற்பாடு செய்து சாப்பாடு போட்டவர்!) நமக்கும் என்னப்பா தகராறு?' என்றார் வேடிக்கையாக.
சரியாக சுத்தம் செய்யப்படாமல், வேகாமல், அதிக காரமாய் செய்யப்பட்ட மீன் குழம்பால், ஈ.வெ.ரா.,வுக்கு வயிற்றுப்போக்கு; அதை தான் வேடிக்கையாகச் சொன்னார். ஆனாலும், உணவளித்த சொக்கநாதன் புத்தூர்க்காரர். 'அய்யா... சாப்பாடு எப்படி?' என அவர் கேட்ட போது, 'அருமையான சாப்பாடு, அருமையான சாப்பாடு...' என, ஈ.வெ.ரா., புகழவே, மீசைக்காரர் பூரித்துப் போனார்.
வேனிலிருந்த இமயவரம்பன், அய்யாவிடம் சத்தம் போட்டார்... 'வயிற்றைக் கெடுத்து கொள்வதும் இல்லாமல், 'அருமையான சாப்பாடு...' என்று அவர்களைப் பாராட்டறீங்க. அவனோ, 'அய்யா ஒண்ணும்
சொல்றதில்லே... ரசிச்சு சாப்பிட்டு, பாராட்டறாரு. அவரோட வர்ற வெறும் பசங்க தான், குறை பேசறாங்க...'ன்னு எங்களை திட்டுறாங்க...' என்றார்.
ஈ.வெ.ரா., குறுக்கிட்டார்...'இந்தா, சும்மா இரு... அவன் போடற சோத்துக்கு மதிப்பு கொடுக்காதே; அவன் உணர்வுக்கு மதிப்பு கொடு...' என்றார்.
திரும்பி என்னைப் பார்த்து, 'செல்வேந்திரன், உங்க உடம்புக்கு சாப்பாடு ஒத்துக்கிச்சா?' என்று கேட்டார்.
'அய்யா... நான் மோர் சாதம் மட்டும் சாப்பிட்டேன்...' என்றேன்.
'பொழைக்கத் தெரிஞ்ச புள்ளே!' என்றார்.
— ஒரு கட்டுரையில் திருச்சி செல்வேந்திரன்.
- நடுத்தெரு நாராயணன்
