தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக....(36)

உயிரே உனக்காக....(36)

உயிரே உனக்காக....(36)


PUBLISHED ON : ஆக 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: மதுரிமா, அவளது படுக்கை அறையில் தனியாக இருந்த போது, அவளது மாமா பையன் பாஸ்கரன் அங்கு வந்தான். மதுரிமாவுக்கும், நரேனுக்கும் விவாகரத்து ஆகிவிடும், அதன்பின் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை நாசூக்காக தெரிவித்தான். அவனது எண்ணம் தவறு என்று புரிய வைக்க முயன்றாள் மதுரிமா. பாஸ்கரன் அங்கிருந்து சென்றதும், நரேனுக்கு, ஒரு இ-மெயில் அனுப்ப கம்யூட்டரை ஆன் செய்த போது, கவிதாவிடமிருந்து அவளுக்கு, ஒரு இ-மெயில் கடிதம் வந்திருந்தது —

மதுரிமாவுக்கு, கவிதா அனுப்பி இருந்த, 'இ-மெயில்' ஒரு பக்கம் ஆச்சரியத்தைக் கொடுத்த போதிலும், இன்னொரு பக்கம் சந்தேகத்தையும் எழுப்பியது...

'என்னுடைய, 'இ-மெயில்' முகவரி கவிதாவுக்கு எப்படி கிடைத்தது... யார் கொடுத்திருப்பர்? அமெரிக்காவில் என், 'இ-மெயில்' விலாசம் தெரிந்த ஒரே நபர், நரேன் மட்டும்தான். அப்படி என்றால்... நான் இல்லாத நேரத்தில், நரேனை, அந்தக் கவிதா இன்னமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறாள்...'

இந்த நினைப்பே மதுரிமாவுக்கு வலியை ஏற்படுத்தியது.

கவிதா அனுப்பி இருக்கும், 'இ-மெயில்' கடிதத்தைப் படிக்கலாமா... வேண்டாமா?

கடைசியாக, 'என்னதான் எழுதியிருக்கிறாள்... படித்துதான் பார்ப்போமே...' என்று கவிதாவின், 'இ-மெயில்' கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள் மதுரிமா...

அன்புள்ள மதுவுக்கு —

இந்த கடிதம் உனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்; ஆனால், இதை நான் எழுதுவதன் நோக்கம், உன்னை ஆச்சரியப்படுத்துவதற்கோ, அதிர்ச்சியை தருவதற்கோ அல்ல. உன்னிடம் நேரில் பேச முடியாத சில விஷயங்களை, இந்தக் கடிதத்தின் மூலமாக, பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

தயவு செய்து என் மீதுள்ள கோபத்தால், இந்தக் கடிதத்தைப் படிக்காமல் விட்டு விடாதே. இதைப் படித்த பிறகு, என் மீதுள்ள உன் கோபம், நிச்சயம் தீரும் என்ற நம்பிக்கையில் தான், இதை, உனக்கு எழுதுகிறேன். மது... உன்னைப் போலவே நானும் ஒரு பெண் தானே... உனக்கிருக்கும் உணர்வுகள்தானே எனக்கும் இருக்கும்.

எனவே, நமக்குள் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் என, எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், நாம் தவறாகப் புரிந்து கொள்வதற்கு, அநேக விஷயங்கள் இருக்கலாம். ஆம்... ஆண் - பெண் என்ற பாகுபாடு அற்ற, பொதுவான மனித இயல்பு அது. அந்த அடிப்படையில், நான், உன் கணவர் நரேனோடு நட்பாகப் பழகியதை, நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.

நான் ஒரு விமானப் பணிப் பெண்ணாக இருப்பவள். சில வேலைகளுக்கு என்று, சில விசேஷங்கள் இருக்கும். ஏர்

ஹோஸ்டஸ், ரிசப்சனிஸ்ட் போன்ற வேலைகளுக்கும், சில விசேஷங்கள் உண்டு. இந்தப் பணிக்கு வரும் பெண்கள், எல்லாரிடமும் சந்தோஷமாகவும், சகஜமாகவும் சிரித்துப் பேசி, பழகும் தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆண் என்பவன், இளைஞனோ, வயோதிகனோ, நல்லவனோ, கெட்டவனோ இன்னும் எப்படிப்பட்டவனோ... அது பற்றியெல்லாம் அவள் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது.

ஆமாம் மது... அவன் ஆண் என்பதற்காக, அவள் மிரளக் கூடாது; பயந்து விலகி நிற்கக் கூடாது. நம்மூர் கட்டுப்பட்டித்தனங்கள் எல்லாம், இதுபோன்ற பணிகளுக்கு வரும் பெண்களை, அந்தப் பணிக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்ற, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

நம் மண்ணில், நமக்கு சிறு வயது முதல் சொல்லிக் கொடுத்த அச்சம், நாணம், மடம் இதை எல்லாம் நான், தவறு என்றோ, குறைத்தோ சொல்ல வரவில்லை. அவையெல்லாம், நம் கலாசார, பண்பாட்டுப் பெருமை பேசும் பெரிய விஷயங்கள் தாம். ஆனால், நல்ல விஷயங்கள் கூட, சில நேரங்களில், சில விஷயங்களில் எதிராக மாறிவிடும் அளவுக்கு, இன்றைய வாழ்க்கை முறைகள் மாறிப் போயிருக்கும் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

என்னோடு விமானத்தில் பயணிக்கிற எல்லாரைப் பார்த்தும், எனக்குப் புன்னகைக்கத் தெரிய வேண்டும்; கனிவோடு விசாரிக்க வேண்டும்.

பயணத்தில் அவர்கள் தேவையைப் பணிவோடு மட்டுமல்ல, கனிவாகவும் செய்து தர வேண்டும்.

இதற்கு முன் பார்த்திராத, எத்தனை ஆண்களை என் கண்கள் கனிவோடு பார்த்திருக்கின்றன, மனதில் வெறுப்பை மறைத்து, எத்தனை ஆண்கள் முன், நான் இதழ் மலர்ந்து சிரித்திருக்கிறேன் தெரியுமா?

சரி... தொழில் தர்மம் என்பதன் பெயரால், சில நிறுவனங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இதுவே முதல் பாடமாக இருக்கிறது.

நான் விமானத்தில் சந்தித்த எத்தனையோ ஆண்களில், என்னை அதிகமாய் யோசிக்க வைத்த ஆண்கள், இரண்டு பேர்தான். ஒருவர் என் மாஜி கணவர் ஆண்டர்சன், அடுத்தவர் உன் கணவர் நரேன்... ஆம் மது... என்னை அதிகமாய் யோசிக்க வைத்த ஆண்டர்சன், நரேன் என்ற இரண்டு ஆண்களில், எனக்கு நரேனை மிகவும் பிடிக்கும்.

பயப்படாதே...

எனக்கு நரேனைப் பிடித்திருந்ததற்கு காரணம், செக்ஸ் அல்ல என்பதை நான் முதலிலேயே சொல்லி விடுகிறேன். என்னை நம்பு மது... நரேனை, நான் முதன் முதலாக சந்திக்கும் போது, எனக்குத் திருமணமாகியிருந்தது. ஆம்... ஆண்டர்சனின் மனைவியாகத்தான், நான் நரேனை விமானப் பயணத்தில் சந்தித்தேன்.

உன் கணவர் நரேன், என்ன ஒரு அற்புதமான மனிதர்! நீ இன்னமும் நரேனை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; ஆனால், முதல் சந்திப்பிலேயே, நரேனை, நான் மிகவும் சரியாகப் புரிந்து கொண்டேன்.

நரேனை, எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்கு காரணம், என்ன தெரியுமா? ஒரு சமயத்தில் நான் புரியாமலும், தெரியாமலும் காதலித்துத் தொலைத்துவிட்ட என் மாஜி கணவர் டேவிட் ஆண்டர்சன் தான்... மனோவியல் என்றும், ஆராய்ச்சி என்றும், ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாமல், என்னை இம்சைப்படுத்தி, மிகவும் புண்படுத்திவிட்ட ஆண்டர்சன் தான், நரேனைப் பற்றி, என்னை மிக அதிகமாக யோசிக்க வைத்தார்.

மது... எல்லா மனிதர்களுக்குமே, இரண்டு பக்கங்கள் உண்டு என்று, நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய். மற்ற விஷயங்களில் எப்படியோ... இந்த செக்ஸ் விஷயத்தில் மறுபக்கம் என்ற மறைவான பக்கம் இல்லாத ஆணோ, பெண்ணோ உலகத்தில் நிச்சயம் கிடையாது. இதில் உன்னையும், என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்... நாம் அப்படி இல்லை என்று சொன்னால், நாம் பொய் சொல்கிறோம் என்பதுதான் உண்மை. ஆம்... அப்படி சொல்வது ஒருவிதமான ஹிப்போகிரசி.

உன் மறுபக்கம் என்ன என்பதுதானே உன் கேள்வி... பருவம் வந்தவுடன் நம் எல்லாருக்குள்ளும் செக்ஸ் பற்றிய கனவுகளும், ஆசைகளும், நாம் அறிந்தும் அறியாமலும் நமக்குள் பூக்கத்தான் செய்கின்றன. அப்படி கனவு காண்பதிலோ, ஆசைப்படுவதிலோ எவ்விதமான தவறும் இல்லை; எந்த குற்ற உணர்வும் வரத் தேவையும் இல்லை.

திருமணத்துக்கு முன், நான் செக்ஸ் பற்றி யோசித்ததே இல்லை என்று எந்த ஆணாலும், பெண்ணாலும் எந்தக் கடவுள் முன்பாகவும் சத்தியம் செய்ய முடியாது. இந்த விஷயத்தில், நான் உன்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

திருமணத்திற்கு முன்பாகவே யோசிக்க ஆரம்பித்துவிட்ட ஒன்றை, கனவு கண்ட ஒன்றை, ஆசைப்பட்ட ஒன்றை திருமணம் முடிந்து, அந்த ஒன்று நடைமுறை சாத்தியம் என்றாகிவிட்ட பின்தான், இதில் புதுசு, புதுசாக பிரச்னைகள் முளைக்கவே ஆரம்பிக்கின்றன.

நமக்கு அமையும் துணையைப் பொறுத்து, நாம் கண்ட கனவுகள், நம் கண் முன்பாகவே சுலபத்தில் கரைந்து போகின்றன. நமக்குள் வீறு கொண்டு எழுந்த ஆசைகள், நம்மை அதில் லயிக்க விடாமல், எழுந்த வேகத்திலேயே எளிதில் அடங்கிப் போகின்றன. ஆனால், நமக்குள் இயல்பாக எழுந்து, பின் நாமாக வளர்த்துக் கொள்ளும் இந்தத் தீயின் ஜுவாலைகள் மட்டும், நமக்குள் கொழுந்து விட்டெரிய, அதை அடக்க முடியாமலும், அதில், அழிந்து போக விரும்பாமலும், அடுத்த ஒன்றைப் பற்றி நாம் சிந்திக்க ஆரம்பிக்கிறோம். அப்படியான ஒரு சூழ்நிலையில்தான், நான் நரேனை சந்தித்தேன்...

நான் விமானப் பணிப் பெண்ணாகவும், உன் கணவர் ஒரு விமானப் பயணியாகவும், எங்கள் முதல் சந்திப்பு, விமானத்தில்தான் நிகழ்ந்தது.

அன்றைய பயணத்தில், நரேன் ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர். ஒரு நல்ல நட்புக்கு நாம் பேசும் மொழியும், பிறந்த மண்ணும் காரணமாய் அமைவது, நல்ல விஷயம்தான். அதன் காரணமாய் விமானத்தில் மற்ற பயணிகளைக் காட்டிலும், நரேனோடு பேசவும், பழகவும், கொஞ்சம் நேரத்தை அதிகமாகவே நான் எடுத்துக் கொண்டேன்.

விமானம் நியூயார்க்கை நெருங்கும் போது, நரேன் பேசியது எனக்கு இன்னமும் நினைவில் பசுமையாக இருக்கிறது. அவர் சொன்னார்....

'கவிதா... நான் மறுபடியும் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறேன்...'

'பார் வாட்? எதற்காக என்னை மறுபடியும் சந்திக்க விரும்புகிறீர்கள்...' என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டாலும், என் கேள்வியும், அதை நான் கேட்ட விதமும் அவரை பாதித்திருக்க வேண்டும்.

அந்த பாதிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே, சிரித்துக் கொண்டே சொன்னார் நரேன்...

'வேறு எதற்கு... நண்பர்களாக இருப்பதற்குத்தான்...'

'நான் இன்னொருவரின் மனைவி... நாம் இருவரும் நண்பர்களாக இருப்பது சாத்தியப்படுமா?'

மறுபடியும் என் கேள்வி தவறான திசையிலேயே பயணித்தது. ஆனால், நரேன் மிகவும் தெளிவான நபர் என்பது, அவரது பதிலில் தெரிந்தது.

'அதனால் என்ன... நீயும், நானும், உன் கணவரையும் சேர்த்தே நண்பர்களாக இருப்போம்... திருமணத்திற்குப் பிறகு, ஒரு ஆண் வேறு பெண்ணோடும், ஒரு பெண் வேறு ஆணோடும் நட்பாக இருப்பது தவறு என்று யார் சொன்னது?'

நரேனின் கேள்வி என்னை வெட்கப்பட வைத்தது. அவரே தொடர்ந்தார்...

'அப்படி நட்பாக இருப்பது தவறு என்றோ, குற்றம் என்றோ யார் கருதுகின்றனரோ அவர்கள்தான் தவறானவர்கள். அந்தக் குற்றத்தை செய்வோர், அப்படி நினைத்து, நட்பு கொள்பவர்கள் நாளடைவில், நிச்சயம் அவர்கள் நினைத்த தவறைச் செய்வதற்கு முயற்சிப்பர்; நான் அப்படி நினைக்கவில்லை...'

நரேனின் பதில், என் கன்னத்தில் அறைவதைப் போல் வந்து விழுந்தது.

நரேனிடம் நான் அப்படி கேட்டதற்காக வெட்கப்பட்டேன். என் கணவர், ஆண்டர்சனோடு நான் அமைத்துக் கொண்ட வாழ்க்கை, என்னை அப்படி யோசிக்கவும், கேட்கவும் வைத்து விட்டது.

நானும், என் கணவரும் வாழ்ந்த வாழ்க்கை, எனக்கு எல்லா ஆண்களின் மீதும், ஒருவிதமான வெறுப்பையும், தவறான எண்ணத்தையும், 'ஆண்களே இப்படித்தானோ...' என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அது, மிகவும் தவறான எண்ணம் என்பதை, நான் நரேனை சந்தித்துப் பழகிய பின்தான் உணர்ந்து கொண்டேன்.

ஆம் மது... ஆணோ, பெண்ணோ... செக்ஸ் என்பதன் செயல்பாடு என்னமோ ஒன்றாகத்தான் உள்ளது என்பதை நானும், என் கணவரும் அமெரிக்காவில் பார்த்த அநேக ஆங்கிலப் படங்கள் எனக்கு உணர்த்தின. ஆனால், செயல் ஒன்று என்பதற்காக, அதில் ஈடுபடும் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர் என்பதை, எனக்கு உணர்த்தியவர் நரேன்தான்...

இதைப் படித்த போது, மதுரிமாவின் மனது, ஏதோ திகில் நிறைந்த சினிமாப் படத்தைப் பார்ப்பது போல், வேகமாக இயங்கி, அவளுக்கு லேசாக வியர்த்தது. நரேனிடம், இந்த வித்தியாசத்தை கவிதா எப்படி உணர்ந்தாள்... கவிதா என்ன செய்தாள்... அதற்கு பதிலாக நரேன் என்ன செய்தான்?

மது... உடனே நரேனைப் பற்றிய எந்தத் தவறான முடிவுக்கும் சென்று விடாதே... எந்த ஒரு உண்மையும், சோதனைகளின் மூலமாகவே நிரூபணம் ஆகி உள்ளது என்பது ஒரு உண்மைதானே... திருமணம் ஆன ஒரு பெண்ணுடன், நட்பாக இருக்க ஆசைப்படும், அதை நியாயப்படுத்திப் பேசும் நரேனை சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற குரூரமான ஆசை எனக்குள் தோன்றியது.

நீ நினைக்கலாம்... நான் நரேனை சோதிக்க ஆசைப்பட்டது போல்தானே, என் கணவரும் என்னை ஆராய்ச்சிக்கு உட்படுத்த ஆசைப்பட்டார் என்று; ஆனால், இரண்டிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.

நான் நரேனை சோதிக்க நினைத்தது, அவர் உண்மையிலேயே பெண்மையையும், நட்பையும் உயர்வாகப் போற்றுபவரா என்பதைத் தெரிந்துக் கொள்வதற்காக... ஆனால், என் கணவர் என்னை சோதிக்க நினைத்தது, இந்த விஷயத்தில் பெண்களை சிறுமைப்படுத்தும், அவரது வக்கிரமான ஆய்வுக்காக... என்னுடைய சோதனை, கடவுள் ஒரு நல்ல பக்தனின் பக்தியை சோதித்ததைப் போன்றது. ஆனால், ஆண்டர்சன் என்னை சோதித்தது, ஒரு விஞ்ஞானி, அவனது வெற்றிக்காக அப்பாவி பிராணியைக் கூண்டில் அடைத்து, இம்சைப்படுத்துவது போன்றது; இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்?

நான் துணிந்து ஒரு காரியம் செய்தேன். நரேனுக்கு சவுகரியப்படும் போது, போன் செய்து, என் வீட்டுக்கு வரும்படி விலாசத்தையும், என் போன் நம்பரையும் கொடுத்தேன். நரேன் என்னைப் பார்க்க, என்னோடு நட்பாக இருக்க, என் வீட்டுக்கு வருவதை என் கணவன் ஆண்டர்சன் நிச்சயமாகத் தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

சொல்லப் போனால், நானும், நரேனும் நட்பாகப் பழகுவதை, மனசுக்குள் வரவேற்று சந்தோஷப்பட்டாலும் படலாம். ஆண்டர்சனின் ஆராய்ச்சிக்கு என்னுடனான, நரேனின் நட்பு, எந்த விதத்திலாவது உபயோகமாக இருக்கிறதா என்று, எங்களுக்குத் தெரியாமலேயே, எங்களை ஆராய்ந்து வேவு பார்க்கலாம். ஆண்டர்சன் அப்படிப்பட்ட ஒரு ஆள்.

அதன் பிறகு, வெகு நாட்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, நரேனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று, எந்த வேலையும் இல்லை என்றும், வீட்டுக்கு வரலாமா என்றும் போனில் என்னிடம் கேட்டார். நான், என் கணவர் ஆண்டர்சனிடம் அனுமதி கேட்டு நிற்கவில்லை. எவ்வித தயக்கமும் இன்றி, நான் நரேனை வீட்டிற்கு வரும்படி சந்தோஷமாக அழைத்தேன்.

'யாரு போன்ல... யாரை வீட்டுக்கு வரச் சொல்ற?' என்று ஆண்டர்சன் கேட்டதற்கு, 'எங்கள் ஊர்க்காரர்... பேர் நரேன்... சமீபத்தில் விமானப் பயணத்தின் போது அறிமுகமானார். அவரைத்தான் நம் வீட்டிற்கு அழைத்திருக்கிறேன்...' என்று சொன்னேன். ஆண்டர்சன் சில நிமிடங்கள் யோசித்து, என்ன சொன்னார் தெரியுமா மது...

நீ நம்ப மாட்டாய்... உனக்கு ஆச்சரியமாகவோ, அதிர்ச்சியாகவோ கூட இருக்கும். அவர் சொன்னது இதுதான்... 'ஓ.கே., கவிதா... நான் உங்களை தொந்தரவு செய்ய விரும்பல... எனக்கு கொஞ்சம் வெளில வேலை இருக்கு. ஹேவ் எ நைஸ் டைம்...' என்று புன்னகையுடன் சொல்லி, அரை மணி நேரத்தில் ஆடை மாற்றி, வெளியே புறப்பட்டுப் சென்று விட்டார்.

இப்படி ஒரு கணவனை, உன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது; ஆனால், அப்படி ஒரு கணவனோடு, நான் வாழ்க்கையே நடத்திக் கொண்டிருந்தேன். இன்னும் அவரால் எனக்கு நேர்ந்த எத்தனையோ விஷயங்கள்... சம்பவங்கள்... சரி... அதெல்லாம் என் சொந்த சோகக் கதை... நம் பிரச்னை இப்போதைக்கு அதுவல்ல. அதை விட்டுத் தள்ளுவோம்.

மது... நான் நரேன் வருகைக்காகக் காத்திருந்தேன். உன்னிடம் எதையும் நான் மறைக்க விரும்பவில்லை. அன்றைய சூழ்நிலையில், என் கணவரால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் வெப்பத்தைத் தகித்துக் கொள்ள, ஒரு குளிர்மையான நட்புக்காக, என் மனம் உள்ளூற ஏங்கித் தவித்து கொண்டிருந்தது.

நட்பு என்ற பெயரில் என்னைத் தேடி வரும் இந்த நரேன் எப்படிப்பட்டவன், அவன் சொல்வது போல் காலத்துக்கும் நல்ல நண்பனாய் இருக்கக் கூடியவனா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எதன் மூலமாக, எப்படித் தெரிந்து கொள்ளப் போகிறேன் என்பது கொஞ்சம் சுவாரசியமான கேள்விதான்... நானே கேட்டுக் கொண்ட கேள்விக்கு, நான் பதில் எழுத வேண்டிய நேரம், என்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

நான் உன் இன்றைய கணவன் நரேனின் வருகைக்காக, அன்று காத்து நின்றேன்...

தொடரும்.

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us