sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வாழ்வு இங்கே தோழி!

/

வாழ்வு இங்கே தோழி!

வாழ்வு இங்கே தோழி!

வாழ்வு இங்கே தோழி!


PUBLISHED ON : நவ 30, 2014

Google News

PUBLISHED ON : நவ 30, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்லிய ஈரத்துடன் விடிந்த அந்த அதிகாலைப் பொழுது, எப்போதும் போல மனதை உற்சாகப்படுத்த, படுக்கையிலிருந்து எழுந்தாள் அனு.

வீடு மற்றும் அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள்.

குளித்து, செடிகளுக்கு நீர் வார்த்து, பெரியவர்களின் படங்களுக்கு பூ போட்டு வணங்கினாள். தினசரியின் முக்கியமான செய்திகளை வாசித்து, பால்காரப் பையனின் குரல் கேட்டு, கதவைத் திறந்து பாக்கெட்டுகளை எடுத்து வந்து, காபி தயார் செய்யும்போது, எழுந்து வந்தான் சேகர்.

''குட் மார்னிங்,'' என்று புன்னகைத்தாள்.

பதில் சொல்லாமல், வழக்கம்போல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

பில்டர் காபியின் வாசனை வீட்டை ஆக்கிரமித்தது.

பற்பசையின் வீச்சம் குறையாமல் வந்தவனிடம், ஒரு கையில் துண்டும், மறுகையில் காபியுடன் முகத்தில் மாறாத புன்னகையுடன் நின்றாள் அனு.

குழந்தையின் கையிலிருந்து பொம்மையை பிடுங்குவதை போல, அவள் கையிலிருந்து காபி டம்ளரை வாங்கிக் கொண்டான்.

''இன்னிக்கு எனக்கு அலுவலகத்துல அரையாண்டு கணக்கு முடிக்கிறாங்க. அதனால, அங்கேயே லஞ்ச்... உங்களுக்கு மட்டும் சமையல் செய்திருக்கேன். பாலிசிக்கு இன்னிக்கு பணம் கட்டணும் நினைவுபடுத்துறேன். அப்புறம், தொட்டியில வச்சுருக்கிற பெங்களூர் ரோஸ் செடி பூ பூத்திருக்கு,'' என்றாள் மலர்ச்சியுடன்.

கண்களை மூடி, காபியை குடித்து முடித்தவன், அவள் பக்கம் திரும்பாமலே, குரலில் அழுத்தத்தை ஏற்றி,''நேத்து, என் ஸ்கூல் பிரண்ட்ஸ் வந்திருந்தாங்க. அத்தனை பேருக்கும் குழந்தைங்க இருக்கு; என்னால அவங்க முகத்தையே பாக்க முடியலே. நாலு வருஷமாவா குழந்தை இல்லேன்னு கேவலமா பாக்குறான் ஒருத்தன். ஆளாளுக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பிச்சுட்டானுங்க. மலட்டு வயத்துக்காரிய என் தலையில கட்டிட்டாங்கன்னு கடைசில சொல்ல வேண்டியதாப் போச்சு,''என்றான் எரிச்சலுடன்.

உள்ளுக்குள் உருவான எரிமலையை கட்டுப்படுத்தி, மெதுவாக, ''பரவாயில்ல... நண்பர்களுக்கு நடுவுல, அப்படி சொல்ல வேண்டியது தான். ஆனால், உண்மை எதுன்னு நமக்குத் தெரியுமே... இதுவரைக்கும் எல்லா டெஸ்ட்டும், எனக்குத்தானே நடந்திருக்கு. உங்களயும், 'டெஸ்ட்' செய்யணும்ன்னு சாருலதா டாக்டர், நாலு தடவைக்கு மேல சொன்னாங்கதானே? என்னிக்கு வேணா போகலாம், 'டெஸ்ட்' செய்துக்கலாம் என்கிறது தானே உண்மை,''என்றாள்.

''ஓகோ... நீதாண்டா வக்கில்லாதவன், எனக்கு எல்லாம், 'பர்பெக்ட்டா' இருக்குடான்னு குத்திக் காட்டறியா?''

''மை காட்... ஏன் எல்லாத்தையும் இப்படி அர்த்தப்படுத்துறீங்க... சத்தியமா, என் மனசுல அப்படி எதுவும் நினைக்கல... வெளிப்படையாகத் தான் பேசறேன்,''என்றாள்.

''அப்ப... நான் பூடகமா, நயவஞ்சகமா, அநாகரிகமா பேசறேனா... நீயெல்லாம் ரொம்ப இங்கிதம்... நாங்க காட்டுத்தனமானவங்க. அது தானே சொல்ல வர்றே? திமிருடி... சம்பாதிக்கிற திமிர்,'' என்றான் கோபத்துடன்.

எத்தனை காலத்திற்கு, இந்த அவஸ்தை என்று தான் உடனே தோன்றியது. தர்க்கத்திற்கு பதில் பேசலாம், குதர்க்கத்திற்கு! பூனாவிலிருக்கும் அவன் பெற்றோரிடம் தினமும் பேசி விடுவாள். அவர்களுக்கும் அவள் மீது மிகுந்த அன்பு. அவன் உணவு, உடை என்று பார்த்துப் பார்த்து செய்கிறாள். அக்கம் பக்கம் தோழமை என்று, அவள் வாழ்கிற வாழக்கையில், அவன் என்ன குற்றம் கண்டான்.

''என்ன அமைதியாயிட்ட? இவன்கிட்டல்லாம், என்ன பேச்சு வேண்டியிருக்குன்னு நினைக்குறே... இருக்கட்டும்டி காட்டு தர்பாரா நடத்தற... நீ நல்லா இருக்க மாட்டேடி... என் கண் எதிர்லயே நீ, கதறிக் கதறி அழற காலம் வரும்டி.''

''சரி வரட்டும்... அதுல உங்களுக்கு திருப்தி வரும்ன்னா இப்பவே கூட நான் கதறி அழத் தயார். ஒரே ஒரு வேண்டுகோள்; டாக்டர் கிட்ட தயவு செஞ்சு வாங்க, பரிசோதனை செஞ்சுக்கலாம்; நல்ல காலம் வரட்டும். ஒரு குழந்தை இருந்தா, மனசுல இரக்கமும், கருணையும் தானாகவே உருவாகும்.''

''என்னடி மறுபடி திமிரு காட்டறியா... என்கிட்டதான் குறை இருக்குன்னு, நாசூக்கா சொல்லிக் காட்டறியா? இல்லடி... நீ தாண்டி காஞ்சு போய் கிடக்கிறே... புழு பூச்சிக்கூட வராத வயித்தை வெச்சுக்கிட்டு, ரோஜா வளர்க்கிறேன்; மல்லி வளர்க்கிறேன்னு பம்மாத்து செய்ற... என் தலையெழுத்துடி, போகிற எடத்துல எல்லாம், அவமானத்தை சுமக்கணும்ன்னு... உன்னத் தேடிக் கண்டுபிடிச்சு என் தலையில கட்டி, என் வாழ்க்கையை பாழாக்கின, என் அம்மாவச் சொல்லணும். முடிஞ்சா ஒண்ணு செய், ஒரே ஒரு கையெழுத்து போட்டு பிரிஞ்சு போயிடு.''

இதை எத்தனையாவது முறை சொல்கிறான்? கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. அரை வினாடிகள் கூட ஆகாது, அந்த கையெழுத்தைப் போடுவதற்கு. ஆனால், அதற்குப் பிறகான வாழ்க்கை? மாயவரம் தாண்டி இருக்கிற அப்பாவிடம் போக வேண்டும். தினம் அம்மாவின் கண்ணீரைப் பார்க்க வேண்டும். பத்தாவது படிக்கிற பவித்ரா, ஆறாவதில் இருக்கிற பரத் என்று, அவர்களின் உணர்வுகளில் கவலையைப் புகுத்த வேண்டும். மணவிலக்குப் பெற்றவள் என்கிற ஒரே பார்வையில், மன வக்கிரத்தை செலுத்துகிற ஆண்குலத்தை தினம் தினம் சந்திக்க வேண்டும்.

வாசற் கதவை பூட்டி, அலுவலகம் கிளம்பியபோது, வயிறு இரைந்தது. ஐந்தரை மணிக்கு அரைவாய் காப்பி குடித்ததோடு சரி.

நடையை எட்டிப் போட்டாள்.

''எப்பிடிம்மா இருக்கிறீங்க...நல்லா இருக்கீங்களா?'' என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பினாள். இளநீர் வண்டியுடன் சிரித்தாள் யசோதா.

''நல்லா இருக்கேன் யசோதா... நீ எப்படி இருக்கே, உன் பொண்ணு மல்லிகா எப்படி இருக்கா?''

''நல்லா இருக்றேம்மா... இந்த எளநீ வியாபாரத்த கூட விட்டுடப் போறேன். எல்லாம் உங்க புண்ணியம்,'' என்ற யசோதாவின் கண்கள் நன்றியால் நிறைந்தன.

''ஏன்?'' என்றாள் வியப்புடன்.

''என் பொண்ணோட பிசினஸ் நல்லா போகுதும்மா. பெரிய பெரிய கடைகள்ல இருந்து எல்லாம் ஆர்டரு தர்றாங்க. மல்லிகா தெனம் உங்களப் பத்தித் தான் பேசும். தங்கமான மனசு, அந்த மேடத்துக்குன்னு சொல்லிக்கிட்டே இருப்பா,''என்றாள்.

''அடடா... இதுல நான் என்ன யசோதா செஞ்சேன்... கடன் வேணும்ன்னு வந்து கேட்டா... நல்லா பொறுப்பான பொண்ணா தெரிஞ்சுது. மானேஜர்கிட்ட சொல்லி, கடனுக்கு ஏற்பாடு செஞ்சேன்; இவ்வளவு தானே!''

சடாரென்று, ஒரு இளநீரை வெட்டி, இரண்டு கைகளாலும் பிடித்து நீட்டிய யசோதா, ''எத்தனை எடத்துல அலைஞ்சோம் தெரியுமாம்மா... பொம்பள புள்ளைக்கு, பிசினசு எதுக்குன்னு கேலி செய்து அனுப்பிட்டாங்க. அதுலயும் குடிசைப் பொண்ணுன்னு அத்தனை அலட்சியம். மொதல்ல, உங்க பேங்க்லயும் அப்படிதானே சொன்னாங்க...''

அது உண்மை தான். காளான் வளர்ப்புப் பயிற்சியை முடித்துவிட்டு, அந்தப் பெண் மல்லிகா வந்து கடன் கேட்டபோது, 'அப்படி எந்தவொரு வங்கித் திட்டமும் எங்களிடம் இல்லை...' என்று மானேஜர் மறுத்து விட்டார். அவள் தான் பேசினாள்.

'நீங்களே சொல்லியிருக்கீங்களே சார்... சின்ன வயசுல, ஒரு வக்கீல் தான் உங்களைப் படிக்க வெச்சார்ன்னு... இப்போ உங்ககிட்ட இருக்கிற அதிகாரத்தையும், உரிமையையும் நீங்க பயன்படுத்த வேண்டாமா... சிறுதொழில் கடன் பிரிவு, பெண்கள் சுயசார்பு தொழில் உதவி பிரிவு, சுயநிதிக் குழு கடன் பிரிவுன்னு எத்தனை இருக்கு... அதுல ஏதோ ஒரு பிரிவுல, அந்தப் பொண்ணுக்குக் கொடுக்கலாம். ஏழ்மையிலும் தைரியமா, நேர்மையா சுயமா தொழில் செய்யணும்ன்னு நினைக்கிற பொண்ணுக்கு உதவி செய்வோம் சார்...' என்று வலியுறுத்தி, காளான் வளர்ப்பு தொழிலுக்கு, 40 ஆயிரம் ரூபாயை, கடன் ஏற்பாடு செய்து கொடுத்த அந்த நாள், நினைவிற்கு வந்தது.

''பட்டன் காளான், வெள்ளைக்காளான், குடைக்காளான்னு மூணு வகை வளர்க்கிறா. கார்ல வந்து வாங்கிட்டுப் போறாங்க... இப்ப டிபார்ட்மென்டு கடைக்காரங்க ஆர்டரு மேல ஆர்டரு கொடுக்கிறாங்க. அதனால, பக்கத்து வீட்டையும் வாடகைக்கு எடுத்து, அங்கியும் காளான் தோட்டம் போடுது. எல்லாம் உங்க நல்ல மனசுதாம்மா... நீங்க என்னிக்கும், புள்ள குட்டிங்களோட நல்லா இருக்கணும். வரேம்மா,'' என்றாள்.

உண்மையிலேயே நெகிழ்வாக இருந்தது. உழைப்பின் உச்சத்தில் தான் அதிர்ஷ்டத்தின் மச்சம் இருக்கிறது என்று, தான் ஒரு புத்தகத்தில் வாசித்தது எவ்வளவு உண்மை. நம்பிக்கையுடன், ஒரு வேலையில் ஆத்மார்த்தமாக இறங்கினால், அது இரண்டு மடங்கு வெற்றியை ஈட்டித் தருகிறது. வறுமையை விரட்டி, திறமையுடன் உழைத்து, நேர்மையாக கடனை அடைத்து, தலை நிமிர்ந்து வாழ, ஒரு சிறு பெண்ணுக்கு தான் கருவியாக செயல்பட்டதை எண்ணி, உவகை அடைந்த உள்ளத்துடன், அலுவலகத்தில் நுழைந்தாள்.

''விஷயம் தெரியுமா மேடம்?'' என்று ஓடி வந்தான் அலுவலக உதவியாளன்.

''என்னப்பா?''

''நம்ம மானேஜர் சார்... ஸ்கூட்டர்ல வரும்போது ஆக்சிடென்ட் ஆகிருச்சாம்; தலையில் அடியாம், ஏகப்பட்ட ரத்த சேதமாம்... உடனே ஆபரேஷன் செய்தாத் தான் பிழைப்பாராம்,''என்றான்.

''என்ன... சொல்றே?'' என்று படபடத்தவள், ''அவருக்கு, 'ஏபி நெகடிவ்' ரத்த வகையாச்சே... சரி, சர்க்கிள் ஆபீஸ்ல சொல்லி, உடனே யாரையாவது வந்து சார்ஜ் எடுத்துக்கச் சொல்லு. நான் மருத்துவமனைக்கு கிளம்பறேன்,'' என்று அவள் வாசல் நோக்கி பாய்ந்தாள்.

மானேஜரின் மனைவி நொறுங்கிப் போனவளாய் கதறிக் கொண்டிருந்தாள். இவளைப் பார்த்ததும் தோளில் சாய்ந்து விம்மினாள்.

''இப்படி உயிருக்குப் போராடறாரே... மூணு பொம்பளப் குழந்தைகளை வெச்சுக்கிட்டு, நான் என்ன செய்வேன்... தலையில கல்லைத் தூக்கி போட்டுட்டாரே அந்த பகவான்,'' என்று அலறியவளை, அணைத்துக் கொண்டாள் அனு.

''ஒண்ணும் ஆகாதும்மா. சார் போராடி ஜெயிக்கிறவர்; பழைய மாதிரி வந்துடுவார்,''என்று ஆறுதல் சொல்லிவிட்டு, அறுவை சிகிச்சைக்கு தயார் செய்து கொண்டிருந்த மருத்துவக் குழுவின், அறைக்கு விரைந்தாள்.

''டாக்டர்... அவங்க எங்க பிராஞ்ச் மானேஜர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். 'ஏபி' நெகடிவ் ரத்த வகை அவருக்கு, எனக்கும் அதேதான்... ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்புன்னு எந்தக் குறைபாடும் எனக்கு இல்லே. என் ரத்தத்தை கொடுக்க தயாரா இருக்கேன்,''என்றாள்.

''இட்ஸ் ரியலி குட். சிஸ்டர், இவங்களை கவனிங்க,'' என்று புன்னகைத்தபோது, அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மூன்று மணி நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, மானேஜர் கண் விழித்ததும், அனைவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது.

மானேஜரின் மனைவி காலைப் பற்றாத குறையாக, ''உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. எங்க குடும்பத்துக்கு விளக்கேத்தி வெச்சிருக்கேம்மா நீ நல்லா இருப்பே,'' என்று நெகிழ்ந்தாள்.

இரவு வீடு வந்து சேர்ந்தபோது, சேகர் நெருப்பு போல அவளைப் பார்த்தான்.

''ஊர் சுத்திட்டு வரியா... இங்க ஒருத்தன் இருக்கானே... அவன் பாட்டுக்கு நாய் மாதிரி கிடக்கட்டும்ன்னு நினைக்கறியா?உன்னையெல்லாம்,'' என்று ஆரம்பித்து, அவன் கத்தத் துவங்கினான், கெட்டுப் போன பழ வாசனையுடன்.

அவள் மென்மையாக, அவனைப் பார்த்தாள். உள்ளே எந்த சொக்கப்பனையும் எரியவில்லை; எரிமலையும் உருவாகவில்லை. மாறாக இமயமலையின் தூய்மையும், குளுமையும் நிரம்பியிருந்தன.

மல்லிகாவும், யசோதாவும் மனம் விட்டுப் புன்னகைத்தனர். மானேஜர் தலையில் கட்டுடன் உட்கார்ந்து, அவர் மனைவி போட்ட காபியை ரசித்துக் குடிக்கும் காட்சி கண்ணில் வந்தது.

இது என் உலகம்; எனக்கான பூமி. இங்கே மலரும் பூக்கள் எனக்காக. அவற்றை எடுத்து நான் வினியோகிப்பேன். வாங்கி அணிகிற முகங்களைப் பார்த்து மகிழ்வேன். மேலும் மேலும் அவர்களுக்கான மலர்கள், என் தோட்டத்தில் மலரும். மறுபடி மறுபடி அவற்றை நான் மற்றவர்களுக்கு அளிப்பேன். கரையைத் தேடி அலையும் வெற்றுப் படகல்ல நான். கரைக்கு அழைத்துச் செல்லும் உயிர்படகு. சேகர்கள் என் உணர்வுகளை, இனி மேலும் காயப்படுத்த முடியாது. இனி நான் வெறும் பெண்ணல்ல, மென்மையும், தன்மையும், நேயமும் கொண்ட தனித்தன்மை வாய்ந்த, அதே சமயத்தில் உடைந்து போய் விடாத இரும்புப் பெண். ஏனென்றால், என் உலகம் சுயநலமற்றது.

அவள், இதமான நீரில் குளிக்கத் துவங்கிய போது, அவளுக்கு பிடித்தமான திரைப்படப் பாடல், இதழ்களில் தானாக வந்து ஒட்டிக் கொண்டது.

உஷா நேயா






      Dinamalar
      Follow us