
'என் நினைவுகளில் பாவேந்தர்' நூலில் த.கோவேந்தன்: பாவேந்தர் பாரதிதாசனை, ஒரு நாள் நீதிபதி மகராசனிடம் அழைத்துச் சென்று, அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது, அவர், கோவை மாவட்ட நீதிபதி. சென்னை, எழும்பூரில் ஒரு பிரபல ஓட்டலில் தங்கியிருந்தார். 'பாரதிதாசனோடு ஒரு மணி நேரம் தான் பேச முடியும்; எனக்கு நிறைய வேலை இருக்கிறது...' என்றவர், பாவேந்தரை சந்தித்தபோது தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
'உங்களைப் பார்த்ததிலே மட்டற்ற மகிழ்ச்சி; ஒரு கவிஞர்ன்னா எப்படி இருப்பான் என்பதற்கு, உங்கள் தோற்றம், மிடுக்கு, நடை, பெருமித நோக்கு, அன்பு விழிகள்... நீங்கள் ஒரு கவிதை...' என்றார் நீதிபதி.
புதுவையில், 10 ஆண்டுகள் வாழ்ந்த பாரதியாரைப் பற்றிய பேச்சு துவங்கியது. பாவேந்தர் உள்ளம் பூரிக்க, பாரதியாரை பற்றிய செய்திகளைக் கூறிக் கொண்டிருந்தார். வ.வே.சு., அய்யர், அரவிந்தர் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் பண்பு நலன்கள் பற்றி பாவலர் பேசப் பேச, மனம் மயங்கி கேட்டுக் கொண்டிருந்தார் நீதிபதி. 'பாரதியார் எப்படி பாடுவார்...முடிந்தால் பாடிக் காட்டுங்கள்...' என்று கேட்டார் நீதிபதி.
'அய்யருக்கு (பாரதியார்) நல்ல சாரீரம்; சங்கீதப் பயிற்சி பெற்றவர். அவருக்கு, பண்ணும், பாட்டும் பறவை மாதிரி பறக்கும். என்னால் அவ்வளவு முடியாது; வயசாயிடுச்சு...' என்று கூறி, 'வேண்டுமடி எப்போதும் விடுதலையம்மா, காணி நிலம் வேண்டும், வீணையடி நீ எனக்கு...' போன்ற மூன்று பாடல்களை, பாரதியார் பாடிய பாணியிலேயே பாடிக் காட்டினார்.
நீதிபதி மகராசன் சந்தோஷத்துடன்,'சபாஷ் சபாஷ்... பலே பலே... இந்த வயசிலே இவ்வளவு அட்சர சுத்தமான பாட்டா... மிக்க சந்தோஷம். பாரதியாரோடு இருந்து அளவளாவின சந்தோஷம்...' என்றார்.
பணியாளர் ஒரு தட்டில் சிற்றுண்டி மற்றும் நொறுக்குத் தீனிகள் கொண்டு வந்தார்.
அப்போது, கல்வித் துறை இயக்குனராயிருந்த சிட்டிபாபு, நீதிபதியைக் காண வந்தார். பாவேந்தரைக் காட்டி, 'இவரைத் தெரியுமா?' என்று கேட்டார் நீதிபதி. அவர் அலங்க மலங்க விழித்து, எங்கோ புகைப்படமாக பார்த்த நினைவு என்றார். நீதிபதி, 'இவர் தான் பாரதிதாசன்...' என்றதும், அவர் மகிழ்ச்சியில் துள்ளி, பாவேந்தரின் கைகளை பிடித்து, வணங்கினார்.
மாலை, 6:00 மணி ஆகிவிட்டது. மீண்டும் காபி, பேச்சு என்று தொடர்ந்தது. 'சமீபத்தில் நீங்க எழுதின பாடலிருந்தால் சொல்லுங்க, கேட்போம்...' என்றார் மகராசன்.
'காதற் சிந்து' என்ற ஒரு நூலிலிருந்து...
'புதுக் கிளையில் மதில் மேலே
முத்து மாமா - இரண்டு
புறா வந்து பாடுவதேன்
முத்து மாமா!
எதுக்காக பாடினவோ
முத்து மாமா - நாமும்
அதுக்காக பாடுவோமே
முத்து மாமா!
மகராசன் கைகள் தாளம் கொட்டின; சிட்டிபாபுவின் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவம்.
பாவேந்தர் இசையோடு பாடுகிறார்;
ஒதிய மரத்தின் கீழே
முத்து மாமா - கோழி
ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன
முத்து மாமா!
எது செய்ய நினைத்தனவோ
முத்து மாமா - நாமும்
அது செய்ய அட்டி என்ன
முத்து மாமா!
என்று பாரதிதாசன் பாடிக் கொண்டிருக்கையில், 'தங்களுக்கு எத்தனை வயது?' என்று கேட்டார் நீதிபதி. '70 ...' என்றார் பாவேந்தர். 'இல்லை, 17 தான்...' என்று நீதிபதி கூறியதும் அறை முழுவதும் சிரிப்பலை எதிரொலித்தது.
பெரியவர் ஒருவர், ஒரு இளைஞனிடம், 'தம்பி... நீங்க என்னமோ ஆராய்ச்சி செய்து கிட்டுருக்கிறதா என் மகன் சொன்னான்; என்ன ஆராய்ச்சி செஞ்சுட்டிருக்கீங்க?' என்று கேட்டார்.
'சுவருக்கு, அந்தப் பக்கம் என்ன இருக்கு, என்ன நடக்குதுன்னு வெட்ட வெளிச்சமா காட்டற, ஒரு சாதனத்தை உருவாக்கிக்கிட்டிருக்கேன்...' என்றான் இளைஞன்.
'அதைத்தான் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுட்டாங்களே! அதுக்குப் பேருதானே, ஜன்னல்...' என்றார் பெரிசு.
நடுத்தெரு நாராயணன்

