PUBLISHED ON : நவ 11, 2018

டாக்டர், தன் கழுத்திலிருந்த, 'ஸ்டெதாஸ்கோப்'பை, டேபிள் மீது வைத்து, சுழல் நாற்காலியில் அமர்ந்தவர், ''உங்கள் நண்பர் என்ன வேலை பார்க்கறார்,” என்றார்.
''நானும், அவரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தோம்,'' என்றேன்.
''பார்த்தோம் என்கிறீர்கள்... இப்ப அவர், அங்கே வேலையில் இல்லையா?''
''நானும் அங்கே இல்லை சார்... சில ஆண்டுக்கு முன், நான் அந்த கம்பெனியில் வேலைக்கு போனேன்... அங்கே இந்த செல்வராஜ், சூப்பரவைசரா இருந்தார்... முதல் சந்திப்பிலேயே எனக்கு நட்பாகி விட்டார்... இருக்க இடம் கொடுத்தார்... சேர்ந்து தான் சாப்பிடுவோம்... அன்பா இருப்பார்... கடுமையான உழைப்பாளி... நிறுவனத்துக்கு விசுவாசமா இருப்பார்.''
''அவரது தனிப்பட்ட வாழ்க்கை எப்படி?''
''சுத்தம் சார்... புகை, மது, எதுவும் கிடையாது. சினிமா கூட, அபூர்வமாக தான் பார்ப்பார். அம்மா - அப்பா இருந்தாங்க... அவருக்கு, கல்யாணத்துக்கு பெண் பார்த்துகிட்டிருந்தாங்க.''
''கல்யாணம் முடிஞ்சுதா... மனைவி இருக்காங்களா?''
''கல்யாண ஏற்பாடு பாதியில் நின்னு போனதாக கேள்விப்பட்டேன்.''
''அந்த சமயம் நீங்க, அவர் கூட இல்லையா?''
''மொத்தம், நாலு மாசம் தான் சார், அங்கே வேலை பார்த்தேன்... எனக்கு அரசு வேலை கிடைக்கவே, ஊருக்கு போய்ட்டேன்... இடையில் அவரை நான் சந்திக்கவே இல்லை. 'கல்யாணம் முடிஞ்சு, குழந்தைகளோடு இருப்பார்'ன்னுதான் நினைச்சுகிட்டிருந்தேன்.
''ஆனால், இப்ப தற்செயலா அவரைப் பார்த்தபோது, நொந்து போயிட்டேன்... யாரும் துணைக்கில்லாமல், உடல் நலிவோடு, தனிமையில் இருந்து, காய்ச்சலில் விழுந்து, கண்களில் மட்டும் உயிரை வச்சுகிட்டிருந்தார்... அதான் உடனே இங்கே அழைத்து வந்தேன்.''
''இடையில் என்ன நடந்ததுன்னு ஏதும் தெரியுமா... ஏதோ ஒரு பெயரை மீண்டும் மீண்டும் சொல்றார்.''
''விமல்ன்னு சொன்னாரா, டாக்டர்?''
''கரெக்ட்... அப்படி தான் சொன்னார். இன்னும், முதலாளி... மோசடி... அது, இதுன்னு பேசினார்.''
''அப்படின்னா... அவர் அந்த பாதிப்பிலிருந்து மீளவில்லை போலிருக்கு,'' என்றேன்.
''என்ன பாதிப்பு?''
''நான் செல்வராஜுடன் இருந்த நாட்களில், அவர் விமலைப் பத்தி அதிகம் விமர்சிப்பார். 'கம்பெனிக்கு துரோகம் செய்யறார்... பணம் களவாடுறார்... மெட்டீரியல்ல கை வைக்கறார்... தொழிலாளர்களை ஏமாத்தறார்... கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத சுய நலமி...' என்றெல்லாம் குறை படுவார்.''
''யார் அந்த விமல்?''
''அவரும், செல்வராஜ் போல சூப்பரவைசர். இருவரும் ஒரே நேரத்தில் வேலையில் சேர்ந்தவங்க... இவரு, சலிக்காமல் உழைப்பார் சார்... இரவு - பகல் எந்நேரமும், ஏதாவது வேலையை எடுத்து போட்டு செய்வார்...
''கொத்தனார் வராவிட்டால், இவரே அந்த வேலையை செய்வார்... சித்தாளுக்கு முடியாவிட்டால், இவரே கல் சுமப்பார்... எல்லா வழியிலும் நிறுவனத்துக்கு நாலு காசு மிச்சம் பிடிக்க முடியுமான்னே இருப்பார்...
''இவருக்கு நேர் எதிர், விமல். வேலைக்கு சேர்ந்த குறுகிய நாளில், அதிக பணம் சேர்த்துட்டதாக சொல்வார்... முதலாளியிடம் நல்லவர்போல் காட்டி, மறைமுகமாக பணம் சுருட்டுவார்... 'துரோகி'ன்னே சொல்வார், செல்வராஜ்.''
''முதலாளிகிட்ட முறையிட்டிருக்கலாமே?''
''அது இன்னும் கொடுமை டாக்டர்... 'ஆடு, வெட்டுறவனை தான் நம்பும்...' என்பது போல, அவர், விமலை தான் நம்பினார். விமலைப் பத்தி புகார் செய்தால், 'உன் வேலையை நீ பார்'ன்னு சொல்லி அனுப்பி விடுவார்... பாவம் இவர், விமலின் தவறுகளை தடுக்க முடியாமல், முதலாளிக்கும் நம்ப வைக்க முடியாமல், ரொம்பவே மனம் புழுங்குவார்.''
''அந்த இடமும், விமலும் பிடிக்கலைன்னா உதறிட்டு, வேற இடத்துல வேலை தேடிகிட்டு நிம்மதியா இருந்திருக்கலாமே?''
''விட்டுப் போக முடியாத அளவுக்கு முதலாளியிடம் விசுவாசம். வேலை இல்லாமல் இவர் சிரமப்பட்ட நாளில், இவர் தான் நம்பி வேலைக்கு எடுத்திருக்கார்... அந்த நன்றி!''
''மேற்கொண்டு என்ன நடந்தது... ஏதாவது தகவல் உண்டா?''
''விசாரிச்சேன் சார்... அந்த விமல், ஒரு கட்டத்தில் தனியாக போய் தொழில் நடத்த ஆரம்பிச்சிருக்கார்... வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துகிட்டாரு... பல விஷயங்களில் மோசடி நடந்திருக்கு... 'மனசாட்சியே இல்லாமல் முதலாளியை ஏமாத்திட்டானே'ன்னு சக வேலைக்காரர்களிடம் சொல்லிச் சொல்லி வருந்துவாராம்...
''விமலை நினைச்சு புழுங்கியதால், இவரின் வேலைத் திறன் குறைந்து, வேலை இடத்தில் சில தவறுகளும் நடந்திருக்கு.
''கவனக்குறைவாக, கலவை இயந்திரத்தை இயக்கப் போய், வேலைக்காரர் ஒருவர் அடிபட்டு, ஆபத்தான நிலை ஆயிருக்கு...
''வேலைத்திறன் குறைஞ்சதால, முதலாளி ஒரு தொகையை கொடுத்து, வேலையை விட்டு போயிட சொல்லிட்டாராம்... இவருக்கு தாங்கலை... தன் விசுவாசத்தை புரிந்து கொள்ளாமல், தானும் ஒரு வியாபாரின்னு காண்பிச்சுட்டாரேன்னு கோபம். 'பணத்தை நீங்களே வச்சுக்குங்க'ன்னு சொல்லிட்டு வந்திருக்கார். வந்தவர், வேறு வேலைக்கு முயற்சிக்காமல், வீட்டிலேயே முடங்கிட்டார். வேலையை விட்டதால், இவருக்கு ஏற்பாடு செய்த கல்யாணமும் நின்னு போச்சு.''
பெருமூச்சு விட்டார், டாக்டர்.
''திருடியவரும் நல்லா இருக்கார்... திருட்டு கொடுத்தவரும் நல்லா இருக்கார்... தொழில் என்று வரும்போது, இப்படி சில சமாசாரங்கள் நடக்கும் என்று இருவருக்கும் தெரிஞ்சு, அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க... தேவையில்லாமல் இவர் ஏன் தன்னை வருத்திக்கணும்... கவலை புதை குழியில் விழுந்து அவதிப்படணும்,'' என்றார்.
''விமலின் துரோகத்தை, முதலாளியோட புறக்கணிப்பை, அவரால் தாங்க முடியவில்லைன்னு நினைக்கறேன், டாக்டர்!''
''அப்படி சொல்லி பரிதாபத்தை சம்பாதிக்கலாம். அதனால், என்ன பயன்? இவர் திறமையும் வீணாகி, வாழ்க்கையும் வீணா போனது தான் மிச்சம். மனோதிடம் இல்லாவிட்டால், யாராலும் எதையும் சாதிக்க முடியாது. 'சென்றது இனி மீளாது மூடரே... வீணில் சிந்தை அழியாது இன்று பிறந்தோம் என்றெண்ணி மகிழ்ந்திருப்போம்...' பாரதி சொன்னது. நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் இருப்பது தான் நல்ல மனநிலை. வீண் கவலையும், வருத்தமும் நோய்.
''இது, மனம் சம்பந்தப்பட்ட விஷயம். 'சைக்யாட்ரிஸ்ட்'டை பாருங்க... 'கவுன்சிலிங்' கொடுப்பார்... உங்கள் நண்பரும் ஒத்துழைப்பு கொடுத்தால், சீக்கிரம் நார்மலாகி, பழையபடி வேலைக்கு போகலாம்... காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு திறமையான ஆள், வீணாக போகக் கூடாது,'' என்ற டாக்டர், ஒரு உளவியல் மருத்துவரிடம் பேசினார். அந்த டாக்டரின் மொபைல் எண், விலாசம் கொடுத்தார்.
''நீங்க போகும்போது, முன்கூட்டி தகவல் சொல்லிட்டு போங்க,'' என்றார்.
நர்ஸ் எட்டிப் பார்த்து, ''ட்ரிப்ஸ் முடிஞ்சுது சார்,'' என்றாள்.
''வரச்சொல்லுங்க,'' என்றதும், செல்வராஜ், அறையிலிருந்து லேசான தெம்புடன் வெளிப்பட்டார்.
''உங்களைப் பற்றி நண்பர் சொன்னார்... அவ்வளவு நல்லவராமே நீங்கள்... திறமைசாலின்னும் சொன்னார்... யாரோ என்னமோ பண்ணிட்டாங்கன்னு உங்க வாழ்க்கையை நீங்க சீரழிச்சுக்கலாமா... மனதை திடமாக்கிக்குங்க...
''யார் கண்டது... உங்களை மாதிரி திறமையான, விசுவாசமான ஒரு நபருக்காக, எங்காவது ஒரு முதலாளி எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம்... கட்டுமானங்கள் காத்திருக்கலாம்... நீங்களே முதலாளி ஆகி, நுாறு பேருக்கு வாழ்க்கை கொடுக்கலாம்...
''எதிர்காலம் நமக்காக எத்தனையோ வாய்ப்புகளோடு காத்திருக்க, நாம் கடந்த காலத்தை நினைத்து, நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சேர்த்தே அழிக்கலாமா?'' என்று கேட்டார்.
''சரி பண்ணிக்கிறேன் டாக்டர்,'' என்றார், செல்வராஜ்.
ஆட்டோவில், அவரது இருப்பிடத்திற்கு அழைத்து வந்தேன். மருந்து, மாத்திரைகள் வாங்கினேன். சாப்பாட்டுக்கான ஏற்பாடும், சில வசதிகளையும் செய்து கொடுத்தேன். பத்து நாள், விடுமுறை எடுத்து, அவரை கவனித்து கொண்டேன். மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனேன். அவர் கொடுத்த, 'கவுன்சிலிங்'கில், செல்வராஜ் மனம் தேறி வந்தார். உடம்பும் தெம்பாகியது. அவர் குணமாகி, பழைய செல்வராஜாக மாறி வருவதை பார்த்து மகிழ்ச்சி.
அந்த நேரம், பழைய முதலாளி தேடி வந்தார்.
''உன் மனசை நோகடிச்சிட்டேன்... அந்த வேதனையில், நீ நோய்வாய்பட்டுட்டேன்னு கேள்விப்பட்டேன்... வருத்தமா இருந்திச்சு... இனி, என் கூடவே இரு... நான், உன்னை பார்த்துக்கறேன்... நீ, 'கன்ஸ்ட்ரக்ஷனை' பார்த்துக்க...
''அந்த விமல் விவகாரம் தெரியுமா, பேராசை புடிச்சவன்... மூணு மாடிக்கு ஒப்புதல் வாங்கி, ஆறு மாடி கட்டியிருக்கான்... 'ரூல் வயலேஷன், சி.எம்.டி.ஏ., நோட்டீஸ்' என, கட்டடத்துக்கு, 'சீல்' வச்சிட்டாங்களாம்... இப்ப, அவன் தொழில் செய்ய முடியாதபடி முடங்கிட்டானாம்,'' என்றபடி, செல்வராஜுடன், காரில் ஏறினார்.
செல்வராஜ், என்னை நன்றியோடு பார்க்க, ''நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை... என்னை நாலு மாதம் அரவணைத்து ஆதரித்தீர்கள்... அதற்கு என்னாலான சிறு கைமாறு,'' என்றேன்.
படுதலம் சுகுமாரன்