PUBLISHED ON : நவ 11, 2018

அடுத்த தலைமுறைக்கு...
நமக்குப் பின்
நம் வாரிசுக்கென
எதையெல்லாமோ
சேர்த்து வைக்கிற
நம் வாழ்வில்...
வாரிசுகளுக்கு
எதையெல்லாம் அவர்கள்
எடுத்துச் செல்ல வேண்டுமென
சொல்லிக் கொடுக்கிறோமா...
அதையும் இதையும்
செய்யாதே என
எதிர் மறையாய்
சொல்வதை விட்டு
அன்பாய் இரு
அடுத்தவரிடம்
மனம் விட்டுப் பேசி
மகிழ்ந்து
இதயம் விரி...
என விவரித்து
சொல்லியிருக்கிறோமா...
தாத்தா - பாட்டி
என நம் முன்
தலைமுறையினருக்கு
வணக்கம் சொல்லி
அவர்களை
மரியாதை செய்திட
மனதில் பதித்திருப்போமா...
அங்கே போகாதே
இங்கே போகாதே என
விரட்டும் நாம்
கோவிலுக்கு போ
நல்ல நண்பர்களுடன்
விளையாடு...
அதிகாலை கண் விழித்து
ஆதவனின் ஆதிக்கத்தை
காண் என
அருமையான செய்திகளை
அவர்களிடம் கடத்திச்
சென்றிருப்போமா...
அந்த நற்செயல்களை
அவர்களின் சந்ததிக்கு
எடுத்துச் செல்லும் கடமையை
அவர்களுக்கு புகட்டியிருப்போமா...
இயற்கை செல்வங்களை
இனிய வயல்வெளி
விவசாயத்தை...
இங்கேயுள்ள கனிம வளங்களை
சுகாதரத்தையும்
துாய்மையையும்
மழை நீரையும்
காடுகளையும் அதன்
உயிரினங்களையும்!
நாம் உணர்ந்து
வாழ்ந்தது போக அவர்கள்
தங்கள் தலைமுறைக்கு
கடத்திச் சென்றிட
மனிதப் பிறவியின்
பெருமையை
மாண்பு படுத்தி எடுத்தியம்பி
மகிழ்ந்திடுவோமா!
ரஜகை நிலவன்,
மும்பை.
