
அன்று, சனிக்கிழமை -
'ராயல் சைகான்' ஓட்டலுக்கு எதிரே இருக்கும், 'டைம் ஸ்கெயர்' என்ற பெரிய மைதானம் முழுக்க ஒரே கோலாகலமாக காட்சியளித்தது. சனி, ஞாயிறு அங்கு விடுமுறை தினம் என்பதால், ஜோடி ஜோடியாய், குடும்பம் குடும்பமாக அந்த மைதானத்தில் கூடி சந்தோஷமாக இருந்தனர். திடீர் கையேந்தி பவன்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் என்று, திருவிழா களை கட்டியிருந்தது. அவர்களது உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது.
'செல்பி' மோகம், வியட்நாம் இளம் தலைமுறையினரிடம் தலைவிரித்தாடுகிறது.
குழந்தை முதல், நடுத்தர வயதினர் வரை, மொபைலில் கண்ணை பதித்தபடியே நடந்து செல்கின்றனர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி, உணவு விடுதியில், இரவு உணவை முடித்து திரும்பினோம். பக்கத்திலிருந்த, 'நைட் மார்க்கெட்' சென்று ஒரு சுற்று சுற்றினோம். சென்னை, ரங்கநாதன் தெரு போல் கடைகள் ஏராளம். மக்கள் கூட்டம் அலைமோதியபடி எதை எதையோ வாங்கிக் கொண்டிருந்தனர்.
வேடிக்கை பார்த்தபடியே வந்தபோது, சில தமிழ் முகங்களை பார்க்க நேர்ந்தது. அவர்கள் யார், எங்கிருந்து வந்துள்ளனர் என்று விசாரித்தோம். பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர், துஷ்யந்த ஸ்ரீதர், 40 பேருடன் ஆன்மிக பயணம் வந்ததாகவும், சொற்பொழிவு முடித்து, சாப்பிடுவதற்காகவும், கடைகளை சுற்றிப் பார்க்கவும் வந்ததாக, கூறினர்.
மறுநாள் காலை, நாங்கள், அதிபர், ஹோச்சி மின் வசித்த மாளிகையை காணச் சென்றோம்.
இது தவிர, கதீட்ரல் சர்ச் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கத்தின்போது உருவாக்கப்பட்ட தபால் நிலையம், ஆகிவை பார்க்க வேண்டிய இடங்கள், என்றார், வழிகாட்டி.மூன்று கட்டடங்களுமே, 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை.
அதிபர் மாளிகையை, சுதந்திர மாளிகை என்றும், 'ரீ யூனிபிகேஷன் பேலஸ்' என்றும் அழைக்கின்றனர்.
பிரெஞ்ச் கட்டட கலைஞர் ஒருவர் தயாரித்த வரைபடத்தை அடிப்படையாக வைத்து, பிரான்ஸ் நாட்டிலிருந்தே கட்டுமான பொருட்களை எடுத்து வந்து, இந்த அரண்மனையை கட்டினராம்.
அரண்மனை என்றதும், நம் நாட்டில் காணப்படும் மாட மாளிகை கோபுரங்கள் போல், பிரமாண்டமான கலையழகு மிகுந்த கட்டடமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.
நம்மூர் சென்னை பல்கலை கழகம் அல்லது தலைமை செயலகம் மற்றும் எழிலகம் போன்றவற்றை நினைவில் கொள்ளுங்கள். அதையே கொஞ்சம், ஜிகினா வேலை செய்து, சுத்தமாக பராமரித்து வருவதை பாராட்டத்தான் வேண்டும்.
அடுத்து, கதீட்ரல் சர்ச் மற்றும் தபால் நிலையத்தை வெளியில் இருந்தே பார்த்தோம். உள்ளே சென்று பார்க்கும் அளவுக்கு சிறப்பாக ஏதும் இல்லை என்பது வெளியில் இருந்து பார்த்தபோதே தெரிந்து விட்டது.
இருநுாறு ஆண்டுகளான இந்த கட்டடங்களுக்கு, இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, சுற்றுலா பயணியரை அழைத்து வந்து, கட்டாயம் சுற்றிப் பார்க்க வைக்கின்றனர்.
இவற்றையெல்லாம், 'ஆஹா... ஓஹோ...' என்று பார்க்கும் நம் மக்கள், நம் நாடு முழுவதும் காணப்படும் தொன்மை வாய்ந்த பாரம்பரிய மிக்க இடங்களை பற்றிய பெருமித உணர்வு ஏதும் இல்லாமல், அதை சீரழித்து வருவதை நினைக்கும்போது, வேதனையாக இருந்தது.
ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் கோவில்கள், கோட்டைகள், அரண்மனைகள், எத்தனையெத்தனை வரலாற்று பொக்கிஷங்கள் குவிந்து கிடக்கின்றன...
நம் நாடு எவ்வளவு சிறப்பானது என்ற கர்வம், அப்போது ஏற்பட்டது என்னவோ நிஜம்.
மாலை, 4:00 மணிக்கு கம்போடியா செல்ல, விமானத்தை பிடிக்க வேண்டும். உணவு விடுதியில் சாப்பாடு கட்டித் தரச்சொல்லி, விமான நிலையத்திலேயே சாப்பிட்டு, விமானம் ஏறினோம்.
விமான பணிப்பெண்கள், கம்போடியாவின் பாரம்பரிய புடவையில் இருந்தனர். 'ஸ்வாகோம்' என்று வரவேற்றனர். அதற்கு, நல்வரவு என்று அர்த்தமாம்.
வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தோம். விமானம், வெளிநாட்டு சுற்றுலா பயணியரால் நிரம்பி வழிந்தது. ஒரு மணி நேர பயணத்தில் கம்போடியா நாட்டின் முக்கிய நகரமான, 'சியாம் ரீப்' விமான நிலையத்தில் தரை இறங்கியது.
'சியாம் ரீப்' விமான நிலையமானது, புத்தர் கோவிலை நினைவுப்படுத்தும் விதத்தில், கூரையில் ஓடு பதித்து காணப்பட்டது. விமான நிலையத்தில் ஏக கெடுபிடி. ஒவ்வொரு பயணியரையும், அவர்கள் உடைமைகளையும் தீவிரமாக பரிசோதித்த பின்னரே, வெளியேற அனுமதிக்கின்றனர். எனினும், விமான நிலைய பணியாளர்கள், எளிமையாகவும், நட்புடனும் பழகுகின்றனர்.
விமான நிலையத்தின் வெளியே, எங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்ட, ஒட்டய் என்ற இளம்பெண், எங்கள் பெயர் எழுதிய அட்டையை பிடித்தபடி, வரவேற்றார்.
இந்த பயணத்தின்போது, எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர்களில் சிறப்பானவர் என்று இவரை கூறலாம். புகைப்பட கலையில் கெட்டிக்காரியாக இருந்தார்.
இங்கும், எங்களுக்காக, பெரிய, 'ஏசி' வேனை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஊருக்குள் நுழையும்போது, ஏதோ நம்ம தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டத்தினுள் நுழைந்ததைப் போல், 'ஹோம்லி'யாக இருந்தது.
நான்கு வழி பாதையும், பாதையின் ஓரத்தில், சின்ன சின்ன கடைகளும், வீடுகளும் எளிமையாக தோற்றமளித்தன.
இங்கு, கார், வேன், பஸ் அனைத்தும், வலது கை, 'டிரைவிங்' தான்.
நான்கு பேர் பயணிக்க கூடிய, 'டுக் டுக்' எனப்படும், ஆட்டோ ரிக் ஷாக்கள் நிறைய ஓடுகின்றன. அதன் ஓட்டுனர்கள், நன்றாக ஆங்கிலம் பேசுகின்றனர்.
ஏகப்பட்ட இந்திய உணவகங்கள் காணப்பட்டன. 20 நிமிடத்தில், நாங்கள் தங்க வேண்டிய, 'சோமதேவி அங்கோர் ஓட்டல்' வந்து விட்டது. 'வெல்கம் டிரிங்க்ஸ்' கொடுத்து, இன்முகத்துடன் வரவேற்றனர்.
வியட்நாமில் இறுகிய முகங்களையே பார்த்த எங்களுக்கு, இந்த வரவேற்பு இதமாக இருந்தது.
ஓட்டலின் வரவேற்பு கூடத்தில், பெரிய விஷ்ணு சிலையும், அதன் இருபுறங்களில் அம்சபட்சி சிற்பமும், அலங்காரமாக காட்சியளித்தன. அதன் பின்புறம், ராமாயண கதாபாத்திர சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ஓட்டல் வசதியாக, சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்தது.
குளித்து, கொஞ்ச நேரம், 'ரிலாக்ஸ்' செய்த பின், இரவு, 7:00 மணி அளவில், சில அடி துாரத்திலிருந்த, பஞ்சாபி சிங் ஒருவர் நடத்தும் சைவ உணவு விடுதிக்கு சென்று, சூப், சப்பாத்தி, தோசை, உப்புமா ஆகியவற்றை, 'ஆர்டர்' செய்தோம். சுடச்சுட, அருமையான சுவையுடன் தயார் செய்து, இன்முகத்துடன் பரிமாறினார், உரிமையாளர் சிங்.
ஓட்டலிலிருந்து, 100 மீட்டர் துாரத்தில், இரவு முழுவதும் இயங்கும், 'நைட் மார்க்கெட்' இருக்கிறது என்று, வழிகாட்டி சொன்னதை நினைவுபடுத்தி, அங்கு செல்ல கிளம்பினோம்.
நாங்கள் சென்ற மூன்று நாடுகளிலுமே, 'நைட் மார்க்கெட்' இருக்கின்றன. சுற்றுலா பயணியரின் வசதிக்காக, இரவு முழுவதும் இயங்குவதாக தெரிவித்தார், வழிகாட்டி. நம்மூர், 'பிளாட்பார்ம்' கடைகள் போல தான் இவையெல்லாம். சுற்றுலா பயணியரை கவர்வதற்காகவே, 'நைட் மார்க்கெட்' என்று பெயர் சூட்டி, நம் பர்சை கபளீகரம் செய்கின்றனர்.
உணவு விடுதி உரிமையாளர் சிங், 'டுக் டுக் ரிக் ஷாவில் சென்று விடுங்கள்...' என்று கூறி, அவரே ஒரு ரிக் ஷாவை பேசி, எங்களை ஏற்றி அனுப்பினார்.
வியட்நாமில் நாங்கள் பார்த்த, 'நைட் மார்க்கெட்' போலவே, இங்கும், ஏகப்பட்ட கடைகள். கடைகளை சுற்றி பார்த்தபடி வந்தபோது, எதிரில், வியட்நாமில் சந்தித்த, துஷ்யந்த் ஸ்ரீதரின் ஆன்மிக குழுவினர் தென்பட்டனர். அவர்களிடம் இரண்டொரு வார்த்தை பேசி, அங்கிருந்து நடந்தே ஓட்டலுக்கு திரும்பினோம்.
கே.ஆரிடம் பேச, மொபைல் போனை எடுத்தால், 'வாட்ஸ் - ஆப்'பில், அவரே ஒரு, வீடியோவை அனுப்பி இருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தால்...
— தொடரும்.
- ந.செல்வி