sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 11, 2018

Google News

PUBLISHED ON : நவ 11, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —

நான், 32 வயது பெண். படிப்பு: பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஆட்டோமொபைல் உதிரி பாக கடை வைத்துள்ள, மாற்றுத்திறனாளி ஒருவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் செய்து கொண்டேன். ௫ வயதில் ஒரு மகன் உள்ளான்.

சமீபத்தில், என் கணவர், 'டெங்கு' காய்ச்சலில் மரணமடைந்தார். என் மகன் பெயரில், வங்கியில் அவர், இரண்டு லட்ச ரூபாய், 'டிபாசிட்' செய்துள்ளார். நான், பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளேன்.

என் அலுவலக உயர் அதிகாரி, என்னை மறுமணம் செய்ய விரும்புகிறார். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி விட்டேன்; தொடர்ந்து நச்சரித்து வருகிறார். என் மகனை, பெற்றோரிடமே விட்டு வரவேண்டுமென்று, 'கண்டிஷனும்' போடுகிறார்.

இதில் எதிலுமே எனக்கு உடன்பாடு இல்லாததால், தட்டிக்கழித்து வருகிறேன். அவரது நண்பர்கள் மூலமாக துாது விடுகிறார்.

வேலையை விட்டு விடலாம் என்றால், வேறு வேலை உடனடியாக கிடைக்காது. நான் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன். யோசனை தாருங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

'இறந்த கணவனின் நினைவுகளுடனேயே ஆயுளுக்கும் வாழப் போகிறேன்... மகனின் எதிர்காலத்துக்காக, என் சுயத்தை சுருக்கிக் கொள்ள தயாராகி விட்டேன்...' என்பதெல்லாம், இக்காலத்துக்கு பொருந்தாத, தேவையற்ற தியாகம் என்றே கூறுவேன்.

மறுமணம் தேவை தான். ஆனால், எத்தகைய மறுமணம் செய்து கொள்ள போகிறோம் என்பதில், ஒரு மனத் தெளிவு அவசியம்.

உன்னை மறுமணம் செய்ய விரும்பும் மேலதிகாரி, திருமணம் ஆனவரா, விவாகரத்து பெற்றவரா, விதவனா என்பதை, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. மணம் ஆனவர் என்றால், அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்து, வரவேண்டும். அது, ஒரு குருவி கூட்டை கலைப்பதற்கு சமம். மறுமணம் என்கிற பெயரில், ஒரு, 'சைக்கோ'விடம் போய் சிக்கிக் கொள்ளக் கூடாது.

உன்னை விரும்பும் மேலதிகாரியை பற்றி, உள்ளும் புறமும் ஆராய வேண்டும்.

தன்னுடன் பழகும் ஆண், உடல் ரீதியாக பழகுகிறானா அல்லது ஆன்ம ரீதியாக பழகுகிறானா என்பதை, ஒரு பெண்ணால் துல்லியமாக கணித்துவிட முடியும். மேலதிகாரி, தவறான நோக்கத்துடன், மறுமண ஆசையை துாண்டுகிறான் என தெரிந்தால், அவனை முற்றிலுமாக நிராகரி.

'உங்களை மறுமணம் செய்து கொள்ள தயாரில்லை... என் முடிவை தெரிந்து, நீங்கள் விலகினால் நல்லது. தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால், நிர்வாகத்திடம் புகார் செய்வேன். நிர்வாகம் கண்டுகொள்ளா விட்டால், வேலையை விடவும் தயாராக இருக்கிறேன்...' என, ஆணித்தரமாக கூறு.

அவர் சார்பாக, ஆண் நண்பர்கள் துாது வந்தால், 'ஒரு தீய செயலுக்கு துணை போகாதீர்; இனி, நண்பர் சார்பாக பேச வராதீர். நான் கோபக்காரி...' என, எச்சரி.

தற்சமயம், வேலையை விட்டு விட்டாலும், உன்னை ஆதரிக்க பெற்றோர் இருக்கின்றனர். போர்க்கால அவசரமாய் வேறொரு வேலையை தேடு. வேறு வேலை கிடைக்காது என்கிற காரணத்துக்காக, மேலதிகாரியை சகித்துக் கொண்டாய் என்றால், அது, அவருக்கு உடன்படுவதாக அர்த்தமாகிவிடும்.

புதிதாய் எங்கு பணிக்கு சென்றாலும், அங்கும் மேலதிகாரிகளின் தொந்தரவு இருக்கவே செய்யும். ஒரு நிரந்தரமான உறவு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள். உன் பெற்றோரிடம், மறுமண விருப்பத்தை கூறி, தகுந்த வரன் பார்க்க சொல். வரன் பார்ப்பதில், நிதானமும், பொறுமையும் தேவை.

பார்க்கும் வரன், 35 வயதை தாண்டாமல், விதவனாக இருந்தால் நலம். உன்னை திருமணம் செய்யும் அவன், உன் மகனை, தன் மகனாக பாவித்து அன்பு செலுத்துவானா, பத்துக்கு ஐந்து பழுதில்லாமல் இருக்கிறானா என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும். சாத்தியமென்றால், அவன் உறவு, நட்பு வட்டத்தையும் விசாரித்தல் நலம்.

உன் கல்வித் தகுதியை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவுக்கு உயர்த்து.

முதுகலை கணினி அறிவியல் படி. பெண்களை கண்ணியமாக நடத்தும் தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.

எங்கு பணிக்கு போனாலும், 'எளிதில் எதற்கும் மசிய மாட்டாள், இவளிடம் வாலாட்டினால் வாலை ஒட்ட வெட்டி விடுவாள்...' என்கிற இமேஜை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மறுமணம் செய்து கொள்வதானால், அடுத்த ஆறு மாதம், ஒரு ஆண்டிற்குள் பண்ணிக் கொள். மகனுக்கு வயது ஏற ஏற, மறுமணத்தின் வெற்றி சதவீதம், பாதாளத்தில் வீழ்ந்து விடும்.

பெண்ணின் வாழ்க்கை, உதை பந்தாட்டம் போன்றது. எதிர் அணியில் நுாற்றுக்கணக்கான ஆண்கள், உன் அணியில் நீ மட்டும். உன் பக்கம், கோலும் விழுந்து விடாமல், எதிர் பக்கம் கோல் போட வேண்டும். ஆட்டம், 90 நிமிடம் அல்ல, ஆயுள் முழுக்க. துவண்டு போகாமல், தாக்குதல்களை முறியடிக்கும் யுக்திகளை வடிவமைத்துக் கொள்.

மகன் மற்றும் பெற்றோரின் நலன் பாதிக்காமல், நீ மறுமணம் செய்து கொள். வாழ்த்துகள் மகளே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us