PUBLISHED ON : செப் 08, 2013

எழுபது வயதான மூர்த்திக்கு, வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. அவர் உள்ளம் அமைதியை இழந்து, வேதனையில் உழன்று கொண்டிருந்தது. ஒரு காலத்தில், சொர்க்கமாக தோன்றிய வீடு, இப்போது அவருக்கு நரகமாக இருந்தது. அன்பு நிறைந்திருந்த இடத்தில் வெறுப்பும், கரும்பாக இனித்த, இல்வாழ்க்கை வேம்பாக கசந்தது. இல்வாழ்க்கை, இத்தனை வஞ்சகம் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிந்திருந்தால், பிரம்மச்சாரியாகவே இருந்திருக்கலாம். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எங்காவது போய் விடலாமா அல்லது ஏதேனும் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து சாகும் வரை, அங்கேயே இருந்து விடலாமா என்ற எண்ணம் தான், கடந்த சில நாட்களாகவே, அவர் மனசுக்குள் வளைய, வந்து கொண்டிருந்தது.
அவரை அதிகம் பாதித்த விஷயம், அவரை உயிருக் குயிராக நேசித்த, அவர் மனைவி பார்வதி கூட, அவரை ஒரு பொருட்டாக கருதவில்லை என்ற ஆதங்கம் தான்.
பெற்றோர், மனைவி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும், எந்தக் குறையுமின்றி செய்து முடித்தவரின் உள்ளம், இப்போது அன்புக்காகவும், பரிவுக்காகவும் ஏங்கியது.
யார் எப்படி நினைத்தாலும், நடந்தாலும் பரவாயில்லை. தன் இன்ப - துன்பங்களில் எல்லாம் முழுமையாக பங்கு கொண்ட, தன் மனைவிக்கு, தான் எப்படி, எதற்காக வேண்டாதவன் ஆகிப் போனோம் என்பது புரியாமல், மனம் கலங்கினார் மூர்த்தி.
எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், எத்தனை சாதனைகள் படைத்தவராக இருந்தாலும், வயதாகி விட்டால் அவர்கள், ரத்த, சொந்த, பந்தங்களுக்கு கூட செல்லாக் காசுகள் தானோ என்று, தம்மை தாமே, அவர் கேட்டுக் கொண்டார்.
வாழ்க்கையில் குப்பை மேடாக இருந்து, கோபுரமாக உயர்ந்த மூர்த்தி, தான் மீண்டும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்டோம் என்று எண்ணி எண்ணி வருந்தினார்.
விரக்தியின் பிடியிலிருந்து விடுபட, அவர், எப்போதாவது செல்லும் நேரு பூங்காவிற்கு, காலில் செருப்பை மாட்டிக் கொண்டு புறப்பட்டார்.
கசப்பான அனுபவங்களை மனதில் அசை போட்டவராக தெருவில் சென்று கொண்டிருந்த மூர்த்தியை, அவரது பெயரை சொல்லி, யாரோ ஒருவர் அழைக்க, நிமிர்ந்துப் பார்த்தார்.
எதிரே, அவர் எப்போதோ பார்த்துப் பழகிய முகச் சாயலுடன், ஒல்லியான மனிதர் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து, ''நீங்கள்...'' என்று, அவர் கேள்வியை முடிக்கும் முன்பே, அந்த நபர், ''என்ன மூர்த்தி... என்னை அடை யாளம் தெரியலையா?'' என்று கேட்டதும், அவரின் குரலை வைத்து அடையாளம் கண்டு கொண்ட மூர்த்தி, ''டேய்... டேய் நீ அன்பழகன் தானே?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
''அப்பாடி... எப்படியோ என்னை அடையாளம் கண்டுகிட்டே! அது சரி. நீ எங்கே இருக்க, எப்படி இருக்க, என்ன செய்துட்டு இருக்க, இப்போ எங்கே போயிட்டுருக்கே?'' என்று சரமாரியாக கேள்வி கேட்க, ''தெருவுல நின்னுகிட்டு என்னோட கதையை சொல்ல முடியாது அன்பு. வா... பக்கத்துல இருக்கிற நேரு பூங்காவுல உட்கார்ந்து பேசுவோம்,'' என்று மூர்த்தி சொன்னதும், இருவரும் பூங்காவை நோக்கி நடக்கலாயினர்.
மூர்த்தியும், அன்பழகனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த, இணை பிரியாத நண்பர்கள். அன்பழகன் தமிழார்வம் மிக்கவர்; மூர்த்தியும் அப்படியே. இருவரும் தினமும், மாலை வேளையில், வகுப்புகள் முடிந்ததும் கல்லூரி நூலகத்தில், குறைந்தது ஒரு மணி நேரமாவது, தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அன்பழகன், அப்போதே தமிழில், காதல் ரசம் ததும்பும் கவிதைகள் புனைவதில் கெட்டிக்காரர். பல வார இதழ்கள், அவரது கவிதைகளை வெளியிட்டன. அது, அன்பழகனுக்கு கல்லூரி மாணவ - மாணவியர் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது. 'கவிஞர் அன்பழகன்' என்றே, அவரது நண்பர்கள் அவரை அழைத்தனர்.
வாழ்க்கை சுமை அறியாது, சுதந்திரப் பறவைகளாக பறந்து, திரிந்த அன்பழகனும், மூர்த்தியும் பிரியும் தருணம் வந்தது. அப்போது அன்பழகன் அழுத்தமாக சொன்ன ஒரு விஷயம், இப்போது மூர்த்தியின் நினைவுக்கு வந்தது.
'மூர்த்தி... குடும்பம், மனைவி, மக்கள் எல்லாம் போலித்தனமான உறவுகள். பாசம், நேசம், பரிவு, அன்பு இவற்றை குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே காட்டுவதும், பின் அவற்றை யாருக்கு, நாம் கொடுத்தோமோ அவர்களிடமிருந்து திரும்ப கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் வடிகட்டிய சுயநலம். நாம் எதிர்பார்க்கும், அது கிடைக்காது போனால், அதை நினைத்து, 'எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டோம்' என்று, பின்னால் சுய பச்சாதாபப்படுவதும் மிகப் பெரிய முட்டாள்தனம். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான், சம்சார சாகரத்தில் மூழ்கித் தவிக்கின்றனர்...'
நண்பன் அன்பழகன், அப்போது இவ்வாறு அவரிடம் சொன்னது, இப்போது அவர் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டது போல் தோன்றியது மூர்த்திக்கு.
பூங்காவில் இருந்த பெஞ்சில், நண்பர்கள் இருவரும் அமர்ந்ததும், அன்பழகன் கேட்டார்.
''இப்ப சொல்லு மூர்த்தி... எப்போதும் சிரிச்ச முகத்துடனேயே இருப்பியே... என்ன ஆச்சு உனக்கு? ஏன் எதையோ பறிகொடுத்தவன் மாதிரி இருக்க? உனக்கு தான் அன்பான மனைவி, அருமையான குடும்பம்ன்னு கடவுள் தந்துருக்காரே. அப்புறம் என்னடா எதையோ இழந்துட்டு நிக்கறவன் கணக்கா இருக்கே?''
நண்பனின் இதமான வார்த்தைகள், மூர்த்தியின் நொந்து போன இதயத்திற்கு, ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது.
''அன்பு... ரொம்ப நாளா என் இதயத்தை அழுத்திக்கிட்டு இருந்த பாரத்தை யார்கிட்டயாவது சொல்லி, இறக்கி வைக்கணும்ன்னு நினைச்சுக் கிட்டுருந்தேன். இப்பதான், அந்த வாய்ப்பு உன் மூலமா எனக்கு கிடைச்சிருக்கு,'' என்று கூறிவிட்டு, தன் கதையை சொல்ல ஆரம்பித்தார் மூர்த்தி.
கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், சில ஆண்டுகள், பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதர - சகோதரிகளுக்காக அல்லும் பகலும் உழைத்து, கரை சேர்ப்பதற்குள், தன் இளமை, கையிருப்பு எல்லாம் கரைந்து வெறும் ஆளாக நின்றதையும், பின், தன் வயதான பெற்றோரின் திருப்திக்காக, அவர்கள் தேர்ந்தெடுத்த பெண் பார்வதியை, வாழ்க்கைத் துணைவியாக ஆக்கிக் கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளுக்கும், ஒரு பையனுக்கும் தகப்பன் ஆகி, குடும்ப சுமையை ஏற்று, அதை நிறைவேற்றுவதாக கூறியவர்...
தற்போது தன்னை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும், தன் மனைவி பார்வதி கூட, தன்னை ஓரம் கட்டி வருவதாகவும், விலாவாரியாக சொல்லி முடித்தார் மூர்த்தி.
''இவ்வளவுதானா... இன்னும் சொல்ல வேண்டியது ஏதாவது இருக்கா மூர்த்தி?''
அக்கறையுடன் கேட்ட நண்பன் அன்பழகனிடம் ''அவ்வளவுதான் அன்பு... நீ என்ன செய்துக்கிட்டு இருக்கே? சின்ன வயசுல உன் உடம்பு கட்டு மஸ்தா இருக்குமே, இப்ப துரும்பா இளைச்சுப் போயிருக்கியே... உடம்புக்கு முடியலையா அன்பு?'' என்று கேட்டார் மூர்த்தி.
''இங்கே உட்கார்ந்து நாம பேசுறதைவிட, இப்ப நீ என் கூட, ஒரு இடத்துக்கு வர்றே... அங்கே வச்சி என் கதையைச் சொல்றேன்,'' என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் அன்பழகன்.
ஒன்றும் புரியாமல் அன்பழகனைப் பின்தொடர்ந்தார் மூர்த்தி.
மூன்று தெருக்களைக் கடந்ததும், நான்காவது தெருவில் இருந்த நான்கு குடும்பத்தினர், தனித்தனியாக சிறிய வீடுகளில் குடியிருக்கும், ஒரு காம்பவுண்டுக்குள் மூர்த்தியை அழைத்துச் சென்றார். அங்கு பூட்டியிருந்த ஒரு வீட்டை திறந்து, '' உள்ளே வா மூர்த்தி... இதுதான் என்னோட பங்களா,'' என்று ,சிரித்துக் கொண்டே கூறினார்.
அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார் மூர்த்தி; அவரது கண்கள் வீட்டை அலசின.
டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை,அழுக்குப் படிந்து பிசுபிசுப்பாய் இருந்தது. அன்பழகன் உடுத்தி கழற்றிப் போட்ட, அவரது துணிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. சமையலறையிலிருந்து முகத்தைச் சுளிக்க வைக்கும், ஒருவிதமான நெடி வந்து கொண்டிருந்தது.
பிளாஸ்கில் இருந்து சூடான காபியை, ஒரு தம்ளரில் ஊற்றிக் கொண்டே சொன்னார் அன்பழகன்...
''மன்னிச்சிடு மூர்த்தி... சூடா வடையோ, பஜ்ஜியோ செஞ்சி, சட்னியோடு பரிமாற பெண்டாட்டி, பிள்ளைகள்ன்னு எனக்கு யாரும் கிடையாது. இந்த காபி கூட, பக்கத்து வீட்டு பையன்தான் ஓட்டல்ல இருந்து வாங்கிக்கிட்டு வந்தான்.''
இதைச் சொல்லும் போது, அன்பழகன் வாழ்க்கையில் எதையோ தொலைத்துவிட்டு ஏங்குவதை உணர்ந்தார் மூர்த்தி.
தொடர்ந்து பேசினார் அன்பழகன்...
''நான் கல்யாணம் செய்துக்கிலையே தவிர, பல பொண்ணுங்களோடு, பொழுதுகளைக் கழிச்சுருக்கேன். பெண்டாட்டி பிள்ளைகளை ஒரு சுமைன்னு நினைச்சி, நான் பாழ் கிணத்துல விழுந்துட்டேன். நான் சம்பாதிச்ச சொத்தெல்லாம் போனதைப் பத்தி கூட நான் கவலைப்படலே. வெளியில் சொல்ல முடியாத, ஒரு நோயினால் நான் பீடிக்கப்பட்டிருக்கேன் மூர்த்தி... நீயே கேள்விப்பட்டிருப்பே, அந்த நோயை உயிர்க்கொல்லி நோயின்னு டாக்டர்கள் சொல்றதை, இப்போ நான் அணு அணுவா செத்துக் கிட்டிருக்கேன் மூர்த்தி...
''என் கவலைகளை மறக்கிறதுக்காக பூங்கா, நூலகம், முதியோர் இல்லம், அனாதை இல்லம்ன்னு சுத்திக்கிட்டு வர்றேன். எனக்கு பென்ஷன் பணம், பதினையாயிரம் வருது. அதுல, ஐயாயிரத்தை என் சொந்த செலவுக்கும், மீதி பத்தாயிரத்தை அனாதைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் செலவு செய்துட்டு வர்றேன்.
''வீட்டைப் பெருக்கி, சுத்தம் செய்யவோ, என் அழுக்குத் துணிகளை துவைச்சிப் போடவோ யாரையாவது வேலைக்கு வச்சுக்கிட்டா, அதுக்கு மூவாயிரம், நாலாயிரம் ஆயிருமேன்னு தான், இப்படி வீட்டை நாற்றம் பிடிக்கிற அளவுக்கு வச்சிருக்÷ன்.
''சாப்பாட்டையும் நானே சமைச்சு சாப்பிட்டுக்கறேன்... நான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவன்கிற விஷயம், இங்கே இருக்கிற யாருக்குமே தெரியாது, அப்படித் தெரிஞ்சிருந்தா எப்பவோ என்னை இங்கே இருந்து விரட்டியடிச் சிருப்பாங்க. இப்போ சொல்லு மூர்த்தி, மனைவி மக்களுடன் ஒரு குடும்பஸ்தனா வாழ்றது நல்லதா... இல்லே என்னை மாதிரி ஒண்டிக் கட்டை வாழ்க்கை வாழ்றது நல்லதா...'' என்றார் அன்பழகன்.
நண்பன் அன்பழகனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் மூர்த்தி. தன்னை அறவே மறந்து, இப்போது நண்பன் அன்பழகனுக்காக பச்சாதாபப்பட்டது அவரது மனசு.
தொடர்ந்தார் அன்பழகன்...
''மூர்த்தி... நான் தான் வாழ்க்கையை சரியா புரிஞ்சுக்காம நெறிகெட்டு வாழ்ந்து, என்னை நானே அழிச்சிக்கிட்டேன். ஆனா, நீ வாழ்க்கையை ரொம்ப சரியா புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்திருக்க, வாழ்ந்துக்கிட்டு வர்றே... உன் கடமைகளை, நீ சரியா செஞ்சுட்டேங்கற திருப்தி உனக்கு இருக்கு... ஆனா, அதே நேரத்துல நீ செஞ்ச கடமைகளுக்கு, உன் மனம் கூலியை எதிர்பார்க்கிறது. நீ, உன் குடும்பத்துக்கு செஞ்ச தியாகத்துக்கு, உன் குடும்பத்தாரிடமிருந்து கைம்மாற்றை எதிர்ப்பாக்கிறேயே இது, இதுவரை நீ செஞ்ச தியாகத்துக்கு துரோகம் செய்யறதா ஆகாதா மூர்த்தி... பகவான் கீதையில சொன்ன மாதிரி, 'நீ உன் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்பது இல்லறத்தானுக்கும் பொருந்தும். 'கடமையை செய்தோம்' என்று சந்தோஷப்படு. பலனை நினைத்து துக்கப்படாதே... அது, நீ இதுவரை செய்த தியாகத்தை அர்த்தமற்றதாக ஆக்கி விடும்.
''இனி மீதமிருக்கிற வாழ்நாளை, உன் பேரக் குழந்தைகளோடு சந்தோஷமா போக்கு. அதுல உன் கவலை எல்லாம் இருக்கிற இடம் தெரியாம ஓடிப் போகும். நம்ம உறவுகள் நம்மகிட்ட காட்டுற அன்பை மட்டும் பாசம்ன்னு எடுத்துக்கக் கூடாது. அவங்க, நம்மகிட்ட காட்டுற கோபமும், பாசம் தான் மூர்த்தி... உனக்கு எல்லாமே தெரியும். இதுக்கும் மேலே நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. சரி சரி... இருட்டிருச்சி; நீ புறப்படு. யார் கவலைப்படாட்டியும் உன்னைக் காணலேன்னு உன் சம்சாரம் கவலைப் பட்டுக்கிட்டு இருப்பாங்க,'' என்றார் அன்பழகன்.
நண்பன் அன்பழகன் சொன்னது அனைத்தும் உண்மைதான் என்று மூர்த்திக்கு உரைத்தாலும், அவரது மனைவி, அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருப்பாள் என்று சொன்னது, அன்பழகன் தன்னை கேலி செய்கிறானோ என்று, அவரை எண்ண வைத்தது.
வீட்டை அடைந்த மூர்த்தியை, வாசலில் நின்றபடி வழக்கமான அர்ச்சனைகளுடன் வரவேற்றாள், அவரது மனைவி பார்வதி.
''இவ்வளவு நேரமா எங்கே போயி தொலைஞ்சீங்க... வயசான காலத்துல வெளியில போனமா, சட்டு புட்டுன்னு திரும்பினோம்ன்னு இல்லாம, இருட்டின பிற்பாடு வர்றீங்களே... உங்க மனசுல என்ன இளவட்டம்ன்னு நினைப்போ! கை, கால் கழுவிட்டு வந்து சாப்பிட்டுத் தொலைங்க.''
வழக்கம் போல், எதிர்கணை தொகுக்காமல் சிரித்தபடியே வீட்டிற்குள் சென்றார் மூர்த்தி.
அவர் மனசு சொன்னது, 'அன்பழகன் சொன்ன அனைத்துமே உண்மை. இந்த கோபமே பார்வதி என்மீது வைத்திருக்கும் முரட்டுத்தனமான பாசம். அவளும் தான் குடும்பத்துக்காக, ஓடாக உழைத்து களைத்துப் போனவள். இருந்தாலும், என் மீது அக்கறையும், பாசமும் இன்னும் குறையாமல் தான் வைத்திருக்கிறாள். நான்தான் அவளை தவறாகப் புரிந்து கொண்டேன். சுகமும், சுகத்தில் சோகமும் கலந்திருப்பது தான் வாழ்க்கை. அதற்கு நானும், என் நண்பன் அன்பழகனும் சரியான அத்தாட்சிகள்...' மனதிற்குள் சொல்லிக் கொண்டார் மூர்த்தி.
***
விஷ்ணுப் பிரியன்
