தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்பெனும் யாழை மீட்டுகிறாள்!

அன்பெனும் யாழை மீட்டுகிறாள்!

அன்பெனும் யாழை மீட்டுகிறாள்!


PUBLISHED ON : மார் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''வாங்கப்பா, வாங்கம்மா!'' பெற்றோரை வரவேற்றாள், ஆனந்தி.

''எப்படிம்மா இருக்கே... ஊர் பக்கமே வர்றதில்லை... பேரனும் விடுதிக்கு போயிட்டான்... இருந்தாலும், வீட்டை விட்டு நாலு நாள் ஊர் பக்கம் வரமாட்டேங்கிறே,'' என, மகளிடம் குறைபட்டுக் கொண்டாள், அம்மா.

''என்னம்மா பண்றது... சரி, உள்ளே வாங்க!'' அவர்கள் எடுத்து வந்த பெட்டிகளுடன் உள்ளே போனாள், ஆனந்தி.

''நீங்க வந்திருக்கிற சமயம், எனக்கு ஆபீஸ் வேலையாக, இரண்டு நாள் வெளியூர் போக வேண்டியிருக்கு... மகளோடு இருங்க, வந்திடறேன்,'' என்றான், ஆனந்தியின் கணவன், சேகர்.

''போயிட்டு வாங்க மாப்பிள்ளை... நாங்க நாலு நாள் இருந்துட்டு தான் போகப் போறோம்,'' என்றார், ஆனந்தியின் அப்பா.

மூளை செயல் குறைந்து, நடப்பது எதையுமே புரிந்து கொள்ள முடியாமல், ஒரு பொம்மையை போல, கிழிந்த நாராய் படுக்கையிலேயே பொழுதை கழிக்கும் அம்மாவின் அருகில் வந்தான், சேகர்.

''வெளியூர் போறேம்மா... இரண்டு நாளில் வந்திடுவேன்... ஆனந்தி, உங்களை பார்த்துப்பா,'' என்றான்.

அவளிடம் பதில் இல்லை. வெறித்த பார்வை, அபூர்வமாக எப்போதாவது வாயை திறந்து இரண்டொரு வார்த்தைகள் வரும்.

''சரி... வரேன், ஆனந்தி... அத்தை, மாமாவை, நல்லபடியா கவனி... கோவிலுக்கு அழைச்சுட்டு போ,'' என்றான்.

''அம்மா, ஒரு அஞ்சு நிமிஷம்... அத்தைக்கு டிபன் கொடுத்துட்டு வந்திடறேன்,'' என்றாள்.

மாமியாரை, கட்டிலில் சாய்வாக உட்கார வைத்து, ''சாப்பிடுங்கம்மா... ஊரிலிருந்து, அப்பா - அம்மா வந்திருக்காங்க... இட்லியும், தக்காளி சட்னியும் செய்தேன்... வள்ளியை, கடையிலிருந்து வடை வாங்கிட்டு வரச்சொன்னேன்... உங்களுக்கு, செரிமானம் ஆகாது... அதான் தரலை,'' என்று, இட்லியை, ஊட்டினாள்.

''உங்களுக்கு, உளுந்து வடை பிடிக்கும் தானே... ஒருநாள், வீட்டிலேயே செய்து தரேன்,'' என, பேசியபடியே இட்லியை கொடுத்து, வாயை துடைத்து, மாமியாரை, படுக்க வைத்தாள்.

சி.டி.,யை போட்டு, ''சாமி பாட்டு, வச்சிட்டு போறேன்... கேளுங்க,'' என்றாள்.

'கற்பகம் என்னும் கடவுளின் கருணை பெற வேண்டும்; பிள்ளையார் பட்டியில் அருள் தரும் கணபதி பெருமானே...' பாடல் ஒலிக்க, வெளியே வந்தாள்.

''அப்பா - அம்மா... வாங்க, சாப்பிடுவோம்!''

அவர்களுக்கு, தட்டில் இட்லியை வைத்தவள், தானும் சாப்பிட உட்கார்ந்தாள்.

''ஆனந்தி... இன்னும் ஏன், உன் மாமியாரோட கஷ்டப்படற... இந்த மாதிரி படுக்கையில் கிடக்கிறவங்களை, நல்லபடியா பார்த்துக்க எத்தனையோ இடம் இருக்கு... அங்கே விட்டுட்டு, நிம்மதியா இருக்கலாமே,'' என்றார், அப்பா.

''புருஷன் - பெண்டாட்டி, ஒண்ணா சேர்ந்து ஒரு இடம் போக முடியலை... வீட்டுக்கு ஒருத்தர் காவல் இருக்க வேண்டியிருக்கு... இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கஷ்டமோ,'' சாப்பிட்டபடியே, மகளிடம் கேட்டாள், அம்மா.

''கஷ்டம்ன்னு யாரும்மா சொன்னது... எனக்கு கல்யாணமான புதிதில், அவங்க காட்டிய அக்கறையை, இப்ப நான் திரும்ப அவங்ககிட்ட காண்பிக்கிறேன்... உன் மாப்பிள்ளைக்கு முசுடு குணம்... எதுக்கு கோபிப்பாரு, எதுக்கு கத்துவாருன்னு புரியாது. அவர் சத்தம் போடும்போது, அப்படியே மிரண்டு போவேன்.

''அப்போது, 'ஆனந்தி... உன் புருஷன் கோபக்காரன் தான். ஆனா, நல்லவன். போகப் போக, உனக்கு அவன் குணம் புரியும். கொஞ்சம் பொறுத்து போம்மா... உனக்கு நான் இருக்கேன்...' என, முதுகை தடவிக் கொடுத்து, அவங்க சொன்ன அன்பான வார்த்தைகள்...

''ஒரு மாமியாராக எல்லா வேலைகளையும் என் தலையில் கட்டாமல், 'குழம்பு வச்சு தரேன், சாப்பிட்டு பாரு... பொரியல் செய்யும்போது, பால் கொஞ்சம் தெளித்தால், ருசியாக இருக்கும்... ஆனந்தி, சாப்பிடாமல் அப்படியென்ன வேலை, முதலில் சாப்பிடு...' என்று, தட்டில் தோசையை வைத்து, அன்போடு அதட்டும் அவங்களோட கனிவு...

''ஒரு சிநேகிதியாய், கடந்த கால அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் தருணங்கள்... கண்களில் கண்ணீர் துளிர்க்கும் போதெல்லாம், 'கவலைப்படாதே, உனக்கு, நான் இருக்கேன்...' என்று சொல்லும், அன்பான வார்த்தைகள் இன்னும் என் மனசை விட்டு மறையலைம்மா...

''இப்ப, அவங்க உடல்நிலை சரிவர இயங்காமல் இருக்கலாம்... மூளையின் செயல்பாடு குறைந்திருக்கலாம்... ஆழ் மனதின் உணர்வுகள், நிச்சயம் என் அன்பை புரிய வைக்கும். மகனும், மருமகளும் தன்னருகில் தான் இருக்கின்றனர்... அவர்கள் அரவணைப்பில் தான் இருக்கிறேன் என்பதை நிச்சயம் தெரியப்படுத்தும்...

''அவங்க காலம் வரை, முழு மனசோடு இதை நாங்கள் செய்வோம்மா... அவங்க, என் மேல் காட்டிய அன்பும், பாசமும், அக்கறையும் கொஞ்சமும் குறையாமல், நான் அவங்களை பார்த்துப்பேன்... தயவுசெய்து, இனி இப்படி பேசாதீங்கம்மா,'' என்றாள், ஆனந்தி.

ஊருக்கு கிளம்பிய ஆனந்தியின் அம்மா, அவளது மாமியார் படுத்திருந்த அறைக்கு சென்றாள்...

''உங்களையும், மாப்பிள்ளையையும் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்... உங்க மருமகளுக்கு, இந்த புடவை வாங்கிட்டு வந்தேன், நல்லாயிருக்கா பாருங்க... அடுத்த தடவை வரும்போது, 'அய்யப்பன் கேசட்' வாங்கிட்டு வரேன், கேட்டு பாருங்க... மனசுக்கு நிம்மதியா இருக்கும்,'' என்றாள்.

கட்டிலில் படுத்து எதையோ வெறித்தபடி இருக்கும் அத்தையை, மடியில் சாய்த்து, காபியை தரும் மகளை பெருமிதம் பொங்க பார்த்தாள், ஆனந்தியின் அம்மா.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us