PUBLISHED ON : ஏப் 30, 2017

எப்போதும் பரபரப்பாக இருக்கும் மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரத்தை ஒட்டிய பிரகாரத்தில் உள்ள கடையொன்றில், மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது.
காரணம், வெறும் அரிசி முறுக்கு மட்டுமல்லாமல், புதினா மற்றும் ராகி என, வெரைட்டியான முறுக்குகளை கண் முன் சுடச் சுட தயாரித்து கொடுக்கின்றனர். தட்டில் விழும் முறுக்குகளை, சூடு தணிவதற்குள் வாங்கிச் சென்று விடுகின்றனர், மக்கள்.
வெண்ணிறம், பிரவுன் மற்றும் பச்சை என, பல வண்ணங்களில் கிடைப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
வெரைட்டிக்காக, செயற்கையான வண்ணப் பொடிகளை சேர்ப்பதில்லை. புத்தம் புதிய புதினா தழைகளை, ஆட்டுரலில் நசுக்கி, சாறு எடுத்து, அதை அரிசி மாவில் கலந்து, புதினா முறுக்கும், கேழ்வரகு மாவை, முறுக்கு மாவுடன் சேர்த்து பிசைந்து, ராகி முறுக்கும் சுடுகின்றனர்.
காலை, 11:00 மணியளவில் துவங்கும் வியாபாரம், இரவு, 9:00 மணி வரை களை கட்டுகிறது. நாள் ஒன்றுக்கு, 300 கிலோ வரையிலும் முறுக்குகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை ஆகின்றன.
இந்தியாவின் அனைத்து மாநில பக்தர்களும் வரும் இடம் என்பதால், அவர்களையும் விட்டு வைக்கவில்லை முறுக்கின் சுவை. அவர்களே அதிகம் பார்சல் வாங்கிச் செல்கின்றனர். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றால், மறக்காமல், புதினா, ராகி முறுக்கை சுவைத்து பாருங்கள்!
மு.ஆதவன்
