PUBLISHED ON : செப் 06, 2020

கண் எதிரில் காணும் நிகழ்வுகளை, நாம் பார்க்கும் பார்வை வேறு; மகான்கள் பார்க்கும்
பார்வை வேறு. தம் செய்கைகள் மூலம் அவர்கள், நமக்குப் பாடம் நடத்துவர். அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்று.
பரவாசுதேவனின் கட்டளையால், சுகாசாரியாரின் அம்சமாக அவதரித்தவர், கபீர்தாசர். காசி நகர வீதியெங்கும் போய், ராம நாமத்தை பாடி, பரவசப்படுத்தியவர்.
தன் வழக்கப்படி ஒருநாள், ராம நாமத்தை பாடியபடி வந்தார், கபீர்தாசர்; கூடவே பலர் பாடியபடி வந்தனர்.
அப்போது, அவ்வீதியில் ஒரு பெண்மணி, இயந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாள்.
அதைக்கண்ட கபீர்தாசர், 'ஓ'வென்று அழத் துவங்கினார். சுற்றி நின்றவர்கள், கபீர்தாசரை நெருங்கி, 'ஐயா... ஏன் அழுகிறீர்கள்... நீங்கள் அழலாமா...' என, கேட்டனர்.
பதில் சொல்லாமல், தேம்பித்தேம்பி அழுதார், கபீர்தாசர்.
அப்போது அங்கு வந்த நிரஞ்சனர் எனும் மகான், கபீர்தாசரை நெருங்கி, 'ஐயா, கபீர்தாசரே... நீங்கள் ஏன் அழுகிறீர்கள்...' என, கேட்டார்.
'இயந்திரத்தில் மாவு அரைக்கும் போது, தானியங்கள் எல்லாம் பொடிப் பொடியாவதைப் போல, இந்த சம்சார சக்கரத்தில் அகப்பட்ட நானும், நாசம் அடைவது தப்பாது என்று பயந்து, அழத் துவங்கினேன்...' என்றார், கபீர்தாசர்.
அவரை அமைதிப்படுத்தத் துவங்கிய நிரஞ்சனர், 'கபீர்தாசரே, அழாதீர்... கரும்பு இருக்க, இரும்பைத் தின்பதைப் போல, தெய்வ சிந்தனையின்றி கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள் தாம், இவ்வாறு சம்சார சக்கரத்தில் அகப்பட்டுப் பொடிப் பொடியாகி விழுவர்...
'தெய்வ சிந்தனையோடு இருப்பவர்கள், சம்சார சக்கரத்தில் அகப்பட மாட்டார்கள். நீங்கள் பார்த்த அந்த இ(ஏ)ந்திரத்தில், மேலே ஒரு வட்டக்கல்லும், கீழே ஒரு வட்டக்கல்லும் இருக்கிறதல்லவா... அவற்றில் ஒன்று இன்பம்; மற்றொன்று துன்பம். இன்ப துன்பங்களில் அகப்படுபவர்கள் பொடிப் பொடியாக போவர்...
'அதே சமயம், இயந்திரத்தின் உள்ளேயே இருந்தாலும், நடு அச்சை விட்டு விலகாத சில தானியங்கள், பொடியாகாமல் தப்பும். அதைப் போல, தெய்வத்தை விட்டு விலகாமல், தெய்வ சிந்தனையுடன் செயல்படுபவர், ஒருபோதும் சம்சார சக்கரத்தில் சிக்கி அல்லல்பட மாட்டர்...
'முழுமையான தெய்வ சிந்தனையுடன், மற்றவர்களின் நலனுக்காகச் செயல்பட்டு வரும் உங்களுக்கு, சம்சார சக்கரத்தைப் பற்றிய கவலை ஏன்... பொறுமை, சாந்தம், கருணை என, அனைத்தும் நிறைந்த அவதார புருஷரான நீங்கள் போய் அழலாமா...' என கேட்டார், நிரஞ்சனர்.
கபீர்தாசர் அழுகையை விட்டு, பழையபடியே ராம நாம பஜனையில் ஈடுபட்டார். அருகிருந்து கேட்ட அனைவரும், 'இந்தப் பாடம் நமக்காகத்தான்...' என்று, முன்னிலும் ஆழமாக ஆத்மார்த்தமாக ராம நாமத்தைப் பாடத் துவங்கினர்.
இறை நாமத்தைச் சொல்வோம், இன்னல்களை வெல்வோம்!
ஆன்மிக தகவல்கள்!
* விளக்கை ஏற்றும்போது, வீட்டின் பின் வாசல் கதவை மூடி விட வேண்டும்
* விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது, கை விரலால் எண்ணெயிலுள்ள துாசியை எடுப்பதோ, திரியை துாண்டுவதோ கூடாது.
பி. என். பரசுராமன்

