sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 18, 2026 ,தை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உன் நிழலாய்....

/

உன் நிழலாய்....

உன் நிழலாய்....

உன் நிழலாய்....


PUBLISHED ON : செப் 06, 2020

Google News

PUBLISHED ON : செப் 06, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசலில் உட்கார்ந்திருக்கும் அப்பாவை கவனிக்காமல் உள்ளே சென்றான், நிதின்.

''அம்மா, அம்மா இங்கே வாயேன். இதோ பார் என்னுடைய கவிதை, புத்தகத்தில் பிரசுரமாயிருக்கு.''

அடுப்படியிலிருந்து வேகமாக வந்த பத்மா, அதை ஆவலோடு வாங்கிப் படித்தாள்.

''எப்படிடா... உன்னால் இவ்வளவு அழகாக எழுத முடியுது,'' என, பெருமை பிடிபடாமல் பாராட்டியவள், ''ரொம்ப நல்லாயிருக்கு... அப்பாகிட்ட காண்பி, வாசலில் தான் இருக்காரு,'' என்றாள்.

வாங்கி படித்த அப்பா, ''நல்லாயிருக்கு,'' என, ஒற்றை வரியில் பதில் சொன்னார்.

திருமணம் செய்து, உள்ளூரில் இருக்கும் மகள், தன் கணவனுக்கு, 'புரமோஷன்' வந்ததை அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறாள்.

மகள் வந்திருப்பதை, குரல் கேட்டு தெரிந்து, அறையிலிருந்து வெளியே வந்தவரிடம், ''என்னங்க, நம் மாப்பிள்ளைக்கு, 'புரமோஷன்' வந்திருக்காம்,'' என, மகிழ்ச்சியோடு பத்மா சொல்ல, சிரித்தபடி, மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எந்த விஷயமானாலும், முதலில் மனைவி பத்மா தான். அவளிடம் தான் சொல்வர். அப்பா என்று ஒருத்தர் அங்கிருப்பதையே சட்டை செய்யாததை போல, அவர்கள் நடவடிக்கைகள் இருக்கும்.

''அம்மா, அக்கா வந்திருக்கா. 'நைட்' எல்லாருக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்.''

''எனக்கு ஸ்ட்ராபெர்ரி வாங்குடா,'' என்றாள், அக்கா.

''சரி, எனக்கு பிஸ்தா... அம்மா, உனக்கு,'' என்றான்.

''எனக்கு, வெண்ணிலாவும், அப்பாவுக்கு, பட்டர் ஸ்காட்சும் வாங்கிக்க,'' என்றாள், அம்மா.

'நான் இங்கேதான் உட்கார்ந்திருக்கிறேன். என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவர்களுக்குள் முடிவு செய்கின்றனர். அம்மா மட்டும் போதும். அப்பா என்றொரு

ஜீவன் தேவையில்லையோ...'

என வருந்தினார்.

ஓய்வு பெறும் வரை தெரியவில்லை. அதன் பிறகு, இந்த வீட்டில் எல்லாமே அம்மா தான் என்பது போல, அவர்கள் நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டார்.

இப்போதெல்லாம் சின்ன, சின்ன வேலைகளைக் கூட, நிதின் கையிலெடுத்துக் கொள்கிறான்.

'இந்த ஸ்விட்ச் போர்டில், கரென்ட் வரலை... எலக்ட்ரீஷியனை வரச் சொல்லணும்...' என, பத்மா கூறினால், 'அப்பா, வேண்டாம். நானே அழைச்சுட்டு வரேன்...' என்பான், நிதின்.

'என்னை எதுக்குமே லாயக்கில்லாதவன் என்று நினைத்து விட்டீர்களா... மனைவி, பிள்ளைகளே அந்நியர்களாய் தெரிகின்றனர். நான் சம்பாதித்து, இந்தக் குடும்பத்தையும், இவர்களையும் உருவாக்கியவன்.

'இன்று, இவர்களுக்கு உபயோகமில்லாதவனாய், ஒதுக்கப்பட்டவனாய் தெரிகிறேன். வீட்டில் இருந்தால், மனம் கண்டதையும் யோசிக்கும்...' என நினைத்தபடி, செருப்பை மாட்டி கிளம்பினார்.

''எங்கே கிளம்பிட்டீங்க...''

''கோவிலுக்கு.''

''நாளைக்கு போகலாம். வீட்டில் இருங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வர்றதா போன் பண்ணினாங்க.''

'ஓ... மாப்பிள்ளை வருவதைக் கூட என்னிடம் சொல்லாமல், மாமியாருக்கு போன் பண்ணி சொல்லியிருக்கிறார். இவள் மூலம் தான் அதையும் நான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது...' என, நினைத்து கொண்டார்.

''என்னப்பா யோசனை, செருப்பை அவிழ்த்து போட்டுட்டு- போய், 'டிவி'யில், செய்தி பாருங்க... பொழுது போகும்,'' என, சிரித்தபடி சொன்னான், நிதின்.

'இவள் சொல்வதை நான் கேட்க வேண்டும். இதற்கு நிதினும் ஆமாம் போடுகிறான். யாருக்குமே என்னை மனிதனாகக் கூட மதிக்கத் தெரியவில்லை.

'எனக்கென்று விருப்பங்கள், ஆசைகள் இல்லாமல் போய்விட்டதா... இந்த வீட்டில் எல்லாமுமாக திகழ்பவள் இவள் தானா...' என, 40 ஆண்டு இல்லற வாழ்க்கையில், கடந்து வந்த அன்பான சுவடுகள் மறைந்து, ஆத்திரம் மட்டுமே முன்னால் நின்றது.

''சரி, கடைக்குப் போய் கொஞ்சம் ஸ்வீட் வாங்கிட்டு வர்றீங்களா,'' என்றாள், பத்மா.

''அப்பாவை பத்தி தெரிஞ்சும், இந்த வேலையை செய்யச் சொல்றியே அம்மா... கடையில் போய் நின்னுக்கிட்டு, 'பத்மா, பாதுஷா வாங்கட்டுமா... மைசூர்பாகா'ன்னு, உன்கிட்டே தான், 'சாய்ஸ்' கேட்பாரு. அதுக்கு நானே போய் அக்காவுக்கு பிடிச்ச பால்கோவா வாங்கிட்டு வரேன்.''

நிதின் கிளம்ப, கணவனைப் பார்த்து சிரித்தபடி உள்ளே சென்றாள், பத்மா.

'இவர்கள் என்னை அலட்சியப்படுத்துவது தெரிந்தும், நான் ஏன் பணிந்து போகிறேன். இனி இப்படி இருக்கக் கூடாது. எனக்கு இது வேணும், வேண்டாம் என்பதை வாயைத் திறந்து சொல்ல வேண்டும்...

'எனக்கென்று தனியான அபிப்பிராயங்கள் இருக்கிறது என்பதை, இவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பத்மாவின் விஸ்வரூபத்துக்கு முன், நான் ஒன்றும் இல்லாதவனாய் ஆகி விடுவேன்...' என, நினைத்து கொண்டார்.

''புரமோஷன் வந்தாச்சு மாமா. 'டிரான்ஸ்பர்' வந்தாலும் வரும். அப்படி வந்தால், ௧௦ நாள், அத்தையை தான், புது ஊருக்கு அழைச்சிட்டு போகணும். எல்லாத்தையும், 'பர்பெக்ட்' ஆக, 'அரேஞ்ச்' பண்ணித் தருவாங்க,'' என்றார், மாப்பிள்ளை.

''எங்கம்மாவை பத்தி என்ன நினைச்சீங்க. பம்பரமாய் சுழல்வாங்க. சகலகலா நிபுணி தெரியுமா,'' என்றான், நிதின்.

''போதும், போதும்... மாப்பிள்ளை எதிரில் என்னைப் புகழ்ந்துகிட்டு,'' என்றாள், பத்மா.

''அப்பாவைப் பாருங்களேன். யாருமே தன்னை பாராட்ட மாட்டேங்கிறாங்கன்னு, ஏக்கமா பார்க்கிறாரு,'' என, கிண்டலாக சிரித்தாள், மகள்.

''ஏய், என்ன அப்பாவை கிண்டல் பண்றியா... அப்பாவுக்கு உங்களைப் பத்தியெல்லாம் நல்லா தெரியும். அதான் அமைதியாக பார்வையாளர் போல உட்கார்ந்திருக்காரு,'' கணவனுக்கு பரிந்து பேசினாள், பத்மா.

''சரி... எங்களைப் பத்தி, அவருக்கு என்ன தெரியும், சொல்லேன் பார்ப்போம். உன் வாயால் தெரிஞ்சுக்கிறோம்,'' கிண்டல் தொனிக்க சொன்னான், நிதின்.

''நீங்க யாரும் என்னையும், அப்பாவையும் தனித்தனியாக பிரிச்சுப் பார்க்கிறதில்லை. அம்மாவுக்குள் அப்பாவும் அடக்கம்ன்னு நினைக்கிறீங்க. உங்க சந்தோஷங்களையும், பிரச்னைகளையும் என்கிட்டே சொல்லும்போது, அது, அவர்கிட்டேயும் போய் சேர்ந்ததாக நினைக்கிறீங்க... சரிதானே,'' என, சிரித்தபடியே கணவன் அருகில் வந்தவள் தொடர்ந்தார்...

''இந்தக் குடும்பத்தை துாக்கி நிறுத்திட்டு, இப்ப அமைதியாக ரசிச்சுட்டு இருக்காரு. நான் பம்பரமாய் சுழல்றேன்னு சொன்னே இல்லையா. என்னைச் சுற்றி விடற சாட்டையே, அவர் தான்...

''என்னை பாராட்டினாலும் அது, அவரை பாராட்டற மாதிரிதான்ங்கிறது அவருக்கு தெரியும். என்னங்க... நான் சொல்றது சரி தானே... நம்பளைப் பத்தி புரிஞ்சிருந்தும், இந்த பிள்ளைகளுக்கு எப்பவும் கிண்டல் கேலி தான்,'' என்றாள் பத்மா.

'என் ரசனைகள், விருப்பங்கள் எல்லாவற்றையும் உணர்ந்தவளாய், அவளுள் நான் இருக்கிறேன் என்று பெருமிதப்படும் அவள் எங்கே... இத்தனை ஆண்டு தாம்பத்தியத்தில் அவளைப் புரிந்து கொள்ளாமல் வேறுபடுத்தி பார்க்கும் நான் எங்கே...' என, மனம் வெட்கப்பட, தன் மனைவி, பிள்ளைகளை புரிந்துகொண்டவராய் அழகாக சிரித்தார்.

பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us