தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தகுதித் தேர்வு!

தகுதித் தேர்வு!

தகுதித் தேர்வு!


PUBLISHED ON : பிப் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரவணன் ஸ்கூட்டியை செலுத்த, பின் சீட்டில் அமர்ந்து, கணவனின் நெஞ்சில் கைகோர்த்திருந்தாள், மீனாட்சி. மூன்று வயது நகுலன், தன் அப்பாவிற்கு முன் அமர்ந்து, மானசீகமாக ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

'வளர்பிறை மழலையர் கல்வி தகுதித் தேர்வு பயிற்சி மையம்' என்ற விளம்பர பலகையின் முன் வாகனத்தை நிறுத்தி, ஸ்டாண்டிட்டான் சரவணன். பயிற்சி மையத்தின் முன், நுாற்றுக்கணக்கான பெற்றோரும், குழந்தைகளும் குழுமியிருந்தனர்.

நடமாடும் சிற்றுண்டி கடைகளும், தேநீர் கடைகளும் முளைத்திருந்தன.

வரவேற்பறை பெண்ணிடம், ''எங்க பையன பயிற்சி மையத்தில் சேர்க்கணும்; அது விஷயமா பேச வந்திருக்கோம்...'' என்றான், சரவணன்.

வரவேற்பறை பெண், ''விண்ணப்ப படிவத்துக்கு, ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டி, அதை பூர்த்தி செய்தால் தான், கூடுதல் தகவல்களை தர முடியும்,'' என்றாள்.

'டெபிட் கார்டு' மூலம் பணம் கட்டி, விண்ணப்ப படிவத்தை பெற்றான்.

சரவணனிடம் இருந்து பையனின் புகைப்படத்தை வாங்கி, விண்ணப்ப படிவத்தில் ஒட்டி, நகுலனின் உயரத்தையும், எடையையும் அளந்து குறித்தாள், வரவேற்பறை பெண்.

''உங்க டோக்கன் எண், 50; வரிசையில் காத்திருங்க,'' என்றாள். உடனே, ஒருவன் வந்து, ''உங்க முறை வரும் வரை, உங்களுக்காக வரிசையில் காத்திருக்கிறேன்; 200 ரூபாய் கொடுத்துடுங்க,'' என்றான்.

''நாங்க தானே பெற்றோம்; நாங்களே நிக்குறோம்... நீ, உன் வேலைய பார்,'' என்றாள், மீனாட்சி.

மூவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர். போஸ்டரில் புன்னகைத்தார், பிரதமர் சோடி. கீழே, இந்தியாவிலுள்ள எல்லா அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அட்மிஷனுக்கான தகுதித் தேர்வை அறிவித்துள்ளேன்; தாய், தந்தை, மாணவன் மூவரும் தனித்தனியே தேர்வு எழுத வேண்டும். மதிப்பெண்ணை, நுாறுக்கு மாற்றி, தேர்வு மதிப்பெண்ணை, 50 ஆக அறிவித்துள்ளோம். மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு கொள்கையின்படி நடக்கும். ஆரம்ப கல்வி மாணவர்களின் கல்வித் தரம் உயர, நாம் அனைவரும் ஒத்துழைப்போம்...என்று எழுதப் பட்டிருந்தது.

நான்கு மணி நேரத்திற்கு பின், சரவணனும், மீனாட்சியும் அழைக்கப்பட, குளிர்பதன அறைக்குள் பிரவேசித்தனர்.

புல் சூட்டில் மிடுக்காக அமர்ந்திருந்தவன், இவர்களது வணக்கத்தை, அலட்சியமாக அங்கீகரித்தான்.

எதிரில் அமர்ந்தனர்.

''உங்க திருமண தேதி?''

''10.02.2021!''

''நகுலன் உங்க மூத்த குழந்தையா?''

''ஆமாம்!''

ஒரு பெண், நகுலனை அழைத்துச் சென்று, 'ஐ க்யூ' டெஸ்ட் செய்து, விண்ணப்ப படிவத்தில் குறித்தாள்.

''எங்கள் பயிற்சி மையத்தில், மூன்று வகையான பயிற்சி வகுப்புகள் உள்ளன. ஒன்று, எகானமிக் கோச்சிங்; இரண்டாவது, டீலக்ஸ் கோச்சிங்; மூன்றாவது, பிளாட்டினம் கோச்சிங்...''

''மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?''

''எகானமிக் கோச்சிங், வீட்டிலிருந்து வந்து பயிற்சி பெறலாம்; தேர்வில் பெயிலாகி விட்டால், மீண்டும் பணம் கட்டி, பயிற்சி வகுப்பில் சேரணும். மதிய உணவுக்கும், சிற்றுண்டிக்கும் தனியே கட்டணம் செலுத்தணும்; உங்களது மகனுக்கு, ஆயா சேவை கிடையாது. தந்தை, தாய், மகன் மூவருக்குமான ஓராண்டு பயிற்சி கட்டணம், ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே! பத்தாயிரம் ரூபாய் முன் பணம் கட்டி, மீதியை வட்டியுடன் சேர்த்து, 12 மாத தவணையில் கட்டலாம்.

''டீலக்ஸ் கோச்சிங்கில், விடுதியில் தங்கி பயிற்சி பெறலாம்; தேர்வில் பெயிலாகி விட்டால், மீண்டும் ஆறு மாதத்தில் வரும் தேர்வுக்கு பயிற்சி கட்டணம் கட்ட வேண்டியதில்லை. குளிர்பதன வசதி இல்லாத அறை; மூணு வேளை உணவு; இரண்டு நேரம் தேநீர் உண்டு. உங்க குழந்தைக்கு ஆயா வசதி உண்டு. ஓராண்டு பயிற்சி கட்டணம், ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே! 30 ஆயிரம் ரூபாய் முன் பணம் கட்டி, மீதியை, வட்டியுடன் சேர்த்து, 12 மாத தவணையில் கட்டலாம்.

''பிளாட்டினம் கோச்சிங்கில், குளிர்சாதன அறையில் தங்கி பயிற்சி பெறலாம்; வைபை வசதி உண்டு. தேர்வில் எத்தனை முறை பெயிலானாலும், பாசாகும் வரை படித்தபடியே இருக்கலாம். மீண்டும் பயிற்சி கட்டணம் கட்டத் தேவையில்லை. வாரத்தில் ஐந்து நாள், 'நான் - வெஜ்' உணவு; உங்கள் அழுக்கு துணிகளை துவைத்து, உலர் சலவை செய்து தரும் வசதி தந்துள்ளோம். பிளாட்டினம் கோச்சிங்குக்கான கட்டணம், ரெண்டு லட்சம் ரூபாய். 50 ஆயிரத்தை முன்பணமாக கட்டி, மீதியை வட்டியுடன் சேர்த்து, 12 மாத தவணையில் கட்டலாம்.''

''பயிற்சி நேரம்?''

''காலை, 8:00 மணியிலிருந்து, மதியம், 1:00 மணி வரை; பின், 2:00 மணியிலிருந்து மாலை, 6:00 மணி வரை.''

''இரவில்...''

''மீட்டிங் ஹாலில், இரவு, 6:00 மணியிலிருந்து, 10:00 மணி வரை சீரியல்கள் ஒளிபரப்பப்படும்; பெற்றோர் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம். அதே நேரத்தில், குழந்தைகள் கார்ட்டூன் சேனல் பார்க்க வசதி செய்து தரப்படும்.

''தேர்வுக்கு உதவும் வகையில், 50 ஆயிரம் கேள்வி - பதில்களை அச்சிட்டு அல்லது சி.டி., வடிவில் தருவோம்; பெற்றோரும், குழந்தையும் அதை படித்து, மனப்பாடம் செய்தால், தேர்வில் பாசாகி விடலாம்.''

''சிறப்பான யோசனை...'' என்றான் சரவணன்.

''மாதா மாதம் நாங்கள் மாதிரி தேர்வு நடத்துவோம்; குறைந்த பட்சம் ஆறு மாதிரி தேர்வுகளில் பாசாகா விட்டால், தகுதித் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம். 'நுாறு சதவீதம் பாஸ்' என, நாங்கள் விளம்பரம் செய்து கல்லா கட்டவேண்டும் அல்லவா...''

''அடடா!''

''பயிற்சி வகுப்புகளில், ஆண்டிற்கு, 200 மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஒரு பிரிவில், 50 மாணவர்கள். தகுதித் தேர்வு எழுதும், 200 பேரில் முதல் மார்க் எடுக்கும் மாணவனுக்கு, தங்க பதக்கம் பரிசளிப்போம்; ஒரு வார கோவா டூரும் உண்டு.''

''அருமை!'' என்றாள், மீனாட்சி.

''பிளாட்டினம் பயிற்சி வகுப்பில் சேருவோருக்கு, 50 கிராம் வெள்ளி நாணயம் பரிசளிக்கப்படும். பயிற்சியில் சேரும், 200 பேரில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, கட்டணத்தில் பாதியை திருப்பி அளிப்போம்.''

''மகிழ்ச்சி.''

பயிற்சி மைய நிர்வாகி குரலை தாழ்த்தி, ''தகுதி தேர்வுக்கான கேள்வித் தாளை ஒரு வாரத்துக்கு முன் தருவதற்கு, தனியாக, 20 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்,'' என்றார்.

முகம் இறுகினான், சரவணன்.

''தகுதித் தேர்வு எழுதாமலே, பாஸ் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா... தகுதித் தேர்வில் உங்களது பையனுக்கு பதில், உங்கள் பையனின் சாயலில், ஒரு பையனை தயார் செய்து, தகுதித் தேர்வு எழுத வைப்போம்.''

''இதற்கு தனி கட்டணமா?''

''பயிற்சி வகுப்புகளுக்கே வர வேணாம்; இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும்; தகுதித் தேர்வில் பாசான செய்தி, உங்க வீடு தேடி வரும்.''

''இந்த மாதிரி கட்டணம் வசூலிப்பதற்கு, முகமூடி மாட்டி, வீடு புகுந்து கொள்ளை அடிக்க போகலாம் நீங்க...''

''நாங்க வசூலிக்கிறதில் பாதி அரசியல்வாதிகளுக்கு தான் போகுது.''

''அரசை, மக்கள் நலனுக்காக கொண்டு வர்றோம்; ஆனால், அரசோ தங்கள் முரட்டு சித்தாந்தங்களை நிறைவேற்ற, தங்கள் பாக்கெட்டுகளை நிரப்ப செயல்படுகின்றன. ஜனநாயகம் வர வர கேலி கூத்தாகி விட்டது. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு இலவசமாய் தரப்பட வேண்டும். இரண்டையும் கார்ப்பரேட் முதலைகளிடம் தாரை வார்த்து விட்டது, அரசு. எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு போடக் கூடாது என்று எனக்கு தோன்றுகிறது.''

''அதிகம் பேசுகிறீர்கள்; குண்டர் சட்டத்தில், 'உள்ளே' போடப் போகின்றனர்.''

''பயிற்சி மையமும் வேணாம்; ஒரு கருமாந்திரமும் வேணாம். பயிற்சி மையங்களுக்கு போகாமலேயே, நாங்களே பயிற்சி எடுத்து, தகுதித் தேர்வு எழுதப் போறோம். எங்கள் மகன் தகுதித் தேர்வில் பாசாகி, எல்.கே.ஜி., படிக்கப் போனாலும் சரி, பெயிலாகி மாடு மேய்க்க போனாலும் சரி... கவலையில்லை,'' என்றான் சரவணன்.

''பயிற்சி மையத்தின் உதவி இல்லாமல், நுாறு ஆண்டுகள் தகுதித் தேர்வு எழுதினாலும், பாசாக மாட்டீர்கள்...''

''அதையும் பாப்போம்...''

''முன்கோபம் நல்லதல்ல... உட்காருங்கள்; பயிற்சி கட்டணத்தில், 15 சதவீத தள்ளுபடி தருகிறேன்; வெளியே சொல்லாதீர்கள்.''

''தேவையில்லை...'' என்று கூறிய சரவணன், மனைவியையும், மகனையும் இழுத்துக் கொண்டு, புயல் வேகத்தில் வெளியேறுவதை கண்டு அனைவரும் ஸ்தம்பித்தனர்.

தாய், தந்தை, மகன் மூவரும் தகுதித் தேர்வுக்கு தயாராயினர். தேர்வு மைய வாசலில், மூன்று வயது சிறுவன் நகுலன், 'மெட்டல் டிடெக்டர் பாம் டிடெக்டர்' வைத்து சோதிக்கப்பட்டான்; நாப்கின் வரை கழற்றி, 'பிட்' வைத்திருக்கிறானா என, ஆராய்ந்தனர்.

பிரதமர் சோடியின் அடுத்த அறிவிப்பு வெளியானது...

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள, தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆணும், பெண்ணும் தனித்தனியாக தகுதித் தேர்வு எழுதி, பாசாக வேண்டும். தகுதித் தேர்வில் பாஸ் செய்தவரே, திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தகுதித் தேர்வுக்கு முன் ஆணும், பெண்ணும் முழு ரத்த பரிசோதனையும், மரபியல் அணு சோதனையும் செய்திருத்தல் கட்டாயம்...

தினத்தந்தி, 'சிந்துபாத்' படக்கதை போல, தகுதித் தேர்வு அறிவிப்புகள் தொடரும் போல!

நிலா மகன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us