sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மாதா, பிதா, குரு, தெய்வம்

/

மாதா, பிதா, குரு, தெய்வம்

மாதா, பிதா, குரு, தெய்வம்

மாதா, பிதா, குரு, தெய்வம்


PUBLISHED ON : ஜன 26, 2014

Google News

PUBLISHED ON : ஜன 26, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்தாம் வகுப்பு, 'அ' பிரிவு. முற்பகல் இரண்டாம் பாட வேளை. ஒழுக்கம் பற்றிய குறளை, சொல்லுக்குச் சொல் பிரித்து பொருளை விளக்கி சொன்னார் தமிழாசிரியர்.

''புரிந்ததா... சந்தேகம் இருந்தா கேளுங்க,'' என்றார்.

எல்லாரும் மவுனமாக இருந்தனர்.

''திரும்ப சொல்றேன்... உங்களில் யாரையாவது இந்தக் குறளுக்குப் பொருள் சொல்லச் சொல்வேன். அதனால, நல்லா கவனிங்க, “ என்று கூறி, அதே குறளை மூன்றாவது முறையாக விளக்கினார்.

சிறிது நேரம் இடைவெளிவிட்டு, ''செல்லத்துரை... இப்ப நான் சொன்னத திரும்ப சொல்லு,'' என்றார்.

அவன் டெஸ்கில் முழங்கையை ஊன்றி, இரு கன்னத்தையும் உள்ளங்கையால் தாங்கி, முன்பக்கம் குனிந்து கொண்டே, ''எனக்குப் புரியல, இன்னொரு முறை சொல்லுங்க,” என்று அலட்சியமாக கூறினான்.

''உன்னால் எழுந்து நிற்க முடியாதா... முதல்ல புத்தகத்தை கையில் எடு.''

''தமிழ் புத்தகம் எடுத்து வரல.''

ஆசிரியருக்கு கடுப்பாகியது. என்ன சொல்வது என்று தெரியாமல், கோப உணர்ச்சியில் அவரது கையும், காலும் லேசாக நடுங்கியது. சிறிது நேரத்தில் சகஜ நிலையை அடைந்தவர், அவன் பக்கத்திலிருந்த முத்துவை பார்த்து, ''நீயாவது சொல் பார்ப்போம்,'' என்றார்.

முத்து, எழுந்து, அசையாமல் தூண் மாதிரி நின்றான். செல்லத்துரையின் மேல் ஏற்பட்ட கோபத்தை முத்துவிடம் பாய்ச்சினார். ''நீயெல்லாம் ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வர்ற... எங்கேயாவது போயி தொலைய வேண்டியது தானே... உன்னையெல்லாம் கட்டி அழணும்ன்னு என் தலைஎழுத்து. ஒரே குறளை இத்தனை முறை விளக்கி சொல்லியும், உனக்கு புரியலையா? பழநிக்குப் பத்து முறை காவடி எடுத்தாலும் சரி, நீ பாசாக மாட்ட...”

''எனக்கு மட்டும் ஏன் சார்... சாபம் விட்டு, திட்டறீங்க. இவன, ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறீங்க,” என்றான்.

இதைக் கேட்ட ஆசிரியருக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அந்த நேரம் இடைவேளை மணி அடித்தது.

ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு வந்த தமிழாசிரியர், வகுப்பில் நடந்ததை, அப்படியே ஒன்று விடாமல், மற்ற ஆசிரியர்களிடம் புலம்பித் தீர்த்தார்.

''என்ன சார் நீங்க. இருபது வருஷத்துக்கு மேல வேலை பாத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு; பழங்காலம் மாதிரி, இன்னும் நினைச்சிட்டு இருக்கீங்க. சூழ்நிலைக்குத் ஏற்ப நாமளும் மாறணும். அப்போ எல்லாம் வாத்தியார் பேச்சை, பசங்க கேட்டாங்க; இப்போ அவங்க பேச்சை, நாம கேக்க வேண்டியதாப் போச்சு. காலம் மாறிப் போச்சு சார். ஒழுக்கத்தைப் பத்தி எவ்வளவு சொன்னாலும், எந்தப் பயலும் கேட்க மாட்டானுக. செல்லத்துரையை விட்டுட்டு, அடுத்தவனச் சூடாப் பேசினா, அவன் எதிர்த்து பேசத்தானே செய்வான்... அவனுக்கு நீங்க பயப்படுறதை மற்ற மாணவர்களுக்கு நல்லாத் தெரியப்படுத்திட்டீங்க. தண்டிக்கக் கூடாதுன்னு அரசாங்கமே சொல்லுது. நமக்கென்ன சார்... புத்தகத்தில் இருக்கிறத சொல்லிட்டு, நாம பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கணும்,” என்று சமாதானப்படுத்தினார் ஒரு ஆசிரியர்.

''நீங்க சொல்லுறது நல்லாவா சார் இருக்கு. பிரச்னைக்குரிய மாணவங்க இன்னைக்கு நேத்து மட்டுமா இருக்காங்க. பள்ளிக்கூடமின்னு ஒண்ணு என்னைக்கு உருவாச்சோ, அன்னயிலருந்து இருக்கத் தான் செய்றாங்க. அப்போ அபூர்வம்; இப்பக் கொஞ்சம் அதிகம். அவ்ளோதான்!

''அதிகாரியோ, அரசியல்வாதியோ ஏழையோ, பணக்காரனோ பிச்சை எடுப்பவனோ, அவங்க பிள்ளைக பள்ளிக்கூடத்துக்கு வந்திட்டா, நமக்கு எல்லாம் ஒண்ணு தான்; பாகுபாடு பார்க்கக் கூடாது. அரசாங்கம் நமக்கு சம்பளம் கொடுக்குது; நாம பாடத்த ஒழுங்கா நடத்தணும். சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அவனைப் படிக்க வைக்க வேண்டியது நம் கடமை. பயந்து, கடனேன்னு பாடம் நடத்த முடியுமா,'' என்றார் மற்றொரு ஆசிரியர்.

''ஏன் பேச மாட்டீங்க; நீங்க அந்த வகுப்பில பாடம் எடுத்தால்ல தெரியும் நான் படுற பாடு. உருப்படாதவங்க பத்து பேர் கிடக்கனுக. இந்தத் தொகுதி எம்.எல்.ஏ., சந்தனப்பாண்டி மகன் செல்லத்துரை தான் அந்தக் குழுவுக்கு தலைவன். அவனை ஏதாவது சொல்லி அவங்க அப்பன் பகையைத் தேட முடியுமா... அப்பறம் எங்கேயாவது பஸ் போக்குவரத்து கூட இல்லாத குக்கிராமத்துக்கு போயி கிடக்கணும்... நேர்மைக்கு இது காலம் இல்ல,” என்றார் தமிழாசிரியர். உடனே இன்னொரு ஆசிரியர், ''இப்போ படிக்கிற பசங்க மனநிலையைக் கண்டுபிடிக்க முடியலையே சார்... இந்த சின்ன வயசுல பாக்கக் கூடாததையெல்லாம் பாக்காங்க; கேக்கக் கூடாததை விரும்பிக் கேக்காங்க. செய்யக் கூடாததை எல்லாம் மகிழ்ச்சியா செய்றாங்க. எல்லாப் பயல்களிடையும் பணம் நடமாடுது; கெட்ட பழக்கமும், ஏமாற்றக்கூடிய திறமையும் வளந்திருச்சு. தொலைக்காட்சிப் பெட்டி, மொபைல் போன், கிரிக்கெட், பீடி, கம்ப்யூட்டர், சிகரட்... நினைச்சா மது, இதுலதான் மூழ்கிக் கிடக்கான்.

''அடிச்சிடக் கூடாது, மனம் நோகப் பேசிடக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்லுது. அவன் மனம் அறிந்து, அதுக்குத் தக்க உளவியல் முறையில அவனைப் பக்குவப்படுத்தணுமாம். எந்த உளவியலுக்கும் இவனுங்க அடங்குறதாக தெரியல. 'வாத்தியார் பிரம்பை எடுக்கலைன்னா, மாணவர்களுடைய வாழ்வு சிதைந்து போகும்ன்னு...' ஒரு கட்டுரையில் வின்சென்ட் சர்ச்சில் எழுதியிருக்கார். அது, எவ்வளவு உண்மையின்னு இப்பத் தான் தெரியுது,'' என்றார்.

ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர் கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, மணி அடித்தது; ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.

பத்தாம் வகுப்பு, 'அ' பிரிவில் கணக்குப் பாட வேளை. திருமலை ஆசிரியர், மாதிரி கணக்கு ஒன்றை கரும்பலகையில் எழுதி, விளக்கிக் கொண்டிருந்தார். கடைசிப் பெஞ்சில் இருந்த செல்லத்துரையும், பக்கத்தில் இருந்த மற்ற இரண்டு பேரும், மொபைல் போனில் எதையோ பார்த்து, கிசுகிசுத்தனர்.

''ஏலே, அங்க என்னவே பேச்சு. கணக்கு நோட்டு எடுத்து எழுதுங்க. சந்தேகமின்னா உடனே கேட்டுருங்க,'' என்று, செல்லத்துரையை மனதில் வைத்து பொதுவாக சொன்னார்.

அவர்களுடைய முனங்கல் சத்தம் நிற்கவில்லை. ''செல்லத்துரை... கணக்கு நோட்டை கொண்டா,'' என்றார்.

அவசர அவசரமாக பைக்குள் இருந்து எடுக்க முற்பட்டான். மற்ற இரண்டு பேரும் வேகமாகத் தாளை புரட்டி, எழுத ஆரம்பித்தனர்.

அருகில் சென்று, ''மொபைல் போன்ல என்னத்தடா பார்த்துட்டு இருக்கீங்க. எடுங்கடா,'' என்றார்.

'எங்ககிட்ட மொபைல் போனே கிடையாது சார்...' என்று சமாளித்தனர்.

''கணக்கு பாடத்தை கவனிக்காம விளையாடிகிட்டா இருக்கீங்க,” என்று கூறி, மூன்று பேருக்கும், சரமாரியாக அடி கொடுத்தார். அவர்கள் இந்த பிரம்படியை எதிர்பார்க்கவில்லை.

''எப்படி எங்களை அடிக்கலாம்... உமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது மட்டும் தான் வேலை; எங்களை அடிக்க உரிமை கிடையாது,'' என்றான் செல்லத்துரை.

''மரியாதை இல்லாம சட்டமா பேசுத. நீ வகுப்பில செய்ற அட்டூழியத்தைப் பாத்திட்டு, சும்மா இருக்கச் சொல்லுதையா... அதுக்கு வேற ஆளப் பாரு,'' என்றார் திருமலை.

அவன் முறைத்து பார்த்து, ''நான் யாரு தெரியுமா? இனிமே என்ன தொட்டா, நடக்கறதே வேற.''

''போடா... போயி, கிழி! வகுப்பறையை விட்டு, முதல்ல வெளியே போ நாயே.''

அவன் நேரே தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று, அழ ஆரம்பித்தான்.

''என்னடா செல்லத்துரை. என்ன நடந்தது... ஏன் அழற, யாரு உன்னை அடிச்சா...'' என்று கேட்ட தலைமை ஆசிரியருக்கு, அவனுடைய அப்பாவை நினைத்து, உள்ளூர பயம் ஏற்பட்டது.

''என்னை கணக்கு வாத்தியார் திட்டி, அடிச்சு, புடதியைப் பிடிச்சு வெளியே தள்ளிட்டாரு,'' என்றான்.

''நீ என்ன தப்புச் செய்த அதச் சொல்லு! அவர் வந்த உடனே கேப்போம்.''

அடுத்த பாட வேளைக்கு மணி அடித்தது. திருமலை ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் வந்தார்.

'என்ன சார் நடந்தது?'' என்று கேட்டார் தலைமை ஆசிரியர்.

''சார், இவன் இங்கு படிக்க வர்ற மாதிரி தெரியல; நேரத்தப் போக்க வர்றான். சொல்லிக் கொடுப்பதை கவனிப்பதே இல்லை. ஒவ்வொரு பாடவேளையும் இது தான் நடக்குது. ஆசிரியர்களும் கண்டும் காணாதது போல போயிருதாங்க. அதுலே, இவனுக்குத் தொக்காப் போச்சு. வகுப்பைக் கெடுக்கறதோட மட்டும் இல்லாம, இவன் ஒட்டுமொத்தப் பள்ளிக்கூடத்தையே கெடுத்திடுவான் போலிருக்கு. ஆசிரியர் கூட்டத்த போட்டு, இதுக்கு ஒரு முடிவு கட்டலைன்னா, நாம நிம்மதியா வேலை செய்ய முடியாது,'' என்றார்.

''டேய் நீ வகுப்புக்குப் போ... அங்க வந்து விசாரிக்கேன்,'' என்றவர், திருமலை ஆசிரியரை நோக்கி, ''இவன் ஒரு பிரச்னைக்குரிய பயதான் சார்... இவங்கப்பனும் இதை கண்டுக்க மாட்டேங்கா; அரசியல் செல்வாக்கு வேற. அரசாங்கமும் வாத்தியாருடைய வாயையும், கையையும் கட்டிப் போட்டுடுச்சு; அதனால பயல்களுக்கும் பயம் அத்துப் போச்சு. அவன் செய்த தப்புக்கு கடைசியில வாத்தியாரு தான் பழி சுமக்க வேண்டிருக்கு... நாமதான் கொஞ்சம் எச்சரிக்கையா நடக்கணும்... என்ன செய்ய,'' என்று சமாதானமாக பேசினார் தலைமை ஆசிரியர்.

''அவன் எவ்வளவு தப்புச் செய்தாலும், எதுவும் பேசாமப் போறது தான் நமக்கு நல்லதுன்னு சொல்லுதீங்களா சார்... முதல்ல அவனோட அப்பன வரச் சொல்லுங்க; நேருக்கு நேரா நானே பேசுதேன். அதனால வருகிற விளைவுகளை ஏத்துக்கிடுதேன். நீங்களோ, மற்ற ஆசிரியர்களோ பயப்பட வேண்டாம். அதுக்காக அதிகாரிகள் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கத் தயாரா இருக்கேன். எனக்கு இந்த மடம் இல்லையினா, ஒரு சந்தை மடம். வேலையே போனாலும் சரி! உழைப்புக்கேற்ற மதிப்பும், மரியாதையும் இல்லாத, இந்த மானங்கெட்ட தொழில் செய்ய எனக்கு மனசில்லை சார்,'' என்றார் திருமலை.

மறுநாள், முற்பகல் இடைவேளை நேரம். சந்தனப்பாண்டி தன் மகனை கூட்டிக் கொண்டு, காரில் வந்து இறங்கினார். இதைக் கண்ட ஆசிரியர்களுக்கு அச்ச உணர்வு. திருமலையை, மற்றும் ஆசிரியர்கள் சபித்தனர்.

தலைமை ஆசிரியர் தன் இருக்கையிலிருந்து எழுந்து வரவேற்றார். சந்தனப்பாண்டி, ''ஐயோ... என்ன சார் நீங்க, எல்லாருக்கும் அறிவு புகட்டும் புனிதமான பதவியில் இருக்கிற நீங்க போயி எனக்காக எழுந்து நிக்கீங்களே... தயவு செய்து உக்காருங்க,'' என்றார்.

''நீங்க லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதி; சட்டசபை உறுப்பினர். அதுக்காவது மதிப்புக் கொடுக்க வேண்டாமா,'' என்றார் தலைமை ஆசிரியர்.

''இது என்ன சார் நிரந்தரப் பதவியா... நீங்க நினைச்சா தேர்தல்ல நின்னு மந்திரியாக்கூட வரலாம். ஆனா, நான் தலைகீழா நின்னாக்கூட உங்க பதவிக்கு வர முடியாது. என் மகன் செய்த தவறுக்கு, குற்றவாளியா நான் உங்கள் முன்னால் நிற்கிறது தான் முறை. சார், இங்கு நடந்ததையெல்லாம் விசாரித்து, தெரிஞ்சுட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் திருமலை ஆசிரியரை பார்க்கணும். அவரைக் கொஞ்சம் வரச் சொல்றீங்களா,” என்றார் சந்தனப் பாண்டி.

அவரை அழைத்து வரச் சொன்னார் தலைமை ஆசிரியர். திருமலை ஆசிரியர் வந்ததும், அவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, அவர் கை இரண்டையும் பற்றிக் கன்னத்தில் வைத்தார் சந்தனப்பாண்டி. இந்த எதிர்பாராத நிகழ்ச்சியைக் கண்டு, அசந்து போயினர் அங்கிருந்தவர்கள்.

''என்னையா நீங்க போயி... எவ்வளவு பெரிய மனிதர்... என் காலைத் தொட்டு! எனக்கு ஒரு மாதிரி இருக்கு,'' என்று கூறினார் திருமலை.

''சார்... நீங்கள் என் குலதெய்வம். என் மகன் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்த முதல் ஆசிரியர் நீங்கள் தான். எனக்கு இதில் இம்மி அளவு கூட வருத்தமில்லை; மகிழ்ச்சி தான். அவன் திருந்தி, நல்ல மாணவனாக இருக்க இது ஒரு திருப்புமுனை யாக இருக்கும்ன்னு உறுதியா நம்புறேன். நான் ஒரு அரசியல்வாதி, சட்டமன்ற உறுப்பினர். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி என் மகனுக்காக என்றைக்காவது வந்திருக்கேனா...ஒரு சில ஆசிரியர்கள் என்னைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து, என் மகன் செய்யும் தவறையும், படிப்பில் மோசம் என்பதையும் கண்டுக்காம விட்டுட்டாங்க. அவன் திருந்தவோ, படிக்கவோ முயற்சி எடுக்கவில்லை.

''கோழையாக இருக்கும் ஓர் ஆசிரியர், மாணவர்களை வீரனாக்கக் முடியாது'ன்னு காந்திஜி சொல்லியிருக்கிறார். என் மகனை வீரனாக்காவிட்டாலும், சமுதாயத்தில் ஒரு மனிதனாகவாவது மாற்ற வேண்டியது ஆசிரியர் கடமை இல்லையா... குழந்தைகளுக்கு பெற்றோர் முதல் ஆசிரியர்; ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர்ன்னு சொல்லுவாங்க. எப்படி பார்த்தாலும், மாணவர்களுக்கு நீங்கள் பெற்றோர் தான். அவனுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம், எல்லாம் ஆசிரியர்களான நீங்கள் தான். இவனை உங்களிடம் அர்ப்பணித்துட்டேன்; நீங்க, அவனை எப்படி வளர்த்து விட்டாலும் சரி, எனக்கு மகிழ்ச்சி தான்,'' என்றவர், மகனை பார்த்து, ''டேய் செல்லத்துரை, இனிமே எந்தத் தவறும் செய்ய மாட்டேன்னு சார் காலில் விழுந்து மன்னிப்புக் கேளு,'' என்று கண்டிப்பான குரலில் கூற, முதன் முறையாக, திருமலை ஆசிரியர் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்டான் செல்லத்துரை.

எஸ். ஆதினமிளகி






      Dinamalar
      Follow us