
தென் ஆப்பிரிக்கா வில் இருந்த காந்திஜி, அப்போது தான் இந்தியா திரும்பி இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் அவர் இந்தியர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் போராடிய காரணத்தால், இந்தியாவிலும் பத்திரிகைகள் மூலமாக புகழ் பெற்றிருந்தார். அதனால், காசி இந்து பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவின் போது, காந்திஜியும் பேச அழைக்கப்பட்டிருந்தார். அப்போது, ஆங்கிலேய வைஸ்ராயாக இருந்தவர், ஹார்டிஞ்ச் பிரபு; அவர் தான் அடிக்கல் நாட்டினார். இந்தப் பல்கலைக் கழகம் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பண்டித மதன்மோகன் மாளவியாதான் காந்திஜியை பேச அழைத்திருந்தார். அடிக்கல் நாட்டிய பின், அங்கே வந்திருந்த பிரமுகர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும், மாலை வேளையில் பிரசங்கம் செய்வது என்று ஏற்பாடு செய்திருந்தார் மாளவியா. பிரசங்கத்தைக் கேட்க திரளான மக்கள் தினமும் கூடினர்.
சுதேச மன்னர்கள் பலர், மாளவியாவின் அழைப்புக்கு இணங்கி விழாவுக்கு வந்திருந்தனர்.
அவர்கள் மேடைக்கு எதிரே முதல் வரிசையில், விலை உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் ஜொலிக்க வீற்றிருந்தனர்.
காந்திஜி பேச வேண்டிய நாள் வந்தது. அன்று, தர்பங்கா (பீகார் மாநிலம்) மகாராஜா தலைமை வகித்தார். சாயங்காலம் பிரசங்கம் செய்ய வரும் முன்தான், காசி விசுவநாதர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பியிருந்தார் காந்திஜி. கோவில் சுற்றுப்புறத்தை மக்கள் மிக அசுத்தமாக வைத்திருப்பதைப் பற்றி, தன் பிரசங்கத்தின் போது குறை கூறினார்.
பின், மக்களின் ஏழ்மை நிலைமையையும், பணக்காரர்களின் படாடோபத்தையும் பற்றிப் பேசியவர், மன்னர்களின் பக்கம் நோக்கி, 'மன்னர்களே... உங்கள் ஆபரணங்களை எல்லாம் விற்று விடுங்கள்; உங்கள் செல்வத்தை ஏழைகளின் நலனுக்காகப் பயன்படுத்துங்கள்...' என்றார். இந்த சமயம், கூட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது.
முன் வரிசையில் இருந்த மன்னர்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
மேடையில் அமர்ந்திருந்த விழாத் தலைவர் காந்திஜியை நோக்கி, 'பேசியது போதும்; பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்...' என்றார்.
கேட்க வந்த மக்கள் கூட்டமோ, காந்திஜியைத் தொடர்ந்து பேசுமாறு குரல் கொடுத்தது. 'விழா தலைவர் சொல்படிதான் நடக்க முடியும். நான் தொடர்ந்து பேசுவது அவர் கையில் தான் இருக்கிறது...' என்றார் காந்திஜி. விழா தலைவர் தர்பங்கா மகாராஜா, காந்திஜியைத் தொடர்ந்து பேசுமாறு கூறினார்.
காந்திஜி, 'ஆங்கிலேயர்கள் அவர்களுடைய நாட்டில் கண்ணியமாக, நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் இங்கே வந்ததும் முரட்டுத்தனமாகவும், அகம்பாவத்துடனும் நடந்து கொள்வது ஏன்?' என்று கேட்டுவிட்டு, 'குற்றம் நம்முடையது தான்; நம்முடைய சகவாச தோஷத்தினால் தான் அவர்களும் கெட்டு விடுகின்றனர்...' என்று கூறினார்.
அடுத்து, காந்திஜி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அது, ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே தன்னை ராஜாதிராஜா, சக்கரவர்த்தி என்று நினைத்து கொண்ட வைஸ்ராய் பற்றிய குற்றச்சாட்டு. அதாவது, வைஸ்ராய் காசி நகருக்கு வருகிறார் என்றால், போலீசார், பாதுகாப்பு என்கிற பெயரில் கெடுபடி செய்கின்றனர்.
காசி நகரமே முற்று கைக்கு உள்ளானது போல் இருந்தது. மக்கள், அனு மதிச்சீட்டு இல்லாமல், தெருவில் போகக் கூடாது என்பதற்காக வீட்டு கூரையின் மேல், போலீஸ்காரர்களை நிறுத்தியிருந்தனர். இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, காசி நகரத்து மக்களின் முகங்களில் பயமும், பீதியும் நிலவியது. இது குறித்து காந்திஜி, 'இந்த ஏற்பாடுகள் வைஸ்ராயின் பாதுகாப்புக்காக நடந்திருந்தாலும், இவை வருந்தத் தக்கவை. ஒரு நகரத்தின் மக்கள் எல்லாரையும், வைஸ்ராய் தன் உயிர் பாதுகாப்பின் பொருட்டு இம்சைபடுத்துவதை விட, யாராவது ஒரு கொடியவனின் துப்பாக்கிக் குண்டுக்கு அவர் இரையாகி மடிவதே மேல்...' என்றார்.
கேட்டவர்கள் கைதட்டினர்; மேடையில் இருந்தவர்களோ அதிர்ந்து போயினர். அந்த கூட்டத்தில், மாவட்ட உயர் போலீஸ் அதிகாரியும், அதிகாரிகள் பலரும் இருந்தனர். அவர்கள் எல்லாரும் எழுந்து வெளியேறத் துவங்கினர். மன்னர்களும் வெளியேற ஆரம்பித்தனர்.
இதுவே, தனக்கு கிடைத்த வெற்றி என்று கருதி, அத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார் காந்திஜி.
—'காந்திஜியின் வாழ்வில்' நூலிலிருந்து...
நடுத்தெரு நாராயணன்

