sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 26, 2014

Google News

PUBLISHED ON : ஜன 26, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அக்கா—

என் வயது 45. என் பெற்றோருக்கு நான் ஒரே பெண்.

பி.யூ.சி., வரை படித்துள்ள எனக்கு உடன் பிறந்தோர் இல்லாததால் புத்தகமே துணை; அது, இனிமையான இளமைக்காலம்.

இடையில் வந்தது கல்யாணம். அதன் பின், வாழ்க்கை முழுவதும் போராட்டம் தான்! சந்தேகக் கணவன்; குழந்தைகள் நலன் கருதி, என்னுடைய ஆசையைப் பற்றி நினைத்து பார்க்காமல் காலம் கழிந்து விட்டது. நான் தனியார் மருத்துவமனையில், பன்னிரெண்டு ஆண்டுகளாக பணி செய்து வருகிறேன். இரண்டு பெண்களுக்கு மணம் செய்து விட்டேன். கொஞ்சம் கடன் இருக்கிறது. பையன் வேலை தேடிக் கொண்டு இருக்கிறான். இந்நிலையில் நான் பணிபுரியும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர், என்னை, அவரது மகள் வீட்டிற்கு அமெரிக்காவிற்கு அனுப்புவதாக கூறுகிறார்.

என்னால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. என் இரண்டாவது மகள், 'போய் வா... இது ஒரு நல்ல சந்தர்ப்பம்...' என்கிறாள். ஆனால், மூத்த மகளோ, 'நீ போக வேண்டாம். எப்படியோ கஷ்டப்பட்டு எங்களை கரையேற்றி விட்டாய். கொஞ்சம் கொஞ்சமாய் கடனை அடைத்து விட்டு, நீ இங்கேயே இரு...' என்கிறாள். வயதான பிறகு என்னை யார் கவனிப்பார்கள் என்றால், அதற்கும் பதில் இல்லை.

வீடு மட்டும் சொந்தமாக உள்ளது. என் கணவர் விவசாயி; 1993ல் இறந்து விட்டார்; நிலம் கொஞ்சம் உள்ளது. அதன் மீது பன்னிரெண்டு ஆண்டுகளாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

நான் தங்களுக்கு கடிதம் எழுதியதன் நோக்கம்,

* அமெரிக்கா செல்வதா, வேண்டாமா?

* அங்கு வாழ்க்கை முறை கடினமானதா?

* அப்படி போவதாக முடிவு எடுத்தால், நான் செய்ய வேண்டியது என்ன?

* அங்கு ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது.

* கடவுள் அருளால் நான் சென்று விடுவதாக இருந்தாலும், அங்கு எதாவது பிரச்னை என்றால், யாரை அணுக வேண்டும்; எப்படி பிரச்னைகளை தீர்த்து கொள்வது?

* நல்லதும் நடக்கலாம்; கெட்டதும் நடக்கலாம். நல்லவைகளை நினைக்காமல், கெட்டவைகளை எப்படி சமாளிப்பது. வழக்கு காரணமாக, சில வருடங்களுக்கு முன் வந்த வெளிநாடு போகும் வாய்ப்பை விட்டு விட்டேன். தற்சமயம் வெளிநாடு போவதால், வழக்கு பாதிப்பு ஆகுமா?

எனவே, என் குழப்பங்களுக்கு, தெளிவான பதிலை கூறுமாறு, மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு.

உங்கள் தங்கை.


அன்பு சகோதரிக்கு —

'குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை மனதில் கொண்டு, நாலு காசு சேர்க்கலாம் என நினைத்து, வெளிநாடு செல்லலாமா!' என்று கேட்டுள்ளீர்கள்.

வெளிநாட்டிற்கு போகலாமா, வேண்டாமா என்ற உன் கேள்விக்கு சட்டென்று, போகலாம் அல்லது போகக்கூடாது என்று உனக்காக நான் முடிவெடுக்க முடியாது. ஒருவேளை அப்படி யாராவது முடிவெடுத்தாலும், அது சரியாக அமையாது. உன் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நிகழ்விற்கு, நீதான் முடிவெடுக்க வேண்டும்.

இருப்பினும், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீ நினைக்கும் பட்சத்தில், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை உனக்கு பட்டியல் இடலாம். இவைகளை படித்துப் பார்த்து உன்னுடைய பலம், பலவீனங்களை அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவு எடுப்பது உன் கையில் தான் இருக்கிறது.

உனக்கு சாதகமான சூழல்கள்...

* தற்பொழுது நீ வாழும் வாழ்க்கை, நிதி நிலையை நீ நன்கு உணர்ந்திருக்கிறாய். பிரச்னை பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.

* பனிரெண்டு ஆண்டுகள் இந்தியாவில் நீ பணிபுரிந்த அந்த மருத்துவரின் மகள் வீடு... ஆகவே, அந்த பெண், உனக்கு நன்கு தெரிந்தவராகத்தான் இருப்பார்.

* அந்த பெண்ணின் பழக்க வழக்கங்கள், அணுகுமுறைகளை நீ நன்கு அறிந்திருக்கிறாய்.

* இந்தியாவில் மிகக் கடினமாக உழைப்பது போல, அங்கு நீ அதிகமாக உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

* உன் முக்கியமான வேலை என்னவென்றால், அது அப்பெண்மணியின் குழந்தையை கவனிப்பது மற்றும் வீட்டை ஒழுங்குப்படுத்தி அதை நன்றாக பார்த்துக் கொள்வது... இல்லையா! அதைத்தான் நீ நல்ல முறையில் இந்தியாவில் இத்தனை ஆண்டுகள் செய்திருக்கிறாயே.

* எவ்வளவு சம்பாதிக்கிறோமோ, அதில் பெரும்பங்கை நாம் சேமிக்கலாம்.

* நல்ல பாதுகாப்பும் உனக்கு கிடைக்கிறது.

* அவர்கள் உனக்கு முன்பே தெரிந்தவர்கள் என்ற காரணத்தால், உனக்கு மொழிப் பிரச்னையும் எழ வாய்ப்பில்லை.

* வெளிநாட்டில் கிடைக்கும் பணம், இங்கிருக்கும் உன் வீட்டுப் பிரச்னையையும், கடனையும் அடைத்து விடலாம்.

* திரும்ப இந்தியாவிற்கு வரும்பட்சத்தில் உனக்கு நிறைய அனுபவமும், அதிக அளவு தன்னம்பிக்கையும் கூடும். புதிய வாழ்க்கையை இங்கு, மனம் போல துவக்கலாம்.

சரி சகோதரி... உன் பிரச்னைகள் அல்லது நீ எழுப்பிய கேள்விக் கணைகளுக்கு கீழ் கண்டவாறு தயார் செய்து கொள்ளலாம்.

* தகுந்த நபரிடம் சொல்லி உனக்கு 'பாஸ்போர்ட்' வாங்க ஏற்பாடு செய்வது.

* இந்த இடைப்பட்ட காலத்தில், கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து கொள்வது. குறிப்பாக டைப் அடிப்பது, இ-மெயில் தயார் செய்வது, இ-காமர்ஸ் என்றால் என்ன, அது எப்படி என்று தெரிந்து கொள்வது...

* அந்த நாட்டு தட்ப வெப்ப நிலைகளைப் பற்றியும், முக்கியமான இடங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவைகளைப் பற்றியும் விவரமாக புத்தகங்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் தெரிந்து கொள்வது.

* லேட்டஸ்ட்டாக இருக்கும் 'கிச்சன்' பொருட்களைப் பற்றி, அவைகளை உபயோகிக்கும் முறைகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

* உன் டாக்டரிடம் மிக தைரியமாக, உண்மையாக, மனம் திறந்து, வெளிநாடு செல்வதன் நோக்கத்தையும், அது எவ்வளவு தூரம் உன் குடும்ப பிரச்னைகளை சமாளிக்க உதவும் என்பதையும் பேசுவது நல்லது.

* எப்பொழுதும் உன் பாஸ்போர்ட் எண்ணை மறக்காமல், ஞாபகமாக வைத்திருப்பது அவசியம்.

* உனக்கு என்று ஒரு, 'கிரடிட் கார்டு', மொபைல் போன் வைத்துக் கொள்வது.

* எப்பொழுது நினைத்தாலும், இந்தியா வந்து குழந்தைகள் மற்றும் உறவினர்களை பார்த்து பேச, உன் டாக்டரிடம் முன் அனுமதி பெறுவது.

* உனக்கு ஒரு வேளை அந்த ஊரில் பிரச்னை ஏற்பட்டால், அந்த ஊரில் இருக்கும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்... எனவே, அது பற்றிய விவரங்களை சேகரிப்பது.

* உன் நிலத்தின் மேல் இருக்கும் வழக்கை நடத்தவும், அது சம்பந்தமாக சரியான முடிவெடுக்கவும், உனக்குத் தெரிந்த நம்பிக்கையான நபருக்கு, 'பவர் ஆப் அட்டார்னி' வழங்கி, அவரது உதவியுடன் வழக்கை நடத்த ஏற்பாடு செய்வது...

மேற்கூறிய இந்த பத்து அம்சங்களை நீ மனதில் கொண்டு உன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டால், உனக்கு பிரச்னை வர வாய்ப்புகள் மிக மிக குறைவு.

இவைகள் அனைத்தும் வேண்டாம்... நான் இந்தியாவிலேயே இருக்கிறேன்... கஷ்டமோ, நஷ்டமோ, என் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடக்கட்டும் என்று நீ நினைக்கும் பட்சத்தில், உன் பிரச்னை தீர எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்றும் நீ நன்றாக யோசித்துக் கொள்.

இத்தனை ஆண்டுகள் நீ பட்ட கஷ்டங்கள் தீர, மன நிம்மதி பெற, மிகச் சரியான முடிவையே தேர்ந்தெடுப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும். உன் நல்வாழ்வுக்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

என்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us