PUBLISHED ON : ஜூன் 11, 2023

திடீரென்று தீபாவுக்கு விழிப்பு வந்தபோது, ஜன்னல் வழியாக அறைக்குள், சூரிய ஒளி பிரவேசித்திருந்தது. எங்கிருந்தோ, கந்தசஷ்டி கவசம் கேட்டது.
அடித்துபிடித்து எழுந்தாள், தீபா. திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்த இரண்டாம் நாளே இப்படி பொழுது விடிந்தது கூட தெரியாமல் துாங்கினால், மாமியார் என்ன நினைப்பாள்?
'விடிஞ்சது கூட தெரியாம இப்படி துாங்கினா வீடு உருப்பட்டாப்ல தான்...' என்று, சொல்ல மாட்டாளா?
பயந்து கொண்டே படுக்கையறையை விட்டு ஹாலுக்கு வந்தாள், தீபா.
சமையலறையில் குக்கர் விசில் சத்தம் கேட்டது. தரையில் காய்கறிகள் கொட்டிக் கிடந்தன.
'இன்றைக்கு மாமியாரிடம் வசமாக மாட்டிக் கொண்டோம்...' என்று பயந்தாள்.
'பாத்ரூம்' செல்ல, தீபா காலை துாக்கி வைத்தபோது, ''எழுந்துட்டியாம்மா, தீபா... இன்னும் கொஞ்ச நேரம் துாங்கியிருக்கக் கூடாதோ?'' என்றாள் மாமியார், அகிலாண்டம்.
உண்மையாக சொல்கிறாளா அல்லது குத்தி காட்டுகிறாளா என்று புரியவில்லை, தீபாவுக்கு. 'உங்க பிள்ளை, ராத்திரி முழுக்க என்னை துாங்க விடலேம்மா... காலம்பர துாக்கம் கண்ணை சுத்துது...' என்று மாமியாரிடம் எப்படி சொல்ல!
''பல் தேய்ச்சுட்டு வா, காபி கலக்கறேன்,'' என்றாள், அகிலாண்டம்.
'நீ எந்திரிக்கிறதுக்கு முன்பே நான் எழுந்து காபியெல்லாம் போட்டு வைச்சுட்டேன் பார்...' என்று சொல்லாமல் சொல்கிறாளா...
பல் தேய்த்து, முகத்தை புடவை தலைப்பால் துடைத்தாள், தீபா.
டபரா டம்ளரில் ஆவி பறக்கும், 'கமகம'வென மணக்கும் காபியை நீட்டி, ''உனக்கு எந்த காய் ரொம்ப பிடிக்கும், தீபா?'' என்றாள், அகிலாண்டம்.
''எல்லா காய்களும் பிடிக்கும். காபி ரொம்ப நல்லா இருக்கும்மா... பொரியலா, கூட்டா, அவியலா? என்ன காய் நறுக்கணும்?'' என்றாள்.
''காயெல்லாம் நறுக்கி குக்கர்லயே வெச்சுட்டேன். இறக்கி தாளிச்சு கொட்டணும் அவ்வளவுதான்,'' என்றாள், அகிலாண்டம்.
'உனக்கு ஒரு வேலையும் வைக்காம நானே எல்லாத்தையும் செஞ்சுட்டேன். சாப்பிடுவது மட்டும் தான் உனக்கு வேலை...' என்று, அவள் சொல்வது போலிருந்தது தீபாவுக்கு.
காபி, சமையல் ஆகிவிட்டதென்றால் அப்புறம் என்ன பெரிய வேலை இருக்கப் போகிறது, துணி துவைக்கிறதுதானே பாக்கி.
புடவை தலைப்பை இழுத்து இடுப்பில் செருகி, ''துணியையாவது துவைக்கிறேன்ம்மா,'' என்று எழுந்தாள், தீபா.
''அழுக்குத் துணி எல்லாம் சோப்புப் பவுடர் போட்டு ஊற வைச்சுருக்கேன், தீபா. வேலைக்காரி வந்து துவைச்சு காயப் போட்டுடுவா,'' என்றாள்.
''சாயந்திரம் டிபனுக்கு?'' என்றாள், தீபா.
''கிரைண்டர்ல மாவு அரைச்சு வெச்சிருக்கேன்,'' என்றாள், அகிலாண்டம்.
அவள் செய்ய எந்த வேலையும், மாமியார் வைக்காதது எரிச்சலைத் தந்தது. தன்னை அடக்கிக் கொண்டாள்.
அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த நாட்களிலும் தீபாவை வீட்டு வேலை எதுவும் செய்யவிடவில்லை; எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு தானே செய்தாள், அகிலாண்டம்.
'சிலருக்கு வீட்டு வேலைகளை தாங்களே செய்தால் தான் திருப்தி. அப்படிப்பட்டவளோ மாமியார்...' என, நினைத்துக் கொண்டாள்.
மாலையில் கணவனுடன் வெளியில் செல்ல, தீபாவுக்கு தலை வாரி, பின்னி, பூ வைத்தாள், அகிலாண்டம்.
தான் சமைத்திருந்தாலும், பிள்ளைக்கு தீபாவை விட்டே பரிமாற செய்தார், மாமியார்.
அடிக்கடி அவர்களை, சினிமா, பீச், கோவில், அங்கே, இங்கே என்று போய் வரச் சொன்னாள்.
மாமியார் வெளியில் சென்று வரும்போது, 'கடையில் இதை பார்த்தேன், தீபா. உனக்கு ரொம்ப, 'மேட்சா' இருக்கும்ன்னு தோணித்து. உடனே வாங்கிட்டேன்...' என்று சொல்லி கொடுப்பாள்.
பிள்ளை மாதுவும், மருமகள் தீபாவும், 'டிவி' பார்த்துக் கொண்டிருக்கும்போது, தோட்டத்திற்கு சென்று தண்ணீர் விடுவாள், அகிலாண்டம்.
ஆரம்பத்தில் இப்படி மருமகளை தாங்கு, தாங்கென்று தாங்குகிற மாமியாரெல்லாம் எப்படி மாறிப் போய் விடுவர் என்பதை அறிந்து வைத்திருந்தாள், தீபா. சில நாட்களிலேயே தன் மாமியாரும் மாறி விடுவாள் என்று எண்ணி, எதிர்பார்க்கவும் செய்தாள்.
ஆனால், மாறாமல் அப்படியே இருந்தாள், அகிலாண்டம்.
ஒருநாள்-
''அம்மா, உன்னை எவ்வளவு அன்பாக நடத்துகிறாள் பார்த்தியா?'' என்று கேட்டான், மாது.
''அம்மா, அப்படி என்னை நடத்தறதுக்கு ஏதாவது காரணம் கண்டிப்பா இருக்கும்,'' என்றாள், தீபா.
''காரணமா?''
''ஆமாம்,'' என்றாள்.
''என்ன காரணம், தீபா?''
''மருமகளை, தாங்கு தாங்கென்று தாங்கினால் தான், நம்மால் பிள்ளை வீட்டில் இருக்க முடியும். இல்லாவிட்டால், வீட்டை விட்டு நம்மை துரத்தி விடுவாள் மருமகள் என்ற பயம் தான் அது,'' என்றாள்.
''தீபா, இந்த வீடு யார் பெயரில் இருக்கிறது தெரியுமா? அம்மா பெயரில். இன்றைய விலைக்கு இந்த வீடு, ஒரு கோடி ரூபாய் போகும். இரண்டு போர்ஷன் வாடகை, 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. அதில்லாமல், அப்பா போன பின், அம்மாவுக்கு குடும்ப பென்ஷன் மாதம், ஐந்தாயிரம் ரூபாய் வருகிறது.
''ஊரில், அம்மா பெயரில் இருக்கிற நிலத்திலிருந்து, வருஷத்துக்கு இரண்டு முறை, 10 மூட்டை அரிசி வருது. 80 பவுன் நகைகள், வங்கியில், 30 லட்சம் ரூபாய், பணம் இருக்கிறது. அம்மா, நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவசியமே கிடையாது.
''அம்மாவை பற்றி தப்பா பேசி, தப்புத் தப்பா புரிஞ்சுகிட்டு, அவள் கூட சண்டை போட்டா, நாம தான் நடுத்தெருவுல நிற்கணும். மாதச் சம்பளம் தவிர, எனக்கு வேற எந்த வருமானமும் கிடையாது,'' என்றான், மாது.
ஆனாலும், மாமியார் தன்னிடம் ஏன் இவ்வளவு அன்பை, பாசத்தை பொழிகிறாள் என்பது, தீபாவுக்கு கேள்விக்குறியாகவே இருந்தது.
அகிலாண்டத்தை பார்க்க, அவள் தோழி ராஜாமணி வந்திருந்தாள். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது, தன் அறையிலிருந்த தீபாவுக்கு கேட்டது.
''அகிலா... உன்னை, இன்னைக்கு நேத்திக்கு இல்ல, 40 வருஷமா எனக்கு தெரியும். உன் மாமியார்கிட்ட எவ்வளவு இம்சை பட்டேங்கிறதும், எத்தனையோ நாள் மாமியார் உன்னை பட்டினி போட்டிருக்கா, தேவையில்லாததை பேசி, வாயால சுட்டிருக்கா...
''அப்படி இருந்தும், நீ அன்பா, பிரியமா உன் மருமகள்கிட்ட இருக்கிறத நெனச்சா, எனக்கு பெருமையா இருக்கு. ஒவ்வொரு மருமகளும், தன் மாமியார்கிட்ட கொடுமையை அனுபவிக்கிறப்போ, 'நாளைக்கு நமக்கு ஒரு மருமகள் வந்தா, அவளையும் நாம இப்படித்தான் நடத்தணும்'ன்னு நெனப்பாங்க. நீ என்னடான்னா...'' என்று இழுத்தாள், ராஜாமணி.
''அதுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்ன்னு தான், என் மருமகள, பெண்ணா நினைச்சு நடத்தறேன், ராஜாமணி. ஒருத்தி, தன் மாமியாரால துன்பப்பட்டதற்கு ஒன்றுமே அறியாத தன் மருமகளுக்கு, ஏன் தானும் கடுமையா, கொடுமையா நடந்து, தண்டனை கொடுக்கணும்.
''இந்த பழி வாங்குற உணர்ச்சி, சங்கிலி மாதிரி தொடரக் கூடாது, ராஜாமணி. ஏதாவது ஒரு கட்டத்திலே, ஏதாவது ஒரு பெண், இந்த வழக்கத்தை எதிர்த்தே ஆகணும். இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைச்சே ஆகணும்; அந்த முற்றுப்புள்ளியை என் குடும்பத்தில் வைக்க ஆரம்பிச்சுட்டேன்.
''இன்னைக்கு என் மருமகள்கிட்ட காட்டற அன்பை, அவள் மருமகள்கிட்ட அவள் காட்டலாம். புது சங்கிலி, மாமியார் - மருமகளுக்கு இடையிலே பாச பிணைப்பா உண்டாகணும். அதைத்தான் நான் செய்துகிட்டிருக்கேன்,'' என்றாள், அகிலாண்டம்.
இதைக் கேட்ட தீபாவுக்கு, மாமியார் மீது மரியாதையும், பாசமும் அதிகமானது.
வி. பாலமுரளி
