PUBLISHED ON : நவ 05, 2023

அந்த வீட்டில் உறவுகளின் மொத்த கூட்டமும், வரவேற்பறையில் குவிந்திருந்தது. அனைவரின் முகங்களிலும் டன் கணக்கில் ஆவேசம் கொதித்துக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு கூச்சலும், கூப்பாடும் போட்டுக் கொண்டிருந்தனர்.
பத்மாவும், 18 வயதே நிரம்பிய அவள் மகள் பூஜாவும், ஆழ்ந்த அமைதியில் இருந்தனர். பூஜாவின் விழிகள் மட்டும் கண்ணீரால் நிரம்பியிருந்தன.
நீண்ட நேரம் அங்கு நிலவிய சந்தைக்கடை இரைச்சலை, முடிவுக்கு கொண்டு வந்தார், பத்மாவின் அண்ணன் மாணிக்கம்.
''எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க,'' மாணிக்கத்தின் வெண்கல குரல் அதட்டலில், சற்று மிரண்டு போயினர்.
மறு நொடியே அங்கு மயான அமைதி நிலவியது.
''நடந்தது நடந்து போச்சு. இனி, ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்காம, அதையே பேசிக்கிட்டு இருப்பதில் என்ன பயன்?''
''நடந்து முடிஞ்ச கொடுமைக்கு என்ன தான் பரிகாரம்?'' என, ஆவேசத்துடன் கேட்டான், பத்மாவின் பங்காளி சேகர்.
''கொஞ்சம் பொறு சேகர், தப்பு செஞ்சது, என் பையன். பாதிக்கப்பட்டது, என் தங்கச்சி பொண்ணு. நான் முடிவு செஞ்சிட்டேன், உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா இந்தப் பிரச்னையை சுமூகமா தீர்த்துக்கலாம்.''
பங்காளி சேகர் உட்பட, அறையிலிருந்த அனைவருமே, மாணிக்கத்தின் முடிவிற்காக ஆவலுடன் அவரது முகத்தையே பார்த்தனர்.
''என் பையன் வசந்த், என் தங்கச்சி மகள் பூஜாவை கெடுத்ததை ஒப்புகிட்டான். சின்ன வயசுலேர்ந்து பூஜா கூட ஓடிப் பிடிச்சு, விளையாடிய வசந்த், ஏதோ ஒரு சூழ்நிலையில எல்லை மீறி விளையாடிட்டான். அது, நம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.
''என் பையன் செஞ்ச தப்புக்கு பரிகாரமா, பூஜாவுக்கும், என் பையனுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை பண்ணி வச்சுடுவோம்,'' தன் முடிவை, மாணிக்கம் திட்டவட்டமாய் கூற, அங்கிருந்த அனைவரின் முகங்களும் ஏகத்துக்கு பரவசமாகிக் கொண்டிருந்தது.
பத்மா மட்டும் அதிர்ந்து போனாள். தன் மகள் பூஜாவை பார்க்க, அவளோ, அங்கு நடப்பதற்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல், கண்ணீரோடு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
''அண்ணா, தப்பு செஞ்சது, உங்க பையன். அதுக்கு ஏன் என் பொண்ணுக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கறீங்க?'' என்ற பத்மாவின் கேள்வியால் சற்று தடுமாறினார், மாணிக்கம்.
''பத்மா, இது தண்டனை இல்லம்மா, பரிகாரம். இதை விட நல்ல பரிகாரம் இந்த உலகத்தில வேறு எதுவும் இருக்க முடியாது.''
''எனக்கு, உங்க முடிவுல கொஞ்சம் கூட உடன்பாடில்ல. ஒரு பையன், ஒரு பொண்ணை கற்பழிச்சுட்டா, அவனுக்கே அந்த பொண்ணை கட்டி வைக்கணும்ன்னு ஏன் முட்டாள்தனமா முடிவு எடுக்கறீங்க?''
''என்னது... நான் எடுத்த முடிவு, முட்டாள்தனமானதா?'' என்ற மாணிக்கம் உட்பட, அங்கிருந்த அனைவரும் ஏகத்துக்கும் அதிர்ந்து, வாய் பிளந்தனர்.
''ஆமாண்ணா. பூஜா, இப்ப தான் பிளஸ் 2 பரீட்சை எழுதியிருக்கா. டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆகணும்ன்னு, அவ மனசுல ஏகப்பட்ட கனவுகள் ஓடிக்கிட்டிருக்கு.
''உங்க பையன், உடம்பு அரிப்பெடுத்து, என் பொண்ணை தீனியாக்கிட்டான். இதுல, பூஜா என்ன தப்பு செஞ்சா... எதுக்காக அவளுக்கு இப்பவே கல்யாணம் செய்யணும்?''
''பத்மா, உன் பொண்ணை, உடம்புல ஒட்டு துணியில்லாம பார்த்துட்டான், வசந்த். இது ஊருக்கே தெரிஞ்சு போச்சு. இனிமே, பூஜாவை யார் கல்யாணம் செஞ்சுக்குவாங்க?'' படபடத்தான், பங்காளி சேகர்.
''பத்து வயசு பிள்ளை கூட தான், 'ஆன்ராய்டு' போன்ல ஆபாச வீடியோ பார்க்குது. ஒட்டு துணியில்லாம எத்தனையோ பொண்ணுங்களை ஆபாச வீடியோவுல, வசந்தும் பார்த்து ரசிச்சிருப்பான். அதுக்காக, அந்த பொண்ணுங்களை, அவனுக்கு கட்டி வைப்பீங்களா?''
''பத்மா... லுாசுத்தனமா பேசாத. வீடியோ வேற. 'ரியல் லைப்' வேற. என் பையனால, ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கை பாழாகக் கூடாதேங்கிற நல்ல எண்ணத்தில் தான், நான் இந்த முடிவெடுத்தேன்.''
''உங்க பையனுக்கு, பூஜாவை கல்யாணம் செஞ்சா தான், அவ வாழ்க்கை வீணாப் போகும், அண்ணா.''
''ஏம்மா, அந்தஸ்துல கூட, நான் உன்னை விட அதிகம்தாம்மா. வசந்த், எனக்கு ஒரே பையன். அவனும் டிகிரி முடிச்சுட்டு, ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அப்புறம் என்ன உனக்கு தயக்கம்?''
''என் பொண்ணு, இன்னும் படிப்பை முடிக்கலையே, அண்ணா.''
''படிப்புதானே... அது எங்கிட்டு போயிடப் போகுது. கல்யாணத்துக்கு பிறகு எத்தனை டிகிரி வேணும்ன்னாலும் படிக்கட்டுமே.''
''பூஜாவுக்கு, உங்க பையன் தாலி கட்டினா, அடுத்த வருஷமே அவ வயித்தை தள்ளிகிட்டு வந்து நிற்பா. இதுல அவ படிச்சு வேற கிழிச்சிட போறாளா... ஆகற கதையை பேசுங்க, அண்ணா.''
''இப்போ, நீ என்ன தான் முடிவா சொல்ற பத்மா?''
''சம்பந்தப்பட்ட ரெண்டு பேருமே, இங்க தான் இருக்காங்க. பெரியவங்க நாம ஏன் அவங்க வாழ்க்கையில முடிவெடுக்கணும்... அவங்களையே கேளுங்க,'' என்றாள், பத்மா.
சற்றே சிரித்து, தன் மகனிடம், ''வசந்த், நீ என்னடா சொல்ற?'' என்றார்.
''பூஜாவை நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்பா.''
''சந்தோஷம் வசந்த். பூஜா, நீ என்னம்மா சொல்ற?''
''வசந்தை சின்ன வயசுலேர்ந்தே எனக்கு தெரியும், மாமா. அதே உரிமையில் தான், நானும் அவனிடம் நட்பா பழகினேன். ஆனா, அவன் எல்லை மீறிட்டான். என்னால அவனை தடுக்க முடியலை.
''நடந்த தப்புக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நிறைய படிக்கணும். இப்போ கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை, மாமா.''
''பூஜா, பெரியவங்க பேச்சை கேளும்மா. உன் நல்லதுக்கு தான் நான் சொல்றேன்,'' என்றார், மாணிக்கம்.
''வேணாம் அண்ணா. நடந்தது ஒரு விபத்துன்னு நினைச்சுக்கிறோம். என் பொண்ணோட ஒட்டுமொத்த வாழ்க்கையையே காவு வாங்க, நான் விரும்பல. இப்போ, பூஜாவுக்கு தேவை, மன தைரியமும், ஆறுதலும் தான்.
''நடந்த பிரச்னைகளிலேர்ந்து அவளை, நான் மெல்ல மெல்ல மீட்டெடுப்பேன். நீங்க எல்லாரும் இனிமே இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்காம, வேற வேலை இருந்தா பாருங்க,'' என்றாள், பத்மா.
''பத்மா, புருஷன் இல்லாத விதவை பொண்ணும்மா, நீ. ஏற்கனவே கெட்டுப் போன வயசு பொண்ணை வச்சுக்கிட்டு நீ ஏன் அல்லாடணும்?''
''அண்ணா, உன் மகன் வசந்த் தான், 'செக்ஸ்' வெறி பிடிச்சு அலையறான். இன்னிக்கு என் பொண்ணு மேல கை வச்சவன், நாளைக்கு வேறொரு பொண்ணு மேல கை வைக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?
''என் அண்ணன் பையனா இருக்கறதால, அவனை கண்டபடி திட்டி விட்டுட்டேன். வேற யாராவது இருந்தா, அவனை வெட்டி கொன்னு போட்டிருப்பாங்க.
''வசந்த், ருசி கண்ட பூனை. அடுத்த தப்பு பண்றதுக்குள்ள, அவனுக்கு வேற ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பாருங்க.''
பத்மா திட்டவட்டமாய் தன் முடிவை கூற, அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து, அவளை வெறித்தனர்.
அதன்பின், தன் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டாள், பத்மா. மகளுக்கு நிறைய மன தைரியத்தை புகட்டினாள். மன நிம்மதிக்காக நல்ல ஆலோசனைகளை வழங்கினாள்.
வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்று வந்தாள், பூஜா. மாணிக்கமும், அவரது மகன் வசந்துக்கு, வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார். குடும்பம், குடியென வாழ்ந்து கொண்டிருந்தான், வசந்த்.
பத்து ஆண்டுகள் கடந்தது.
''எங்களுக்கு இன்னைக்கு முதல் கல்யாண நாள். வாழ்த்துங்கள் அத்தை...'' மாப்பிள்ளையான டாக்டர் விக்னேஷும், தஞ்சை மாவட்ட கலெக்டரான, மகள் பூஜாவும், பத்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
மிகுந்த பூரிப்புடன் அவர்கள் இருவரையும் துாக்கி நிறுத்தினாள், பத்மா.
''அம்மா, நீ மட்டும் எனக்கு பக்கபலமா இல்லேன்னா, இன்னிக்கு உன்னோட சொந்த கிராமத்துல, அந்த வசந்தை கட்டிக்கிட்டு ரெண்டு, மூணு குழந்தைகளை வரிசையா பெத்துக்கிட்டு, நானும் சராசரி பொம்பளையா தான் வாழ்ந்துகிட்டு இருக்கணும்.''
''ஆமாம் பூஜா.''
''அந்த வசந்த், இப்போ எப்படி இருக்கான், அத்தை?'' மருமகன் விக்னேஷ், ஆவலாய் கேட்டான்.
''அவனுக்கென்ன... கஞ்சா, குடி, கும்மாளம்ன்னு, அப்பன், ஆத்தா சம்பாதிச்ச சொத்தை கரியாக்கிட்டு, நோயாளியா நடமாடிட்டு இருக்கான், விக்னேஷ்.''
''உங்களால தான், பூஜாங்கிற நல்ல கலெக்டர், இந்த தஞ்சாவூருக்கு கிடைச்சிருக்காங்க. எனக்கும் ஒரு அறிவான, அன்பான, அழகிய தேவதை மனைவியாகவும் அமைஞ்சிருக்காங்க. 'யூ ஆர் ரியலி வெரி கிரேட்' அத்தை,'' தன் மாமியாரின் கரங்களை பற்றி குலுக்கினான், டாக்டர் விக்னேஷ்.
- சி.க. வசந்தலட்சுமி
வயது: 52,
படிப்பு: எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
சொந்த ஊர்: தஞ்சாவூர்.
இவரது படைப்புகள் பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. சிறுகதை போட்டிகளில், இவரது படைப்புகள் பல பரிசுகளையும் பெற்றுள்ளன. இவரது, 'குரோமோசோம் பூக்கள்' என்ற முதல் நாவலுக்கு, விருதுகள் கிடைத்துள்ளன. புகழ்பெற்ற சிறந்த நாவலாசிரியராக வரவேண்டும் என்பது, இவரது லட்சியம். இக்கதை முழுக்க முழுக்க, இவரது சொந்த கற்பனை என்று குறிப்பிட்டுள்ளார்.
