தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆண் கிளிகளின் அம்மாக்கள்!

ஆண் கிளிகளின் அம்மாக்கள்!

ஆண் கிளிகளின் அம்மாக்கள்!


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குதிகால் வலிக்காக, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, மொபைல் போன் ஒலித்தது. அருகில் உள்ள அறையை நோக்கி, ''கோகுல்... கொஞ்சம் அந்த மொபைல் போனை எடுத்துக் கொடேன்,'' என்றாள் உரக்க!

பதில் வரவில்லை; அறைக்குள் பார்வையை செலுத்திய போது, சுவரில் பந்தை அடித்து, விளையாடிக் கொண்டிருந்தான், கோகுல்.

''ஏய் கோகுல்... மொபைல எடுத்துக் கொடு... கால் வருது பார்,'' என்றாள், சத்தமாக!

வேண்டா வெறுப்பாக வந்து, போனை எடுத்து, அவளிடம் வீசி, ''தரையில உக்கார்றதுக்கு முன், போனை எடுத்து வெச்சுக்க மாட்டியா... எனக்கு மட்டும் தினம் நுாறு அட்வைஸ் பண்றே,'' என்று காட்டமாக சொல்லி விட்டு போனான்.

கோபத்தை அடக்கிய படி போனை எடுத்து, ''ஹலோ... யார் பேசுறது?'' என்றாள்.

''நான், கோகுலோட கிளாஸ் மிஸ் பேசுறேன்,'' என்ற குரலில் தோழமை இல்லை.

இதுவரை இப்படி போன் வந்ததில்லையே என நினைத்து, ''சொல்லுங்க மிஸ்...'' என்றாள்.

''கோகுல் பத்தி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்,'' என்றதும், மனதில் சிறு பதற்றம் தொற்ற, ''ப்ளீஸ்... சொல்லுங்க மிஸ்,'' என்றாள்.

''கோகுல் நல்ல புத்திசாலி தான்... மாத்ஸ், லாங்குவேஜ், பிசிக்ஸ்ன்னு எல்லாத்தையும் ஆர்வமா படிச்சாலும், அவன்கிட்ட நாகரிகம் கொஞ்சம் கூட இல்ல. பெண் பிள்ளைகளிடம் முரட்டுத்தனமா நடந்துக்கிறான். ஒரு பொண்ணு, வீசிங் பேஷன்ட்; அவள வாஷ் ரூம்ல வெச்சு வெளியில தாழ்ப்பாள் போட்டுட்டான். ஒரு போபால் பொண்ணை, குள்ள வாத்துன்னு கூப்பிடறான்... பொம்பளப் பிள்ளைங்களோட டிபன் பாக்ஸ்ல மணல கொட்டறது, பின்னால போய் கத்தி பயமுறுத்தறது, மட்டமா பேசறதுன்னு இருக்கான்... நான் எச்சரிக்க செய்தும், கேக்கறதா தெரியல.''

''என்ன மிஸ் சொல்றீங்க... கோகுல் கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவன் தான்; ஆனால், பெண்கள்கிட்ட நாகரிகமாக இருக்கணும்ன்னு அவனுக்கு சொல்லி கொடுத்திருக்கேனே,'' என்றாள் கவலையுடன்!

''இப்படியே விட்டா, அவன் ரொம்ப மோசமாய்டுவான்னு தோணுது. உங்க கணவர் வெளிநாட்டுல இருக்காரா?'' என்று கேட்டாள்.

''ஆமாம்; இங்க இருந்தாலும், அவர் பெரிசா ஒண்ணும் கண்டுக்க மாட்டார்... நான், அவன கவனிச்சுக்கிறேன் மிஸ்... வெரி சாரி...''

''இது அவ்வளவு எளிதான வேலை இல்ல; நானும் முயற்சி செய்றேன்; நீங்களும் அவனுக்கு புரிய வைக்கப் பாருங்க...'' என்று கூறி வைத்து விட்டாள்.

படபடப்பாய் வந்தது. 'எவ்வளவு அவமானம்... போன் செய்து சொல்கிற அளவுக்கு நிலைமை போய் விட்டதே...' குதிகால் வலி, நெஞ்சில் வந்து விட்டது.

கோகுல் பிடிவாதக்காரன் தான்; எல்லாவற்றிலும் வேகம். நினைத்தது நடக்க வேண்டும் என்கிற வெறித்தனமான மனநிலை. அம்மா, பாட்டி, சித்தி, அத்தை என்று எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுகிற குணம் கொண்டவன் தான். அதனால்தான் வாய்ப்புகளை உருவாக்கி, கதை, வரலாறு, சுதந்திரப் போராட்டம் என, பல விஷயங்களை அவன் மனதில் விதைத்து வருகிறாள்.

காரடையான் நோன்பு அடைகளை அவனுக்கு கொடுத்து, சதி அனுசுயா, எப்படி தன் புத்திசாலித்தனத்தால் சூரியனையே வரவிடாமல் வரம் வாங்கினாள் என்று எடுத்து சொன்னாள். கஸ்துாரிபாய் காந்தியும், ஜென்னி மார்க்சும் எப்படி கணவனுக்கு உறுதுணையாய் இருந்தனர் என்று பெருமையாக சொன்னாள். ஜோன் ஆப் ஆர்க், ஜான்சி ராணி, சித்துார் ராணி பத்மினி என்று வீரமங்கைகளின் கதைகள், சரோஜினி நாயுடுவின் பல்லக்கு துாக்கிகளின் கவிதைகள், வீர சிவாஜிக்கு, பராக்கிரம கதைகளை சொன்ன அவன் அம்மா, 16 வயதிலேயே கொடியேந்தி வந்து காந்திஜியுடன் நின்று போராடிய தில்லையாடி வள்ளியம்மை என்று பெண்ணின் பெருமைகளை எத்தனையோ உண்மை கதைகளின் மூலம் சொல்லி புரிய வைக்க முயற்சித்திருக்கிறாள்.

'அவ்வளவும் விழலுக்கு இறைத்த நீர் தானா... வளரும் பருவத்தில் இருக்கும் அவனை, சரியான பாதைக்கு மாற்றும் பொறுப்பு தனக்கு இருக்கிறதே... எப்படி செய்து முடிக்கப் போகிறேன்...' கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த போது, ''அம்மா... பசிக்குது... டின்னருக்கு என்ன இருக்கு,'' என்றான் கோகுல். பார்வை எங்கோ சுவரில் இருந்தது.

''உக்காரு...''

''பசிக்குதுன்னு சொன்னேன்ல...''

''தோசை சுட்டுத்தர்றேன்... அதுக்கு முன், உன்கிட்ட பேசணும்... கூடப் படிக்கிற பிள்ளைய வாஷ் ரூம்க்குள்ள வெச்சு வெளியே தாழ்ப்பாள் போட்டியா?''

''ஆமாம்... அவ, எப்பவும் என் ரெகார்ட் நோட்டை எடுத்து, காப்பி அடிக்கிறா... அதனால, அவளுக்கு தண்டனை கொடுத்தேன்.''

''குள்ள வாத்துன்னு ஒரு பொண்ணுக்கு பேர் வெச்சிருக்கியாம்... பொம்பளப் பிள்ளைங்களோட டிபன் பாக்ஸ்ல மணல கொட்டறியாம்... கிண்டல், கேலின்னு அவங்கிட்ட நாகரிகம் இல்லாம நடந்துக்கறியாமே...''

''இப்ப என்ன வேணும் உனக்கு... ஆமாம்... அப்படித்தான் செய்தேன்; பசிக்குது; முதல்ல சாப்பாட போடு,'' என்றான் அலட்சியமாக!

''பெண் ஒண்ணும் மட்டமில்லன்னு உனக்கு எவ்வளவு தரம் சொல்லியிருக்கேன்... இஸ்ரோலயும், நாசாலயும் இருக்கிறதுல பாதி பேர் பெண்கள்... உன் டீச்சர், எச்.எம்., பி.டி., மிஸ், கேன்டீன் இன்சார்ஜ் எல்லாமே பெண்கள் தானே... புரியலயா உனக்கு... ஏண்டா பெண்கள்கிட்ட அநாகரிகமா நடந்துக்கிறே?'' என்றாள், கோபத்துடன்!

''ப்ளீஸ்ம்மா... எப்ப பாத்தாலும் பொண்ணுங்க பெருமை பத்தி பேசி போரடிக்காத...'' என்றவன், ''நான் வெளில போய் பானிபூரி சாப்பிட்டுக்கறேன்...'' என்று சொல்லி, அவள் பக்கமே திரும்பாமல் பணத்தை எடுத்து, ஓடி விட்டான்.

அவனையே கவலையுடன் பார்த்தாள், நளினி.

அரிசி உப்புமாவிற்கு, கத்தரிக்காய் கொத்சு இல்லாமல் சாப்பிட மாட்டான், கோகுல். தேடி வாங்கி, திரும்பி நடந்தபோது, 'கோகுலின் எண்ணங்களை விரிவாக்குவது எப்படி... வீடு என்பது வெறும் துாண்களின் மேல் நிற்கவில்லை; பெண்ணின் மேல்தான் நிற்கிறது என்பதை அவனுக்கு எப்படி உணர்த்துவது...' என்ற யோசனையுடன் நடந்தாள்.

''நளினி... காய் வாங்க இங்கதான் வருவியா, தெரியாம போச்சே...'' என்ற தோழி பூரணியின் குரல் கேட்டு, சட்டென்று திரும்பினாள், நளினி.

''எப்படி இருக்கே பூரணி... நல்லாயிருக்கியா...'' என்று மலர்ச்சியுடன் அவள் கைகளை பிடித்துக் கொண்டாள்.

''ரொம்ப நல்லா இருக்கேன்; பாத்து எவ்வளவு நாளாச்சு... பக்கத்துல தானே என் வீடு இருக்கு; வா வீட்டுக்கு,'' என்று அழைத்துச் சென்றாள்.

நளினி சோபாவில் அமர்ந்திருந்த போது, உள்ளே வந்த பூரணியின் மகன் பரத், அவளை பார்த்ததும் சிரித்து, சட்டென்று பாதம் தொட்டு வணங்கினான்.

''வாங்கம்மா... கோகுல் வரலியா?'' என்று புன்னகைத்தான்

''இல்லப்பா... நீ எப்படி இருக்கே?''

''நல்லா இருக்கேம்மா,'' என்று சொல்லி, உள்ளே விரைந்தான்.

''அம்மா... நல்ல தரமான, 'ஸ்விம் கேப்' கிடைச்சது வாங்கிட்டேன்... அப்படியே உனக்கு, நாப்கின் வாங்கிட்டு வந்தேன்,'' என்று சொல்லி கொடுத்ததும், ''ஸ்டாக் தீர்ந்து போயிருச்சேன்னு நினைச்சேன்; நல்லவேளை வாங்கிட்டு வந்துட்டே... தேங்க்யூடா கண்ணா...'' என்றவள், அவன் கையிலிருந்த மற்றொரு பொருளைக் காட்டி, ''அது என்ன?'' என்று கேட்டாள்.

''கிளவுஸ்... மைக்ரோவேவ் ஓவன்ல இருந்து வெறுங்கையால எடுத்து, கையை சுட்டுக்கறே... இனிமே, இந்த கிளவுஸ போட்டுட்டு சுடு,'' என்றான்.

''சரி; எதிர் வீட்டு கோகிலா உன்னை தேடி வந்தா, போய் என்னான்னு கேட்டுட்டு வா...''

''அவளுக்கு கராத்தே கிளாஸ்ல சேரணுமாம்... என் பிரெண்ட் கத்துக்கிற இடத்துலயே அவள சேரச் சொன்னேன். ஸ்கூல்ல இருந்து ரொம்ப பக்கம்... அவளுக்கு போக, வர ஈசியா இருக்கும்,'' என்றதும், ''சரி போய் அவளுக்கு என்ன உதவி வேணுமோ செய்துட்டு வா,'' என்றாள்.

''சரிம்மா... ராத்திரிக்கு ஒண்ணும் செய்ய வேணாம்; மூலக் கடையில, வரகரிசி பொங்கல், சட்னி வாங்கிக்கலாம்... உங்களுக்கும் பீரியட் நேரம்... அதனால ரெஸ்ட் எடுத்துக்கங்க,'' என்று சொல்லி, ஹாலுக்கு வந்தான்.

ஹாலில் அமர்ந்திருந்த நளினியிடம், ''அம்மா... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லலாமா?'' என்று புன்னகையுடன், கேட்டான்.

''சொல்லுப்பா...''

''வாசல்ல உங்க செப்பல் பாத்தேன்... தோல் ரொம்ப கடினமா இருக்கு; தொடர்ந்து போட்டா குதிகால் வலி வரும். கொஞ்சம் லைட் வெயிட்டா போடுங்க... மூணு மாசத்துக்கு ஒரு தடவை கண்டிப்பா செப்பல மாத்துங்க...'' என்றவன், ''வரட்டுமாம்மா... அடுத்த தடவை கோகுலையும் கண்டிப்பா கூட்டிட்டு வாங்க,'' என்று சொல்லி சென்றான்.

''சரிப்பா...'' என்றவள், திகைப்புடன் அவன் சென்ற திசையையே பார்த்தாள்.

'பதினான்கு வயது பையனுக்கு இவ்வளவு பக்குவம், முதிர்ச்சி, பரிவான பேச்சு எப்படி சாத்தியம்...' என, அவள் வியந்தபடி அமர்ந்திருக்கையில், ''காபி எடுத்துக்க நளினி,'' என்றபடி அவள் எதிரில் வந்தாள், பூரணி.

''எப்படி பூரணி பரத் இப்படி இருக்கான்... புராணக் கதைகள்ல வர்ற ரிஷிகுமாரன் மாதிரி... எப்படி இவ்வளவு சாப்ட், முதிர்ச்சி...'' என்ற போது, அவள் குரல் தழுதழுத்தது.

''அது பெரிய விஷயமில்ல நளினி... பொதுவா, ஆண் குழந்தைகள நல்லபடியா வளர்க்கணும்ன்னு மட்டும்தான் நாம எல்லாரும் நினைக்கிறோம். நான் கொஞ்சம் மாற்றி யோசிச்சேன். படிப்பு, வேலை, சம்பாத்தியம் எல்லாத்தையும் விட, ரொம்ப முக்கியமானது பண்பும், பண்பாடும்... பெண்ணுக்கு அதை நிறையவே போதனை பண்ணியாச்சு.

''ஆண் குழந்தைகளுக்கு அதை கத்துத் தரணும்ன்னு முடிவு செய்தேன்; பெண்ணோட பெருமைகளை சொல்றதை விட, அவள் நடைமுறையில் சந்திக்கிற பிரச்னைகள, அவனுக்கு புரிய வெக்கணும்ன்னு நெனச்சேன். ஒரு குழந்தை பெரியவளானதும், அவள் குழந்தைப் பருவத்தை முடக்கறதுல இருந்து, அப்பா, கணவன், மகன்னு எப்பவும் அவ யாரையாவது சார்ந்தே இருக்க வேண்டிய சமூக சூழல் பத்தி சொன்னேன்.

''கருப்பை எப்படி வேலை செய்யுது, மாசாமாசம் அவள் எப்படி உதிரப்போக்கால சிரமப்படறா, அப்போ அவளுக்கு மனம் மற்றும் உடல் ரீதியாக எவ்வளவு அமைதி தேவைப்படும்ன்னு எடுத்துச் சொன்னேன்... பொருளாதார சுதந்திரம் எப்படி பெண்களுக்கு சிறகாகவும், அதேசமயம் சுமையாகவும் இருக்குன்னு விளக்கினேன்... ஜாக்கெட் கூட போடக்கூடாதுன்னு அடக்கி வெச்ச காலத்துல இருந்து, எப்படி அவ போராடி, எழுந்து நின்றாள்ங்கிற சரித்திரத்தை ஆதாரபூர்வமா காட்டினேன்.

''பெண் குழந்தைகள் பூப்படையற மாதிரி, ஆண் குழந்தைகளும் பூப்படைவர் என்கிறது சயின்ஸ்... இதையெல்லாம் புரிஞ்சு, அவங்களோட நட்போட பழகும்போது, வீடே ஒரு பூங்காவா ஆயிடுது.

''நளினி... இது, கிளிகளுக்கு சிறகு முளைக்கிற பருவம்... அதுவும் ஆண் கிளிகளுக்கு வலிமையா வளரும். அதை, எப்படி மென்மையோட இணைக்கிறது என்பதை கண்ணியமாவும், கம்பீரமாவும் சொல்லித் தர்றதுதான் தாயோட பெரிய பொறுப்பு,'' என்று அவள் சொல்லச் சொல்ல, நளினியின் நெஞ்சம் விம்மியது; மென்மையான பாடத்தை கற்றுக்கொண்டதற்கு நன்றியாக, விழிகள் இரண்டு சொட்டு கண்ணீரை காணிக்கையாக்கின.

உஷாநேயா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us