தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வருகிறான் முருகன்

வருகிறான் முருகன்

வருகிறான் முருகன்


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 7 - வைகாசி விசாகம்

வைகாசி விசாக நட்சத்திரத்தன்று முருக பெருமான் அவதரித்ததால், அம்மாதத்திற்கும், அந்நட்சத்திரத்திற்கும் பெருமை ஏற்பட்டது.

வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன், தன் முழு ஆற்றலுடன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், இம்மாதத்திற்கு, சமஸ்கிருதத்தில், 'வைசாகம்' என்றும், தமிழில், 'வைகாசி' என்றும் பெயர் வந்தது. இந்த பவுர்ணமி நன்னாளையே, வைகாசி விசாகம் என்று கொண்டாடுகின்றனர். முருகன் விசாகத்தில் அவதரித்ததால், 'விசாகன்' என்ற பெயரும் உண்டு. 'வி' என்றால் மயில் - 'சாகன்' என்றால் சஞ்சரிப்பவன். மயில் மீது சஞ்சரிப்பவன், முருகன்.

சூரபத்மன் எனும் அசுரன், தேவர்களை தொல்லை செய்து வந்தான். அவனுடன் போரிட்ட முருகன், அவனது உடலை இரண்டாகக் கிழித்து, ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொன்றை சேவலாகவும் மாற்றினார். மயில் என்பது, ஆணவம்; சூரபத்மனை, ஆணவ குணத்துக்கு ஒப்பிடுவதால், அதை அடக்கும் விதமாக, மயில் மீது ஏறி அமர்ந்தார், முருகன். ஆணவம் அடங்கினால், சேவல் கூவி, பொழுது விடிவது போல, நம் வாழ்விலும், விடியல் வரும் என்பது, இதன் தத்துவம். அது மட்டுமல்ல, பகைவனைக் கொல்லாமல் மயிலாகவும், சேவலாகவும் மறுபிறப்பு அளித்து, அவற்றையும், தன் பக்தர்கள் வணங்கும் வகையில் செய்த கருணைக்கடலாக விளங்குகிறார், முருகன்.

வைகாசி விசாகத்தன்று, பக்தர்கள் விரதமிருந்து பால்குடம், காவடி எடுத்து, முருகனை வழிபடுவர்.

முருகனைப் பற்றிய புதிய தகவல் ஒன்று, மகாபாரதம், வனபர்வத்தில் உள்ள, 'மார்க்கண்டேய சம்ஸ்யத்தில்' இடம் பெற்றுள்ளது.

சப்த ரிஷிகளில் வசிஷ்டரின் மனைவியான அருந்ததியை தவிர்த்து, மற்ற ஆறு பெண்களும், முருகனை வளர்த்து ஆளாக்கினர்.

ஒருமுறை முருகனிடம், 'கந்தா... சிவ - பார்வதி பிள்ளையான உன்னை, நாங்கள் வளர்த்ததால், உன்னைப் பெற்றதே நாங்கள் தான் என, சிலர் வதந்தி பரப்பி விட்டனர். இதை, உண்மை என்று நம்பிய, எங்கள் கணவன்மார்களான ஆறு ரிஷிகளும், எங்களை பிரிந்து விட்டனர். இந்த இகழ்ச்சியை எங்களால் தாங்க முடியவில்லை என்றாலும், நாங்கள் ஆறு பேரும், உன்னையே சுவீகார புத்திரனாக (தத்துப்பிள்ளை) ஏற்று, நிரந்தர தாய்மார்களாக இருக்க விரும்புகிறோம். இதை ஏற்று, அருள்புரிய வேண்டும்...' என்று வேண்டினர்.

முருகனும் அவர்களை, தன் தாய்களாக ஏற்று, அவர்களை வான் மண்டலத்தில் ஒரு நட்சத்திரமாக்கி, 'கார்த்திகை' என பெயர் சூட்டினார். இதனால், இவர்கள் கார்த்திகைப் பெண்கள் என அழைக்கப்பட்டனர்.

கோடை காலமான வைகாசி விசாகத்தில் முருகனுக்கு பால் மற்றும் இளநீர் காவடி, பால் குடம் எடுத்து வணங்கலாம். இதனால், முருகப்பெருமான் மனம் குளிர்ந்து, விரும்பும் வரம் அளிப்பார். வைகாசி விசாகத்தன்று பிறக்கும் முருகனை வரவேற்று, வணங்குவோம்!

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us