தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

சிறுவயதிலே என் தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம். தற்போது, அவளுக்கு, 30 வயதாகிறது. 10 மற்றும் 13 வயதில் பெண், ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். அவளும், அவளுடைய கணவனும் திருமணமான நாளிலிருந்து, இன்றுவரை சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர்; அவளுக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லை.

இந்நிலையில், அவள் பணிபுரியும் இடத்தில், அவளை விட, மூன்று வயது இளையவனிடம் பழக்கம் ஏற்பட்டு, தற்போது, இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.

இவ்விஷயம் எங்களுக்கு தெரிந்ததும், எவ்வளவோ எடுத்துச் சொன்னோம்; கேட்கவில்லை. இதனால், நான், என் தாய் மற்றும் தங்கையின் கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அம்மா... கீழ்கண்ட என் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்...

* திருமணமான ஒரு பெண், கணவரிடம் ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்காக வேறொருவரை திருமணம் செய்து கொள்ளலாமா?

* ஓர் ஆடவன், கணவனால் மிகவும் கஷ்டப்படும் பெண்ணுக்கு, வாழ்க்கை தர நினைத்து, அவளை, திருமணம் செய்யலாமா?

* தன்னை விட வயதில் குறைந்த ஆணை, ஒரு பெண் திருமணம் செய்யலாமா, எத்தனை வயது வித்தியாசம் இருந்தால், திருமணம் செய்யலாம்?

* மாற்றான் மனைவியை விரும்புதல் தவறு என்கிறது, நம் சாஸ்திரம். அப்படியிருக்க, திருமணமான பெண்ணை விரும்பி, திருமணம் செய்வது சரியா?

— இப்படிக்கு,

அன்பு மகன்


அன்பு மகனுக்கு —

ஆணுக்கு திருமண வயது, 21; பெண்ணுக்கு திருமண வயது, 18 என்கிறது, சட்டம். ஆனால், ஒரு பெண், மனதாலும், உடலாலும் முழு வளர்ச்சி அடைய, 23 வயதாகிறது. ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கை கல்வி, வயது மற்றும் பெற்றோரின் வளர்ப்பு தான் ஒரு பெண்ணை சகலத்திலும் பக்குவப்படுத்துகிறது.

கடிதத்தில், உன் தங்கை மற்றும் அவரது கணவருக்கும் உள்ள வயது வித்தியாசம்,

தங்கை கணவர் பணி புரிபவரா, குடிப்பழக்கம் மற்றும் திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடுபவரா போன்ற விவரங்கள் இல்லை. உன் தங்கை காதலிக்கும் அலுவலக நண்பன், மணமானவனா, ஆகாதவனா என்ற தகவல்களும் இல்லை.

இளவயதில் திருமணமான பெண்கள் எல்லாம் திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட மாட்டார்கள். உன் தங்கைக்கும், அவளது கணவருக்குமான, 14 ஆண்டு சண்டை, சச்சரவுக்கான அடிப்படை காரணம், உன் தங்கையாக கூட இருக்கலாம்.

சதா சண்டையிடும் கணவனை விட, அன்பாய், இதமாய், பதமாய் அனுசரணையாய் பேசும் அலுவலக நண்பன் சிறந்தவன் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாள், உன் தங்கை. அவனின் உண்மையான குணத்தை, அவனது மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும். பல ஆண்கள், பொய் முகமூடி அணிந்து, பெண் எனும் மீனைப் பிடிக்க, கையில் தூண்டிலுடன் அலைகின்றனர்.

உன் தங்கையும், அவளது காதலனும் திருமணம் புரிய வேண்டுமென்றால், முதலில், உன் தங்கை, தன் கணவனை விவாகரத்து செய்ய வேண்டும்; அதேபோன்று அவள் காதலன், திருமணமானவனாக இருந்தால், மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும். அதன்பின்பே, இருவரும் திருமணம் செய்ய முடியும். இதற்கே, இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.

சிறு சிறு சண்டைகள் வருவதால், வாழ்க்கை துணையை ஒதுக்கி, இன்னொரு திருமணம் செய்வது என்றால், உலகில், 90 சதவீத தம்பதிகள் பிரிந்து, மறுமணம் செய்திருப்பர். சகிப்புத்தன்மை, 'ஈகோ' இன்மை, இருப்பதில் திருப்தி, விட்டுக் கொடுத்தல், மன்னிக்கும் குணமே திருமணங்களை வெற்றி பெற வைக்கிறது..

திருமணம் என்பது யாருக்கும், யாரும் வாழ்க்கை தருவதல்ல; திருமணத்தில் ஆணும், பெண்ணும் சம பங்குதாரர்கள். முதலாளி ஸ்தானத்தில், ஒருவரும், தொழிலாளி ஸ்தானத்தில் மற்றவரும் நின்று செய்து கொள்ளும் திருமணம், ஒரு நாளும் வெற்றி பெறாது. கஷ்டப்படும் திருமணமான பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அவளது வாழ்க்கையில் ஒருவன் அத்துமீறி நுழைந்தால், அதனால், இரு பக்க குருவி கூடுகளும் சிதறி போகும்.

ஒரு பெண், தன்னை விட, மூன்றிலிருந்து ஐந்து வயது குறைவாக உள்ள ஆணை திருமணம் செய்யலாம். ஆனால், திருமணமான பெண், தன்னை விட வயது குறைந்த ஆணை திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணங்கள், 99 சதவீதம் தோற்று போகின்றன.

மாற்றான் மனைவியை, அற்ப ஆசைக்காக கவர்தல் பெருங்குற்றம்; உன் தங்கைக்கு தகுந்த அறிவுரைகள் கூறி, திருமண பந்தம் மீறிய உறவை கத்தரிக்க சொல். உன் தங்கையும், அவள் கணவர் ஒற்றுமையாக குடும்பம் நடத்த தகுந்த ஆலோசனைகள் வழங்கு!

மகன் மற்றும் மகள் எதிர்காலத்திற்காக உன் தங்கை, தன் காம விகாரங்களை தகனம் செய்வது, உங்கள் தலைமுறைக்கே நல்லது!

— என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us