தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/என் அப்பா - ஏவி.எம்., சரவணனின் சிறப்பு பேட்டி! (3)

என் அப்பா - ஏவி.எம்., சரவணனின் சிறப்பு பேட்டி! (3)

என் அப்பா - ஏவி.எம்., சரவணனின் சிறப்பு பேட்டி! (3)


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயக்குனர் ஷங்கரிடம் பேசுவதாக ரஜினியிடம் கூறி, நான் நேரே போய் அவரை பார்த்தேன்.

ரஜினி, ஷங்கர் இருவருக்கும், 1001 ரூபாயை, 'அட்வான்ஸ்' ஆக கொடுத்தேன். அந்த படம் தான், சிவாஜி.

சிவாஜி படத்தின் படப்பிடிப்பு முடித்து, படம், சென்சார் சான்றிதழ் பெற்று, வியாபாரம் ஆன பிறகு தான், ரஜினிக்கு முழு சம்பளம் கொடுத்தேன். அதுவரை அவர் எதுவும் கேட்கவில்லை.

சம்சாரம் அது மின்சாரம் படம் வெளியிடும் போது, முதலில் அந்த படம் வியாபாரம் ஆகவில்லையே...

ஆமாம். பட விநியோகஸ்தர்கள், சம்சாரம் அது மின்சாரம் படத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டனர். அந்த சமயம், ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்தை வைத்து, படம் பண்ணிக் கொண்டிருந்தேன்.

'நீங்கள் இந்த படத்தை வாங்கினால் தான் பெரிய, 'ஹீரோ'கள் நடித்த படங்களைக் கொடுப்பேன்...' என்று, அவர்களிடம் கூறினேன். ஆனந்தா சுரேஷ் என்ற வினியோகஸ்தர் மட்டும், ஆறு லட்சம் ரூபாய்க்கு, 'செக்' எழுதி கொடுத்து, படத்தை வாங்கிச் சென்றார். வடசென்னை மற்றும் தென் சென்னை எல்லா இடங்களுக்கும் சேர்த்து, இவ்வளவு தான் பணம்.

ஆனால், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, 15 மடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது. அதன்பின், அந்த படத்தை வாங்கி வெளியிட்ட அத்தனை பேரும், பெரிய அளவில் காசு பார்த்தனர்.

பராசக்தி படத்தில் நடிக்க, சிவாஜியை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

சிவாஜியை வைத்து படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தது, என் அப்பாவும், பெருமாள் முதலியாரும் தான்.

'நாடகத்தில் இருந்து வந்தவர், சிவாஜி. ஒல்லியாக இருப்பார். இந்த கதையில், சிவாஜியை நடிக்க வைத்து, 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம். பேசாம, கே.ஆர்.ராமசாமியை வைத்து எடுக்கலாம்...' என்று, அப்பாவிடம் கூறினோம்.

முடிந்த வரை, படத்தை போட்டு பார்த்த போது, சில இடங்கள் மட்டும் சுமாராக இருந்தார். பல இடங்களில் நன்றாகவே நடித்து இருந்தார். என் அம்மா, சிவாஜி நடித்த காட்சியை பார்த்து, நன்றாக இருப்பதாக கூறவே, என் அப்பாவும், 'சிவாஜியே இருக்கட்டும்...' என்று கூறி விட்டார்.

கலைஞர் கருணாநிதி வசனத்தில், படம் மாபெரும் வெற்றி கண்டது.

அந்த காலகட்டத்தில் மக்கள், நாடகத்தை அதிகம் ரசித்தனரா அல்லது திரைப்படத்தை பார்த்து ரசித்தனரா?

இரண்டுக்குமே சரிசமமான ரசிகர்கள் இருந்தனர். நாம் இருவர் படம், முதலில் நாடகமாக தான் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தை பார்த்த பின் தான், கதையே வாங்கினார், என் அப்பா.

ஏவி.எம்., நிறுவனம், எந்த நடிகருக்கு அதிக சம்பளம் கொடுத்தது?

என் அப்பாவை பொறுத்தவரை, அதிக சம்பளம் கொடுத்து, யாரையும் வைத்து படம் எடுக்கவில்லை. அன்பே வா படத்தில், எம்.ஜி.ஆருக்கு தான் முதன் முறையாக அதிக சம்பளம் கொடுத்தோம். அவரது மொத்த சம்பளமே, 3.25 லட்சம் ரூபாய் தான். இதுவே அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட அதிக சம்பளம். இன்று அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.

உங்கள் நிறுவனத்தில் நடித்த நடிகர்களில், பிற்காலத்தில், இவர் சிறப்பாக வருவார், நல்ல எதிர்காலம் இருக்கும் என, எந்த நடிகரையாவது அனுமானித்தீர்களா?

களத்துார் கண்ணம்மா படத்தில், முதலில், டெய்சி ராணி என்ற குழந்தை நட்சத்திரத்தை நடிக்க வைக்கத்தான் முடிவு செய்தோம். அப்போது, என் அம்மாவை சந்திக்க, டாக்டர் சாரதா ராமச்சந்திரன் என்பவர், ஒரு சிறுவனை தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.

டெய்சி ராணிக்கு, சம்பளம், 10 ஆயிரம் பேசி, 1,000 ரூபாய், 'அட்வான்ஸ்' கொடுக்கப்பட்டது. டாக்டரோடு வந்த சிறுவன், எம்.ஜி.ஆர்., மாதிரி, சிவாஜி மாதிரி எல்லாம் எங்களிடம் நடித்து காண்பித்தான்.

'ஜெமினி கணேசன் சாரிடம், இந்த குழந்தையை அழைத்து போங்க...' என்றார், அப்பா.

அவருக்கு, அந்த சிறுவனை பார்த்ததும் மிகவும் பிடித்து போனது. அவர் தான் கமலஹாசன். டெய்சி ராணிக்கு பதிலாக, படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

எங்கள் வீட்டிற்கு பின்புறம் மாந்தோப்பு ஒன்று இருந்தது. அதில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது, மாங்காய் சீசன் இல்லை என்பதால், பேப்பரில் மாய்காய்கள் செய்து, மரத்தில் கட்டி தொங்க விட்டிருந்தோம். கமல், மாங்காய் கேட்க, 'அது உண்மையான மாங்காய் இல்லை...' என்றார், ஜெமினி.

'அய்யோ, 'டூப்' மாங்காவா...' என்றார், கமல்.

பிறகு, 'செட்'டிற்கு அழைத்து வந்தோம். ஒரு பக்கம் பிளைவுட்டால், 'டம்மி' வீடு கட்டியிருந்தோம். அதை பார்த்துவிட்டு, 'டூப் வீடா...' என்றார், கமல்.

படப்பிடிப்பு இடைவேளையில், கமலுக்கு உப்புமா ஊட்டினார், சாவித்திரி.

'இது, 'டூப்' உப்புமாவா...' என்று கேட்டார், கமல்.

அப்போது, எஸ்.பி.முத்துராமன் தான், 'இது, நல்ல உப்புமாப்பா. தைரியமா சாப்பிடு...' என்றதும் சாப்பிட்டார், கமல்.

குழந்தை நட்சத்திரமாக கமல் நடிக்க, ஏவி.எம்.,ல் முதல் முறையாக கொடுத்த சம்பளம் எவ்வளவு?

களத்துார் கண்ணம்மா படத்தில் நடிக்க, அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம், 1,000 ரூபாய்.

'முதலாளி' என்ற வார்த்தை எப்போதிலிருந்து முதலில் கேட்டது. காலப் போக்கில், 'முதலாளி' என்ற வார்த்தை திசை மாற்றி விட்டதே...

தமிழ் மொழி மட்டும் இல்லாமல், பல்வேறு இந்திய மொழிகளிலும் திரைப்படம் தயாரித்தோம். கன்னட நடிகர் ராஜ்குமாரை வைத்து, முதலில் ஒரு படம் எடுத்தோம்.

அப்போது, பெங்களூரில் இருந்த என் அப்பாவுக்கு சொந்தமான வீட்டை, விலைக்கு வாங்க விரும்பினார், ராஜ்குமார். 14 லட்சத்திற்கு விற்க முன் வந்தார், என் அப்பா.

'பெங்களூரில் எனக்கு வீடே கிடையாது. நீங்கள் தான் முதலில் எனக்கு பட வாய்ப்பு கொடுத்தீர்கள். அதனால், உங்கள் வீட்டை நான் வாங்க விரும்புகிறேன். என்னிடம், 11 லட்சம் தான் இருக்கிறது...' என்றார், ராஜ்குமார்.

அந்த தொகைக்கே வீட்டை அவருக்கு கொடுத்தார். ஒரு ரூபாய் கூட குறைக்க முன்வராத என் அப்பா, அவருக்காக அந்த வீட்டை விட்டுக் கொடுத்தார். எங்கு, எப்போது அப்பாவை பார்த்தாலும், 'முதலாளி' என்றே கூப்பிடுவார்; அவர் வீட்டிற்கு யார் வந்தாலும், 'எங்க முதலாளி வீடு' என்று தான் பெருமையாக சொல்வார், ராஜ்குமார்.

ராஜ்குமார் ஆரம்பித்து, பல தொழில்நுட்ப கலைஞர்கள், ஊழியர்கள் அனைவரும், என் அப்பாவை, 'முதலாளி' என்று தான் அழைப்பர்.

'ஏவி.எம்., தயாரிப்பில், எம்.ஜி.ஆர்., ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தது பற்றி...

— தொடரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us