தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரதியார் மீது அன்பு செலுத்தியவர், பாரதிதாசன். அவரிடம் சென்று, 'தமிழ்நாடு என்ற தலைப்பில் கவிதைப் போட்டி ஒன்று நடக்கிறது. அதற்கு தாங்கள் ஒரு கவிதை எழுதி தரவேண்டும்...' என்றார், பாரதிதாசன்.

போட்டிக்கு கவிதை எழுத மறுத்து, 'உனக்காக வேண்டுமானால் பாடுகிறேன்...' என்றார், பாரதியார்.

'சரி, எனக்காக பாடுங்கள்...' என்றார், பாரதிதாசன்.

தமிழ்நாட்டின் மீது பாட்டாக பாடினார், பாரதியார். பாடல் வெள்ளம் போல வந்தது. அந்த பாடலை எழுதிக் கொண்டார், பாரதிதாசன்.

பாரதியாருக்கு தெரியாமலே, போட்டிக்கு அனுப்பி விட்டார். போட்டியில், பாரதியார் கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. மேலும், தமிழ் மக்களின் உள்ளத்தில் அது நிலைத்து விட்டது.

'செந்தமிழ் நாடெனும் போதினிலே... இன்ப தேன் வந்து பாயுது காதினிலே...' என்ற பாடல் தான் அது.

மன்னன் அலெக்சாண்டரின் படைகள், இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றின. அலெக்சாண்டரின் படைத் தளபதிகள், பஞ்சாபை ஆண்டு கொண்டிருந்த மன்னன் போரசை கை விலங்கிட்டு அழைத்து வந்து, அவர் முன் நிறுத்தினர்.

போரசிடம், விசாரணை நடத்தினார், அலெக்சாண்டர்.

அந்த சூழ்நிலையிலும், கம்பீரமாய் பதிலளித்தான், போரஸ்.

'போரஸ், எம்மிடம் நீ தோற்றுப் போய் விட்டாய். இப்போது, நீ எங்கள் கைதி. நாங்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய் என்று சொல்...' என்றார், அலெக்சாண்டர்.

'போரில் ஜெயிப்பது, தோற்பது, மன்னர்களுக்கு சகஜமானது. இப்போது நான் தோற்றாலும், என் தேசத்திற்கு நான் மன்னனே. என்னை, நீ ஒரு மன்னனை போல மரியாதையோடு நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்...' என்றார், போரஸ்.

போரசின் இந்த பதிலை கேட்ட அலெக்சாண்டர், போரில் தோற்றாலும் மன்னனுக்குரிய கம்பீரத்தையும், அடையாளத்தையும் இழக்கவில்லை என்பதை உணர்ந்தார். தன் வீரர்களை அழைத்து, போரசின் கை விலங்குகளை அகற்ற உத்தரவிட்டார்.

போரசிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் அவனிடம் ஒப்படைத்து, மரியாதையோடு திருப்பி அனுப்பி வைத்தார், அலெக்சாண்டர்.

ஒரு எழுத்தாளர், தன் வாழ்நாளில், 50 புத்தகங்களை எழுதலாம்; அதிகபட்சமாக, 100 புத்தகங்களை எழுதலாம். ஆனால், தன், 68 ஆண்டு கால வாழ்க்கையில், 1,200 புத்தகங்களை ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார் என்றால், வியக்காமல் இருக்க முடியாது. அவர், பிரபல எழுத்தாளர், அலெக்சாண்டர் டூமாஸ்.

டூமாசின் இந்த சாதனைக்கு அடிப்படை காரணம், அவரது தந்தை. அவருடைய தந்தை, நெப்போலியனின் படையில் போர் வீரனாய் பணியாற்றிக் கொண்டிருந்தார். இதனால், அடிக்கடி உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.

இவ்வாறு ஒவ்வொரு முறை சென்று திரும்பும் போதும், தான் பார்த்த, கேட்ட, ரசித்த, வேதனைப்பட்ட விஷயங்களை ஒன்று விடாமல், தன் மகனிடம் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும், அந்தந்த நாடுகளின் சரித்திரங்கள், சிறப்பம்சங்கள் போன்றவற்றையும், தன் மகன் டூமாசிடம் விவரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதையெல்லாம் கவனமாக கேட்ட டூமாஸ், பின்னாளில் அதையே புத்தகங்களாக எழுதி குவித்தார்.

உலகிலேயே அதிகமான நுால்களை எழுதிய எழுத்தாளர் என்றும், உலகிலேயே எழுத்தின் மூலமாய் அதிகமாய் சம்பாதித்தவர் என்ற பெருமையையும் பெற்றார், டூமாஸ். தன் எண்ணம் முழுவதையும் ஒரே விஷயத்தில் குவித்து செயல்பட்டதாலேயே இந்த சாதனையை நிகழ்த்தினார், டூமாஸ்.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us