PUBLISHED ON : ஆக 11, 2019

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில், 'கம்பவுண்டர்' வேடம் கொடுத்து, அக்கறையுடன், எச்சரிக்கையாக நடிக்க கூறினார் இயக்குனர், ஸ்ரீதர்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரது கவனமும், என் மீது தான் இருந்தது. 'ஸ்டார்ட்...' என்று இயக்குனர் குரல் கொடுக்க, கேமரா ஓட ஆரம்பித்தது.
தயாராக நின்ற நான், கிடுகிடுவென்று படி இறங்கி வந்து, சரியாக திரும்பி, சட்டென்று குதித்து, விழுந்து எழுந்து பார்த்தபோது... பலமான சிரிப்புடன் கூடிய குரல் ஒன்று, 'கட்' சொன்னது; கேமரா நின்றது.
வந்து பார்த்தால், இயக்குனர் ஸ்ரீதர் அங்கே இல்லை. 'கட்' சொன்னவர், உதவி இயக்குனரான, பி. மாதவன்.
'அப்படின்னா, நாம நடிச்ச முதல் காட்சியை, ஸ்ரீதர் சார் இயக்கவில்லையா... காட்சியை, 'ஸ்டார்ட்' சொல்லி ஆரம்பித்தவர், அவர் தானே... இப்போது, அவரை காணோமே...' என, பல கேள்விகள், என் மனதில் எழுந்தன.
படக்காட்சியை எடுத்து முடித்தவுடன், உள்ளே நுழைந்தார், ஸ்ரீதர். என் சந்தேகங்களை கோபுவிடம் கேட்டேன்.
'நாகேஷ்... ஸ்ரீதர் பெரிய இயக்குனர். அவர் முன், முதல் தடவை நடிக்கும்போது, நீ பயந்துடக் கூடாதில்லையா... நீ லேசாக பயந்தாலும், குதிக்கிறபோது, ஒன்று கிடக்க ஒன்று ஆகி விடாமல் இருக்கத்தான், 'ஸ்டார்ட்' கூறி, மீதியை மாதவனை பார்த்துக் கொள்ள சொல்லி, வெளியில் போய் விட்டார்...' என்றார்.
'என்ன... இருக்கியா, ஒழுங்கா விழுந்து எழுந்தியா... அடிகிடி படலையே...' என்று, விசாரித்தார், ஸ்ரீதர்.
படம் வெளியாகி, அபார வெற்றி பெற்றது. பத்திரிகை விமர்சனங்களில் படத்தை, 'ஓகோ'வென்று பாராட்டியது மட்டுமின்றி, என் நடிப்பையும் பாராட்டி எழுதியதை படித்தபோது, மனம் நெகிழ்ந்து போனேன். இயக்குனர், ஸ்ரீதர் மீது நான் கொண்டிருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது.
அடுத்தடுத்து, ஸ்ரீதர் இயக்கத்தில், போலீஸ்காரன் மகள் மற்றும் சுமைதாங்கி படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்.
ஒருநாள், வாகினி ஸ்டுடியோவுக்குள் நடந்து போய் கொண்டிருந்தேன்.
ஜகன்னாதன் என்ற புரொடக் ஷன் மேனேஜர், 'நாகேஷ்... வாகினியிலே, தெலுங்கு, தமிழ் என, இரண்டு மொழிகளில் ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் தான் கதாநாயகன்.
'இன்னிக்கு எடுக்கப் போற காட்சியின் துவக்கத்தில், மேஜைகளை, 'சர்வர்' துடைப்பது போல, ஒரு காட்சி இருக்கிறது. அதில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும், 500 ரூபாய் போதுமில்லையா?' என்றார்.
'சரி...' என்றேன்.
காத்திருக்க சொன்னார்.
அப்போது, வில் போல உடலை வளைத்து, நடந்து சென்ற வயதான ஒருவர், என் கவனத்தை ஈர்த்தார். அவர் கையில், ஒரு சிகரெட் பெட்டியும், தீப்பெட்டியும் இருந்தது.
கிடுகிடுவென்று அவரிடம் போய், அவரது தோள்பட்டையை தொட்டேன்.
'ரொம்ப கஷ்டப்பட்டு, சிகரெட் பெட்டியை துாக்கிட்டு போறாப் போல இருக்கு. என்கிட்ட கொடுங்க... நான் எடுத்துக்கிட்டு வரேன்...' என்றேன்.
அவர், 'ஹ... ஹ...' என்று சிரித்து, வில் நடையை தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில், எனக்கு அழைப்பு வந்தது. படப்பிடிப்பு தளத்துக்கு போனேன்.
'ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்...' என்றார், ஜகன்னாதன்.
ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டு, தட்டு, டம்பளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக் கொண்டேன். மேஜையில் இருந்த ஒரு டம்பளரை மேலே துாக்கி போட்டு, அந்த டேபிளை சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வந்ததும், கீழே வந்த டம்பளரை லாவகமாக பக்கெட்டில் பிடித்துக் கொண்டேன்.
'சபாஷ்... ரொம்ப நல்லா பண்றியேப்பா...' என்று, ஒரு குரல் கேட்டது.
திரும்பி பார்த்தால், பேரதிர்ச்சி. சற்று முன், வெளியே, நடையை கேலி பண்ணினேனே, அதே மனிதர்; 'வாகினி ஸ்டுடியோ'வின் அதிபரான, சக்கரபாணி.
'சார்... கொஞ்சம் முன்னாடி, நீங்க நடந்து வந்தபோது, யாருன்னு தெரியாம, உங்களை கிண்டல் பண்ணிட்டேன். தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க...' என்று, காலில் விழாத குறையாக கெஞ்சினேன்.
'அதை, நான் எப்பவோ மறந்தாச்சு... ரொம்ப நல்லா நடிக்கிறியே... உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?' என்றார்.
'ஐந்நுாறு ரூபாய்...' என்றேன்.
'தமிழ்ல நடிக்க தானே, 500 ரூபாய் பேசியிருக்கு... நீயே, தெலுங்குலயும் இந்த காட்சியை பண்ணிடு... இரண்டுக்குமா சேர்த்து, 1,000 ரூபாய் வாங்கிக்கோ...' என்றார்.
நடப்பது எல்லாம் கனவா, நிஜமா என்ற சந்தேகம் வந்தது.
தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
புரொடக் ஷன் மேனேஜர், ஜெகன்னாதனை கூப்பிட்டு, 1,000 ரூபாய்க்கு, காசோலை எழுதி வரச் சொன்னார்.
'சார்... சார்... காசோலை எல்லாம் வேணாம்...' என்றேன்.
'வாகினி, பெரிய கம்பெனி; காசோலை எல்லாம் திரும்பி வராது. பயப்படாதே...' என, சிரித்தபடி கூறினார்.
'அதுக்கு இல்லை, சார்... எனக்கு, அவசரமா பணம் தேவைப்படுது. அதனால, பணமா கொடுத்தீங்கன்னா ரொம்ப சவுகரியமா இருக்கும்...' என்றேன்.
'அப்படியா... சரி...' என்றார்.
ஜகன்னாதனிடம், 'காரில் இவரை அழைச்சுக்கிட்டு, வங்கிக்கு போய், காசோலையை பணமா மாத்தி கொடுத்துட்டு, அவர் தங்கியிருக்கும் இடத்தில் விட்டு வந்துடு...' என்றார்.
அந்த, 1,000 ரூபாயை, என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
அந்த பணத்தில், ஒரு பட்டு புடவை, தாலி, 'பிரவுன்' நிற, 'பேன்ட்' மூன்றும் வாங்கி, நான் காதலித்த, ரெஜினாவை, பதிவு திருமணம் செய்து கொண்டேன்.
சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில், அப்போது, சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த, வீரப்பன் என்ற நண்பருடன், வேடிக்கை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன்.
'இங்கேயெல்லாம் நிற்க கூடாது; வா போயிடலாம்...' என்றார்.
'இங்கே, யார் இருக்காங்க? எதுக்காக இப்படி நடுங்கறே...' என்றேன்.
'இங்க தான், வேலுமணின்னு, பெரிய தயாரிப்பாளரோட, 'சரவணா பிலிம்ஸ்' அலுவலகம் இருக்கு. இங்கே நின்னு பார்த்தா, கூர்க்கா விரட்டுவான்...' என்றார், வீரப்பன்.
'அதையும் தான் பார்த்துடலாமே... இப்போ வர்றியா, நாம இந்த ஆபீசுக்குள்ளே போகலாம்...'
'வாணாம்பா... வம்பாயிடப் போகுது...' என்றார்.
'ஏய்... பேசாம வருவியா?' என்று, மடமடவென, 'சரவணா பிலிம்ஸ்' வாயிற்கதவை நோக்கி நடந்தேன்.
— தொடரும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி
