PUBLISHED ON : ஆக 11, 2019

பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு...
பள்ளி சீருடை அணிந்த மாணவனும், மாணவியும், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
பள்ளி ஆரம்பிக்கும் நேரம் தாண்டியும், அவர்கள் அங்கு நின்று பேசுவது, எனக்கு தவறாக பட்டது. அலுவலகம் சென்று கொண்டிருந்த நான், இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி, கவனித்தேன்.
சிறிது நேரத்தில் கிளம்பி விட்டான், மாணவன். ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிருந்த இரண்டு ஆண்கள், அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர்.
சுதாரித்த நான், 'பாப்பா... இங்கே வா...' என்று சத்தமாக அழைத்தேன். உடனே, அந்த ஆட்கள், திரு திருவென்று விழித்து, அங்கிருந்து நழுவினர்.
அந்த மாணவியிடம் விசாரித்தேன்.
'தாமதமாக சென்றதால், பள்ளியிலிருந்து அனுப்பி விட்டனர். வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்... அதனால், பெரியம்மா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன்...' என்றாள்.
வண்டியில் ஏற்றி, மாணவி கூறிய முகவரியில், இறக்கி விட்டேன்.
நேரம் தவறி பள்ளிக்கு வந்தால், பள்ளி மைதானத்தை இரண்டு சுற்று சுற்றி வர சொல்லலாம். மைதானத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய சொல்லலாம் அல்லது பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சொல்லலாம்; உடலுக்கும், பள்ளிக்கும் நல்லது.
அதை விட்டு, வயது பெண்ணை, வீட்டுக்கு அனுப்புவது, ஏற்புடையதாக இல்லை. அவர்கள் தவறான வழியில் செல்ல, பள்ளி நிர்வாகமே வழிவகுத்து தருவது போல் உள்ளது, இந்த தண்டனை.
அதுமட்டுமல்ல, பெண் பிள்ளைகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளும், தொல்லைகளும் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் இருக்காது. தனியார் பள்ளிகள் மட்டுமல்ல, அரசு பள்ளிகளும் இதையே பின்பற்றுவது, மிகவும் கொடுமையான விஷயம்.
மாணவ - மாணவியரின் நல்வாழ்வை மனதில் கொண்டு, அவர்களின் பாதுகாப்புக்கு ஏற்றவாறு, பள்ளி சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யலாமே...
பெற்றோரும், சரியான நேரத்திற்குள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது நல்லது.
எஸ். கல்பனா, சென்னை.
என்ன மனிதர்கள் இவர்கள்?
எங்கள் பகுதியில், சேர்த்து வைத்துள்ள குப்பைகளை, வீட்டிற்கே வந்து எடுத்துச் செல்லும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, ஒவ்வொரு வீட்டிற்கும், மாதம், 30 ரூபாய் வசூலிக்கின்றனர். இதில், சில குடும்பங்கள் பிழைக்கின்றன.
சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு, எங்கள் தெருவில் உள்ள சில நபர்கள், அலுவலகம் செல்லும் நேரத்தில், வீட்டில் சேரும் குப்பைகளை ஒரு பையில் சேகரித்து, சாலை ஓரங்களில் எறிந்து செல்கின்றனர்.
இவர்கள் எறியும் குப்பைகளை யார் அப்புறப்படுத்துவர்...
30 ரூபாயை மிச்சம் பிடித்து, எதை சாதிக்க போகின்றனர்!
இவர்கள் செய்யும் செலவுகள் எல்லாம் நியாயமாகவும், அவசியமானதாகவும் உள்ளது என்று நினைக்கின்றனரா அல்லது வீட்டு குப்பையை, தானே சுமந்து செல்வது கவுரவம் என, நினைக்கின்றனரா!
- கீதானந்த், சென்னை.
சினிமா பாட்டுக்கு, ஆட விட்டுடாதீங்க...
இஸ்லாமிய நண்பர் ஒருவர், சொந்த தொழில் செய்கிறார். அவரது சிறு வயது மகனுக்கு, ஆடல், பாடல் உள்ளிட்டவற்றில் திறமை உள்ளது.
அதை வெளிக்கொணர, பள்ளி ஆசிரியையிடம், 'மகனின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டு விழா போன்றவற்றில் வாய்ப்பு கொடுங்க... ஆனா, சினிமா பாட்டுக்கு மட்டும் ஆட விட்டுடாதீங்க...' என, வேண்டுகோள் வைத்தார்.
ஆசிரியை காரணம் கேட்டதற்கு, 'சின்ன வயசுலேயே, பசங்களை, சினிமா பாட்டுக்கு ஆடுறதுக்கு பழக்கி விட்டுடுறோம். இது ஒரு விதத்துல, அவங்களுக்கு, சினிமா மேல ஆர்வம் ஏற்படுத்தி விடுகிறது. வளர்ந்ததும், யாரோ ஒரு நடிகரின் ரசிகனாகி, 'கட் - அவுட்' வெச்சு, பாலாபிஷேகம் பண்றப்போ, தப்புன்னு குதிக்கிறோம்...
'ஆடல், பாடல்ங்கிற கலையை, கலையா பார்க்கற பக்குவம் எங்களுக்கும் இருக்கு. எவ்வளவோ தமிழ் மற்றும் நாட்டுப்புற பாடல்கள், கிராமிய கலைகள், முருகன், சிவன், அல்லா மற்றும் இயேசு பாடல்கள்ன்னு, எதுக்கு வேணாலும் என் மகன் ஆடட்டும்...' என்று, கூறியுள்ளார்.
நண்பர் கூறியதை கேட்டு ஆச்சரியப்பட்டு, 'உங்களின் கோரிக்கையை ஏற்கிறேன். மத வேறுபாடு பார்க்காத குணத்தையும் பாராட்டுகிறேன்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
இவ்விஷயத்தை நண்பர் சொன்னதும், எனக்கு பெருமையாக இருந்தது.
- சு. கணேஷ்குமார், சென்னை.
