PUBLISHED ON : ஏப் 09, 2023

தமிழ் புத்தாண்டின் முதல் நாள் இரவு, சிறிய அளவிலான சுவாமி படத்தை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய தாம்பாளத்தில், சிறிய கிண்ணம் நிறைய அரிசி, துவரம் பருப்பு, நான்கு அச்சு வெல்லத் துண்டு, தங்க நாணயம் இருந்தால் ஒன்று, வெள்ளி நாணயம், சில்லரை நாணயங்கள், பலவிதமான பழங்கள், வெற்றிலை, பாக்குடன் தேங்காய் உடைத்து வைக்கவும்.
பிறகு, தாம்பாளத்தை சுற்றிலும் பூக்களால் அலங்கரிக்கவும். சுவாமியின் படம் மற்றும் தாம்பாளத்தில் வைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தெரியுமாறு, அதனருகே முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கவும். இப்படி வைப்பதற்கு பெயர், 'விஷு கனி' என்பர்.
மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து, சுவாமிக்கு விளக்கு ஏற்றவும். முதல் நாள் இரவு தாம்பாளத்தில் அலங்கரித்து வைத்த அனைத்து பொருட்களையும் கண்ணாடியில் பார்க்கும்போது மங்களகரமாக இருக்கும்.
'இதேபோல், எங்கள் வீடும், குடும்பமும் மங்களகரமாக சுபிட்சமாக இருக்க வேண்டும்...' என்று கடவுளை வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்களை நமஸ்காரம் செய்து, அவர்களிடம் ஆசியும், அவர்கள் கையால் பணம் பெறுவது வழக்கம்.
இப்படி சிறியவர்களுக்கு நாம் கொடுப்பதும், பெரியவர்களிடமிருந்து நாம் வாங்குவதும், தனிச் சிறப்பு!
தேங்காய் அரிசி பாயசம்!
தேவையானவை: தேங்காய் - ஒரு மூடி துருவிக்
கொள்ளவும், பச்சரிசி - ஒரு கைப்பிடி, பொடித்த வெல்லம் - 200 கிராம்,
முந்திரி பருப்பு - 10, பால் - 30 மில்லி, நெய் - ஒரு தேக்கரண்டி,
பலாச்சுளை - 2, சிறிதளவு ஏலக்காய் துாள்.
செய்முறை: பச்சரிசியை 30
நிமிடம் ஊற வைத்து களைந்து, தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது தண்ணீர்
விட்டு கரகரப்பாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில், தேங்காய், அரிசி
விழுதை சேர்த்து, பாலுடன் தண்ணீரை கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து,
இடையிடையே கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும்,
வெல்லத்தை பொடித்து சேர்க்கவும். அரிசி வேகாவிட்டால், கொஞ்சமாக பால்
சேர்க்கலாம். கொதித்து வந்ததும், ஏலக்காய் துாளுடன் முந்திரியையும்,
பொடியாக நறுக்கிய பலாச்சுளை துண்டுகளையும் நெய்யில் வறுத்து சேர்த்து,
இறக்கவும்.
குறிப்பு: பால், தேங்காய், வெல்லம், பலாச்சுளை சேர்த்த சுவையான இந்த பாயசம், தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும்.
பருப்பு வடை!
தேவையானவை:
துவரம் பருப்பு - 50 கிராம், கடலை பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் -
4, பெருங்காய துாள், கறிவேப்பிலை - சிறிதளவு, முட்டைக்கோஸ் துருவல் - ஒரு
சிறிய கப், எண்ணெய் - 250 மில்லி, மஞ்சள் துாள் - ஒரு சிட்டிகை, தேவையான
அளவு உப்பு.
செய்முறை: துவரம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு
மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, காய்ந்த மிளகாயை
கிள்ளிப் போட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக கொர கொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் கோஸ் துருவல், பெருங்காய துாள், மஞ்சள் துாள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில்
எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வடைகளாக தட்டி
போட்டு, இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
வேப்பம்பூ பச்சடி!
தேவையானவை:
காய்ந்த வேப்பம்பூ - ஒரு கைப்பிடி, பொடித்த வெல்லம் - ஒரு கப், காய்ந்த
மிளகாய் - ஒன்று, மாங்காய் - ஒரு துண்டு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
உப்பு - ஒரு சிட்டிகை. தாளிப்பதற்கு, எண்ணெய், கடுகு - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.
பின்னர்,
வேப்பம்பூவை சேர்த்து வறுத்து, புளியை கரைத்து ஊற்றி, மாங்காயை தோல் சீவி
நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மாங்காய் வெந்ததும்,
வெல்லத்தை போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.
