தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

வயது: 30, கணவர் வயது: 31. பொறியியல் பட்டதாரியான நாங்கள், ஒரே ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. தற்சமயம், பதவி உயர்வு பெற்று, வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன், நான்.

கூடுதல் சம்பளம், பதவி என, எல்லா விஷயத்திலும், கணவரை விட மேலாக இருப்பதால், தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ளாரோ என, நினைக்கிறேன். எப்போதும், கடுகடுவென்றே இருப்பார். சந்தேக நோய்க்கு ஆளாகியுள்ளார்.

அலுவலகத்திலிருந்து நான், கால தாமதமாக வந்தால், உடன் பணிபுரிபவர்களோடு சம்பந்தபடுத்தி, ஆபாசமாக பேசுவார். ஹேண்ட் பேக்கை பரிசோதிப்பது, என் மொபைல் போனை எடுத்து யார் யாருக்கு போன் செய்துள்ளேன். யாரிடமிருந்தாவது, 'கால்' அல்லது 'மெசேஜ்' வந்துள்ளதா என்று ஆராய்வது என, அவரது போக்கு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

ஒருநாள், இரவில், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, தெருவில் நின்றபடி என்னை அழைத்தார். ஜன்னல் வழியாக பார்க்க, ஒரு கையில் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை வைத்து, தீக்குளிக்க போவதாக கூறி, ஆர்ப்பாட்டம் செய்தார்.

அக்கம்பக்கத்தினர், பதறி ஓடி வந்து, சமாதானப்படுத்தி, வீட்டுக்குள் அனுப்பினர். மறுநாளிலிருந்து, அவர்கள் என்னைப் பார்த்து, தங்களுக்குள் பேசி, கிண்டல் செய்கின்றனர். அவமானமாக இருக்கிறது.

காதல் திருமணம் செய்து கொண்டதால், இருவரது பெற்றோரும் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் வீட்டில், நானும், என் அக்காவும் தான். அக்காவுக்கு திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறாள். கணவர் வீட்டில், அவர் ஒரே மகன். சமீபகாலமாக, குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார், கணவர்.

நிம்மதி இழந்து, ஆதரவு சொல்ல யாரும் இல்லாமல், வேலையில் கவனமின்றியும் தவிக்கிறேன்.

இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது என்று சொல்லுங்கள், அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

படித்த, வேலைக்கு செல்லும் ஆணும், பெண்ணும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொள்ளும்போது என்ன நடக்கிறது தெரியுமா?

பெண்ணின் மகாராணி 'ஈகோ' வானது, வானவில் கோடுகள் கொண்ட புலியாய் மாறி, கண்ணில் பட்டோரிடம் குறிப்பாக, கணவரிடம் சீறி சினக்கிறது.

ஆணின் பேரரசன், 'ஈகோ' முரட்டு சிங்கமாய் மாறி, மனைவியை கடித்து குதற சதா யத்தனிக்கிறது. உனக்கும், கணவருக்கும் இடையே நடப்பது, 'ஈகோ' யுத்தம். இந்த, 'ஈகோ' யுத்தத்தை மேலும் சில பல காரணிகள் வீரியமாக்குகின்றன...

* குழந்தையின்மை

* 'மனைவி பேரழகி. அவளை எப்படியோ காதல் திருமணம் செய்து விட்டோம். புதிதாக யாராவது ஒரு இளைஞன் பறந்து வந்து, அவளை கொத்திக் கொண்டு போய் விடுவானோ...' என்ற ஆதார பயம், கணவருக்குள்

* பதவி, சம்பளம் மற்றும் அதிகாரத்தில் மனைவி உயர்ந்து விட்டாள் என்ற தாழ்வு மனப்பான்மை

* குடிப்பழக்கம்

* 'ஏன் மனைவியை கொடுமைபடுத்துகிறாய்...' என, கண்டித்து கேட்காத இருதரப்பு பெற்றோர்.

கொடுங்கோல் கணவர் விஷயத்தில், யாராவது ஆறுதல் கூறினால் நன்றாக இருக்கும் என நினைத்து, திருமண பந்தம் மீறிய எந்த உறவிலும் ஈடுபட்டு விடாதே. தமிழ்நாட்டு கணவர்களில், 100க்கு 70 பேர், முன்னால் சென்றால் கடிக்கும், பின்னால் சென்றால் உதைக்கும் கழுதைகள்.

இனி நீ செய்யவேண்டியது-...

* உன் பெற்றோருக்கு வெள்ளைக்கொடி காட்டி சமாதானமாகு. காதல் கணவரை விட்டுவிட்டு மகள் வருகிறாள் என்றால், பெரும்பாலான பெற்றோர் சமாதானத்துக்கு தயார் தான்

* நீ பார்க்கும் வேலை தான், உன் அடையாளம். பிரச்னைகளுக்கான வடிகாலாக உன் வேலையை பார். பணியில் கொடி கட்டி பறப்பது, உனக்கான மணிமகுடம்

* கணவர், சந்தேகத்திலிருந்தும், குடி பழக்கத்திலிருந்தும் விடுதலை பெற, ஒரு ஆண்டு அவகாசம் கொடு. கொடுத்த அவகாசத்தில் கணவர் திருந்தாவிட்டால், முறைப்படி விவாகரத்து பெற, மனதாலும், உடலாலும் தயாராகு

* முறைப்படி விவாகரத்து கிடைத்த பின், உன் பெற்றோர் பார்த்து வைக்கும் வரனை திருமணம் செய்து கொள். மறுமணம் கட்டாயமல்ல. அது, உன் தேவையையும், விருப்பத்தையும் பொறுத்தது

* மறுமணம் செய்து கொள்ளும் இரண்டு ஆண்டு அவகாசத்தில், தாறுமாறாய் குண்டாகி விடாதே... யோகா, தியானம், உடற்பயிற்சி, உணவுக்கட்டுபாட்டில் கவனம் செலுத்து

* இசை கேள். மொட்டை மாடி தோட்டம் போடு. கோவில்களுக்கு போ. 60 கி.மீ., சுற்றளவுக்குள் இருக்கும் இடங்களுக்கு மாதம், ஒருமுறை சிற்றுலா போ. பிடித்ததை சமைத்து சாப்பிடு.

அக்கா வீட்டுக்கு போய் வா. 'யூ டியூப்'பில் பழைய தமிழ் படங்கள் பார். உன் மொபைல் போன் எண்ணை மாற்று. அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்களிடம் எச்சரிக்கையாய் இரு.

வண்ணமயமான ஆடைகளை அணி. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, 'ப்யூட்டி பார்லர்' போ. கல்லுாரி தோழியரிடம் நட்பை புதுப்பி. உன் அலுவலகம் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருந்தால் போய் வா. நாய் அல்லது பூனை வளர்.

கணவர் துணை இல்லாமலும் வாழ்க்கையை தித்திக்க செய்யும் மந்திரத்தை கற்றுக் கொள். தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ உதவும்.

— என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us