PUBLISHED ON : ஏப் 09, 2023

கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் எழுதிய, 'நெஞ்சம் மறவா நிகழ்ச்சிகள்' நுாலிலிருந்து:
கோடை விடுமுறையின் போது, பகுத்தறிவுப் பிரசாரம் செய்வதற்காக, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார், ஈ.வெ.ரா., 10 - 15 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி முடிந்தவுடன், இவர்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கூட்டங்களில் பேசுவர்.
தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகில் உள்ள மாவூரில், 1949ல், மாவூர் சர் ஆர்.எஸ்.சர்மாவின் மாளிகையில் பயிற்சி வகுப்பு நடந்தது.
மாவூர் சர்மா, பிராமணர். ஆனால், முற்போக்கு எண்ணம் கொண்டவர். ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் எனும் வேற்றுமை பாராத சமதர்ம நோக்குடையவர். ஈ.வெ.ரா.,வின் நல்ல நண்பர்.
மாவூரில் அவர் கட்டிய, கல்கத்தா காளி கோவிலின் குட முழுக்கை, அந்த காலத்திலேயே புதுமையாய் நடத்தியவர். அதாவது, யாகசாலை, ஹோமகுண்டம் இல்லாமல், மந்திரம் ஓதாமல், திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயரை அழைத்து, அவர் முன்னிலையில் தாமே ஆற்று நீரை கொண்டு வந்து குடமுழுக்கு செய்தார். இந்த குடமுழுக்கை காண, பெரிய அளவில் மக்கள் கூடினர்.
அவரிடம், பிராமண வகுப்பை சேர்ந்த பலர் பணியாற்றினர். இருப்பினும், பிற்பட்ட வகுப்பை சேர்ந்த, ஏழை குடும்பத்தில் பிறந்த சோமசுந்தரத்தை, தன்னுடைய தத்து பிள்ளையாக வளர்த்து, ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்தார். தம் சொத்துகளை எல்லாம் அறக்கட்டளையாக்கி, அதற்கு சோமசுந்தரத்தை, 'டிரஸ்டி' ஆக்கினார்.
ஈ.வெ.ரா.,வை தன் மாளிகைக்கு அழைத்தார்.
அப்போது, 'முகாமை, சர்மா மாளிகையில் வைத்துக் கொள்ளட்டுமா...' என, ஈ.வெ.ரா., கேட்க, அதற்கு சம்மதித்ததுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். 10 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.
எல்லா மாணவர்களுக்கும், பத்து நாட்கள் அறுசுவை விருந்தளித்து, தங்க இடமும் தந்து, சிறப்பித்தார். சர்மா கட்டிய கோவிலில், காளிக்கு பின்புற பிரகாரத்தில் தான் வகுப்பு நடைபெற்றது.
கடைசி நாளன்று, அனைவருக்கும் சிறப்பு விருந்து அளித்தார், சர்மா. ஈ.வெ.ரா.,வுக்கு மான் கறி பிடிக்கும் என்பதை அறிந்து, அவருக்கும், மற்றவர்களுக்கும் மான் கறியை தனியே சமைக்க செய்து பரிமாறினார்.
முனைவர் ரா.இளவரசு எழுதிய, 'குயிலோசை' நுாலிலிருந்து:
'அரிசி சோறு சோம்பலை வளர்க்கும்; மாறாக, கோதுமை சாப்பிட்டால் சுறுசுறுப்பு கூடும்...' என, ஒருமுறை கூறி விட்டார், நேரு.
இதற்கு, பாரதிதாசன் எதிர்ப்பு தெரிவித்து, நவ., 8, 1960ல், 'குயில்' இதழில், ஒரு சிறு கட்டுரை எழுதினார். அதில், பத்தாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள், அரிசி சோறு உண்டு வருகின்றனர். அவர்களிடம் சுறுசுறுப்புக்கு குறைவு இருந்ததாக, ஒரு தகவலும் இல்லை. எந்த ஆராய்ச்சிக்காரனும், அரிசியை எதிர்த்ததில்லை.
அன்றும், இன்றும், தமிழர்கள் அறிவிற் குறைந்து விடவில்லை; வீரத்திலும் குறைந்ததாக வரலாறு இல்லை. அரிசி சோறு சோம்பலை வளர்க்கும் என்று, இன்று நேரு கூறுகிறார்.
ஒருவேளை, இன்று அரிசியின் தரம் குறைந்து போனதோ என்னமோ? அப்படியானால் கோதுமையின் தரமும் குறைந்து போயிருக்கணுமே!
இன்றைய நிலையில், அரிசி சோறும், கோதுமை சோறும் தம் தரத்தில் மாற்றமடைந்து தான் இருக்கின்றன என்றால், அதுபற்றி நாம் தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.
* கோதுமை சோறு உண்பவர்கள், ஏமாற்றும் ஆற்றல் வாய்ந்தவர்கள். மேலும், அவர்கள் அறநெறியினின்று வழுவுகின்றவர்களாகவும் இருக்கின்றனர்
* அரிசி சோறு உண்பவர்கள், ஏமாந்த சோணகிரிகள். அறநெறியினின்று உயிர் போனாலும், தவறாத நேர்மையுடையவர்களாக இருக்கின்றனர்.
இவைகளை விட்டு, கோதுமை, சுறுசுறுப்பை உண்டாக்குகிறதென்றோ, அரிசி, சோம்பலை உண்டாக்கிறதென்றோ சொல்வதில், சிறிதும் உண்மை இல்லை.
ஒரு வகையில், நேரு சொல்லில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. தமிழர் அரிசி சோற்றை மறந்து விட்டால், நேருவின் முட்டாள் தனமான அறத்துக்கு அயலான நடவடிக்கைகளை எதிர்க்க மாட்டார்கள், பின்பற்றுவர். தமிழ் பற்று ஒழிந்து விடும், எதிர்பாற்றல் தொலைந்து விடும் என்று கருதுகிறாரா?
இப்படிப் பார்த்தால், நேரு சொற்களில் நுாற்றுக்கு நுாறு உண்மை இருக்கிறது என, எழுதியிருந்தார், பாரதிதாசன்.
- நடுத்தெரு நாராயணன்
