PUBLISHED ON : ஜூலை 31, 2016

ரோட்டரி சங்கமும், கஸ்தூரிபா மகளிர் சங்கமும் இணைந்து நடத்திய, 'திறமைகளின் சங்கமம்' விழாவில், சமையல், தண்ணீர் கோலம், மாடி தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் போட்டிகளில் முதல் பரிசை வென்றிருந்தாள், ஆனந்தி.
பரிசுகளை வழங்கி, 'சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்' என்ற கீரிடத்தை சூட்டிய, சென்னை கலெக்டர், அவள் கைகளை குலுக்கிப் பாராட்டு மழை பொழிந்த போது, கேமராக்கள் மின்னல் மழை பொழிந்தன.
'ஆனந்தி மேடம்... கிச்சன் கார்டன் ஒண்ணு போடணும்; எப்ப கூப்பிடலாம்...'
'ஸ்ட்ராபெரி வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கிறது, 'யூ டியூப்'ல இருக்குதா மேடம்...'
'சாக்லேட் பொக்கே தயாரிக்க சொல்லித் தருவீங்களா...'
'ரங்கோலி கிளாஸ் எப்ப ஆரம்பிக்கப் போறீங்க...' என, பல்வேறு கேள்விகளால் அவளை துளைத்தெடுத்தனர், பெண்கள்.
எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லி, கூட்டம் கலைந்ததும், பரிசுகளை எடுத்து கிளம்பிய போது, எதிரில் வந்தான், அவன்.
கேமரா, மைக் மற்றும் தோளில் தொங்கும் பை என்ற அவன் தோற்றமே, அவன் பார்க்கிற நிருபர் வேலைக்கு, கட்டியம் கூறியது. அவளைப் பார்த்ததும், சட்டென்று அவன் முகத்தில் அதிர்வலை உண்டாகியது. ஒருவாறு சமாளித்து, ''வணக்கம் மேடம்... நான் தென்னகம், 'டிவி'யில் இருந்து வர்றேன். உங்களை பேட்டி எடுக்கணும்; நேரம் சொல்ல முடியுமா...'' என்றான்.
அவள் புன்னகைத்து, ''நீங்க மிஸ்டர் ஆதிகேசவ பெருமாள் தானே...'' என்றாள்.
திடுக்கிட்டு நிமிர்ந்தவன், ''என் பெயரை இன்னும் நினைவில் வச்சுருக்கீங்களே...'' என்றான், சங்கடத்துடன்!
''எப்படி சார் மறக்க முடியும்... இன்னிக்கு நான் தன்னம்பிக்கையோட நிமிர்ந்து நிற்பதற்கு, முக்கிய காரணமே நீங்க தானே...'' என்றாள்.
பெருமூச்சுடன், தன் பெரிய கண்ணாடியைக் கழற்றி, இமைகளை படபடத்தான், ஆதிகேசவ பெருமாள்.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மழைநாளில், அவள் நேர்முகத் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருந்தபோது, எதிரில் வந்து அமர்ந்தனர், ஆனந்தியின் பெற்றோர்.
'ஆனந்தி... சொன்னா கோபிச்சுக்க கூடாது. எங்க நிலைமைய புரிஞ்சு நடந்துக்கணும். இது, என் ஆபிஸ்ல மைதிலி மேடம் மூலமா வந்திருக்கிற வரன்...' என்று, தொண்டையை செருமிக் கொண்டவர், 'பையன் பேரு ஆதிகேசவ பெருமாள்; தங்கமான பையன், அப்பா, அம்மா வயசானவங்க... கதை, கவிதைன்னு எழுதுவான். ஆளும், நல்ல உயரமா, களையா இருப்பான்னு மைதிலி மேடம் சொன்னாங்க. வர வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு. அவங்கள நம்ம வீட்டுக்கு வர சொல்லலாமா...' என்றார், அப்பா.
'இன்னொரு நாடகம் தேவையாப்பா...' என்றாள் நலிந்த குரலில், ஆனந்தி.
'ஏம்மா அப்படி சொல்ற?'
'பின்ன என்னப்பா... இது ஆறாவது இடம்; வர்றவங்க எல்லாம் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு, கடைசியில, மூல நட்சத்திர பொண்ணு வீட்டுக்கு ஆகாதுன்னு ஒரே பாட்டை தானே பாடுறாங்க. மூலத்தோட மாமியார், மூலையிலன்னார், ஒருத்தர். பெண் மூலம் நிர்மூலம்ன்னார், அடுத்தவர். இப்ப வர்ற ஆளு மட்டும் புதுசா என்ன சொல்லிடப் போறாரு. இது, ஆண்களின் உலகம்பா. என் மாதிரி பிறப்பிலேயே முள்கீரிடத்தோட வந்தவளுக்கு, இந்த ஆணாதிக்க உலகத்துல இடமில்ல...' என்றாள், விரக்தியாக!
'ஏம்மா இப்படி பேசுறே... உனக்கு என்ன குறைச்சல். 30 வருஷமா உங்கம்மாவும் தான் ரசம் வைக்குறா; புளித் தண்ணி மாதிரி. ஆனா, நீ வைக்குற ரசம், பன்னீர் மாதிரி மணக்குது. நீ போட்டிருக்கிற தோட்டம் காய், பழம்ன்னு அள்ளிக் கொடுக்குது. நாலே புள்ளியில நீ போடுற கோலம் அப்படியே ஓவியம் மாதிரி இருக்குது. ராணிம்மா நீ... இந்த பெருமாள், ராஜகுமாரன் போல வருவான் பாரு...' என்று கண்களை துடைத்துக் கொண்ட அப்பாவை, பரிதாபத்துடன் பார்த்தாள், ஆனந்தி.
'அவ சொல்றதுல என்னங்க தப்பு... மூல நட்சத்திரத்துல பெண்ணை பெத்திருக்கான்னு உங்கம்மாவே என்னை வறுத்து வாயில போடுறாங்களே... இப்ப வர்றவன் மட்டும் என்ன வானத்துல இருந்தா குதிக்கப் போறான்... மூல நட்சத்திரமா அப்ப பைக்கும், பத்து சவரன் நகையும் கூடுதலா போடுங்கன்னு சொல்லப் போறான்...' என்று ஆற்றாமையுடன் முணுமுணுத்தாள், அம்மா.
'நீ கொஞ்சம் பேசாம இரு...' என்று அம்மாவை அடக்கிய அப்பா, அவளிடம் உருகுவது போல தழுதழுத்தார்.
'எனக்கென்னவோ இந்த பையன் மேல நம்பிக்கை வருது. கதை, கவிதை வாசிக்கிறவன்னாலே, மனசுல புதுமையும், நல்ல சிந்தனையும் இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு; நீ என்னம்மா சொல்ற...' என்றார்.
'உங்க விருப்பம்ப்பா...' என்றாள், ஆனந்தி.
ஆனால், ஆனந்திக்கு நம்பிக்கை இல்லை. பெண்களை அடக்கி ஆளவும், இழிவுபடுத்தவும், அவள் உழைப்பை சுரண்டவும், ஆண்களின் ஜீன்களிலேயே திணிக்கப்பட்டுள்ளது. தெருவில் போகும் பெண்களை சீண்டலாம், அவள் உடலை போகப் பொருளாக்கலாம் என்று தான் அவர்கள் பயிற்று வைக்கப்பட்டுள்ளனர்.
எத்தனையெத்தனை பழமொழிகள், சொலவடைகள், பெண்களை இழிவுபடுத்தவென்றே உருவாக்கப்பட்டுள்ளன. மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள் என்று இயற்கைக்கும், பெண் பிறப்பிற்கும் பேதங்களை கற்பித்து, பிறந்த நாளிலிருந்தே அவளை தாழ்வுணர்ச்சியில் தள்ளி, குரூரமாக வேடிக்கை பார்க்கும் இந்த சமூகத்திடம், அவளால் எப்படி நம்பிக்கை வைக்க இயலும்!
அப்பா சொன்னதால், தலையசைத்தாள்.
பெண் பார்த்து சென்ற மறுநாள் மாலை, முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன், ஓடி வந்தார் அப்பா. அவள் கையைப் பற்றிக் குலுக்கி, 'ஆனந்தி... என் தங்கமே... உனக்கு விடிவு பொறந்துருச்சு. அந்தப் பெருமாள், கண்ணைத் திறந்துட்டான். பையனுக்கு, உன்னை பிடிச்சுருக்காம். மைதிலி மேடம் கிட்ட, 'எப்ப வேணா கல்யாணத்த வச்சுக்கலாம்'ன்னு சொல்லிட்டானாம்...' என்றவர், மனைவியை அழைத்து விஷயத்தை சொல்லி, 'இன்னைக்கு பாயசம் செய்...' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார், அப்பா.
அம்மாவுக்கும் நிலை கொள்ளவில்லை. 'நிஜமாவா சொல்றீங்க... சம்மதம்ன்னு சொல்லிட்டாங்களா...' என்று உணர்ச்சிவசப்பட்டாள்.
'எப்படிப்பா...' என்றாள், ஆனந்தி.
அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. 'நடைமுறை வாழ்க்கையில், அதிசயங்களின் வருகைக்கு சாத்தியமே இல்லை. காலமும், சூழலும் மாறினாலும், கல்வி கிட்டினாலும், அன்பையும், அறிவையும், ஒருவன் தன் சொந்த மனவெழுச்சியால் தானே, பெருக்கிக் கொள்ள முடியும்! பெருமாள் அப்படி சுயமாக சிந்திக்கிற மனிதனா... அந்த அளவிற்கா நான் பாக்கியம் செய்தவள்...' என, எண்ணியவள், 'அவனைப் பார்த்து, நன்றி சொல்ல வேண்டும். வாழ்க்கை முழுவதும், மாறாத அன்பை அவன் மேல் சொறிந்து, பூமாலை போல, அவன் வாழ்வை மணம் கமழ வைப்பேன் என்பதை அவனிடம் சொல்ல வேண்டும்...' என நினைத்தாள்.
அவன் வேலை செய்யும் ஊடகத்தின் வாசலில் நின்றிருந்தாள், ஆனந்தி. பரபரப்பாக இயங்கிய அலுவலகத்தின் உள்ளே செல்ல தயங்கி, காவலாளியிடம் விசாரித்தாள்.
'யாரு பெருமாள் சாரா... இப்ப தான், 'கேன்ட்டீன்'க்கு போனார்; அங்க போங்க...' என்றார்.
அவர் காட்டிய வழியில், அவளின் பாதங்கள் நகர்ந்தன.
அவன் முதுகு தெரிந்தது. கூட்டம் அதிகமற்ற அந்த உணவு விடுதியில், சாம்பார் வடையை சுவைத்தபடியே யாருடனோ மொபைல் போனில் உரையாடிக் கொண்டிருந்தான்.
அவள் முயற்சி இல்லாமலேயே அவன் பேசிய வார்த்தைகள், காதுக்குள் வந்து புகுந்தன.
'அட ஆமாம்பா... எல்லாம் சட்டு, புட்டுன்னு நடந்து போச்சு. பொண்ணு அழகாத் தான் இருக்கிறா... ஆனா, மூலம் நட்சத்திரம். அம்மாவுக்கு இஷ்டமில்ல; என் கட்டாயத்துக்காக ஒத்துகிட்டாங்க...' என்றான், பெருமாள்.
அவள் உன்னிப்பாக கவனித்தாள்.
'அட நீ வேற... எனக்கொண்ணும் புரட்சி, புண்ணாக்கெல்லாம் கிடையாது; எல்லாம் ஒரு கணக்கு தான். மூலம் நட்சத்திரம்ன்னு கல்யாணம் கூடி வராம தாழ்வு மனப்பான்மையில உழண்டுகிட்டிருக்கிற பெண்ணை கட்டிகிட்டா, காலம் முழுவதும், நன்றியில நம்மள ராஜாவா கொண்டாடுவா. தியாகியா நினைச்சு தலையில தூக்கி வச்சுக்குவா. எதுத்து பேச மாட்டா; இதனால, குடும்பத்தில சண்டை, சச்சரவு இருக்காது. தவிர, இந்தப் பொண்ணு நல்லா கோலம் போடுது, சமைக்குது, தோட்டம் போடுது, வீட்டை நல்லா சுத்தமா வெச்சிருக்குது. நமக்கு இப்படி சூப்பரான அடிமை எப்படி கிடைக்கும்...' என்று, 'கபகப' என்று சிரித்தவன், அனிச்சை செயலாய் திரும்பினான்.
அவளைப் பார்த்ததும், ஒரு கணம் திகைத்து, பின் சமாளித்தான்.
அவள் புன்னகைத்து, கைகூப்பி வணங்கினாள்.
'வாங்க ஆனந்தி... எங்க இவ்வளவு தூரம்...' விரைந்து வந்து வரவேற்றான்.
'நன்றி மிஸ்டர் பெருமாள்...'
'எதுக்கு...'
'உங்க மனசு புரிஞ்சுதே அதுக்கு...' என்றவள், 'இதுவரை, என் திறமைகள் சாதாரணமானவைன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, அது, இந்தக் காலத்துக்கு மிக அவசியமானதுன்னு புரிய வெச்சுட்டீங்க; நன்றி. ஒரே ஒரு வேண்டுகோள்...' என்றாள் ஆனந்தி.
அவன் அவளையே பார்க்கவும், 'ஆணோ, பெண்ணோ யாரையும் அடிமை ஆக்கலாம்ன்னு நினைக்காதீங்க. அன்பு மட்டும் தான் நாயைக் கூட வாலை ஆட்ட வைக்கும்ங்கிறத நினைவுல வெச்சுக்குங்க; வரேன்...' என்றவள் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.
அடிவாங்கியது போல நின்றான், ஆதிகேசவ பெருமாள்.
இப்போதும், அவன் சிலையாகத் தான் நின்றான். மெல்ல உணர்வு வந்தவனாக, ''என்னை மன்னிச்சிடு ஆனந்தி. நீ எடுத்துச் சொன்ன பாடத்த, நான் இன்னைக்கும் மறக்கல. ஆனா, உன்னை சந்திக்கிற தைரியம் எனக்கு இல்ல. உன் உழைப்பும், அர்ப்பணிப்பும் இவ்வளவு பெரிய இடத்துக்கு உன்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. ஆனா, நான் அதே நிருபரா, அதே சொற்ப ஊதியத்துல இருக்கிறேன். அன்றைய என் அல்பமான பேச்சுக்கும், திமிருக்கும் என்னை மன்னிச்சிடு...'' என்றான் பெருமாள்.
''நீங்க உங்க தப்ப உணர்ந்ததே போதும்; என் மனசுல உங்க மேல எந்த வன்மமும் இல்ல. இப்பவும் நீங்க, உங்க அம்மாவ அழைச்சுட்டு எங்க வீட்டுக்கு வரலாம்; என் அப்பாகிட்ட பேசலாம்,'' என்றாள் புன்னகையுடன்!
அவன் திக்குமுக்காடிப் போனான்.
வானதி
