தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இரக்கமுள்ள மனசுக்காரன்டா!

இரக்கமுள்ள மனசுக்காரன்டா!

இரக்கமுள்ள மனசுக்காரன்டா!


PUBLISHED ON : அக் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய இளைஞர்களில், பெரும்பாலானோர், கஷ்டப்பட்டு வேலை செய்யத் தயாரில்லை. வெயில்படாமல், உடை கசங்காமல், 'ஏசி' ரூமில் உட்கார்ந்து வேலை செய்யவே விரும்புவர். இவர்களுக்கு மத்தியில், பட்டப்படிப்பு படித்து விட்டு, மதுரை மக்களின் அன்பைப் பெற்ற ஆட்டோ ஒட்டுனராக உள்ளார், மதன்.

மதுரை வக்பு போர்டு கல்லூரி யில், வரலாற்றுப் பிரிவை எடுத்துப் படித்த போது, 'இதை படித்தால் வேலை கிடைக்காது' என்று, நண்பர்கள் சிலர் சொல்ல, 'நான் வேலைக்காக படிக்க வில்லை; என் அறிவை, விருத்தி செய்து கொள்ளவே படிக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குமே, அவன் நாடு, ஊரைப் பற்றிய வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அதனாலே, இப்பாடத்தை நான் படிக்கிறேன்...' என்று சொல்லி, வரலாறு படித்தவர். தொடர்ந்து, வரலாற்று பாடத்தில், முதுகலை படிக்கலாம் என்று எண்ணியபோது, ஏதாவது ஒரு வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற, குடும்ப சூழ்நிலை, அதற்கு இடம் கொடுக்கவில்லை.

சென்னை, திருப்பூரில் பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்தார்; எதுவுமே, அவர் மனதுக்கு பிடிக்கவில்லை. அதனால், சொந்த ஊரான மதுரைக்கே திரும்பி வந்தவர், பொழுது போக்காக, 'கிளாரினட்' எனும், இசைக்கருவியை வாசிக்கப் பழகி, உள்ளூர் பேண்டு வாத்திய குழுவில், கிளாரினட் இசைக்கலைஞராக பணியாற்றி வந்தார். ஆனால், அதில் பணம் வரவில்லை; புகழ் கிடைத்தது.

இதிலும், நிரந்தர வருமானம் இல்லாத நிலையில், இவரது சகோதரர், 'கொஞ்ச நாளைக்கு ஆட்டோ ஓட்டிப்பார் உனக்கு பிடிக்கும்...' என்று சொல்ல, மதன், ஆட்டோ ஓட்டத் துவங்கினார்.

எதைச் செய்தாலும், அதில் ஒரு நேர்த்தி, நேர்மை, உழைப்பை வெளிப்படுத்தும் மதன், ஆட்டோ ஓட்டுவதிலும், தன் நல்ல குணங்களை வெளிப்படுத்தினார். இவரின் அணுகுமுறையில் இருந்த பண்பாடும், இசைக் கலைஞராக இருந்தபோது கிடைத்த புகழும், எளிதில் மக்களை அணுக வைத்தது.

நியாயமான கட்டணம், ஒரு எஸ்.எம்.எஸ்., கொடுத்தால், உடனே தொடர்பு கொள்வது, எந்நேரம் அழைத்தாலும் செல்வது போன்ற காரணங்களால், மதுரை, திருப்பாலை பகுதி மக்களின் அன்புக்கு பாத்திரமானார். அப்பகுதி பெண்களுக்கு உடன் பிறவா சகோதரன் போல, அக்கறை எடுத்து செயல் படுவதால், எங்கே போக வேண்டும் என்றாலும், 'கூப்பிடு மதனை' என்று சொல்லுமளவிற்கு, பிரபலமாகி விட்டார்.

இது மட்டுமின்றி, தன், ஆட்டோ, சவாரி இல்லாமல் போகும் போது, வழியில் யாராவது முதியவர்களை பார்த்தால், இலவச மாக ஏற்றிச் செல்வது, பிரசவத்திற்கு இலவசம், வீட்டில் ஆட்கள் இல்லாத சூழ்நிலையில், முதியவர்களை மருத்துவ மனைக்கு கூட்டிச் சென்று, அழைத்து வருவது, நள்ளிரவு நேரமானாலும், ரயில் பெட்டிக்கே வந்து, வாடிக்கையாளர்களை வரவேற்பது என்று, 'செய்யும் தொழிலே தெய்வம்'எனக் கருதி, நேரம் காலம் பாராமல், ஓய்வு இன்றி உழைத்து வருகிறார்.

இவர், மதுரையின் வரலாறை முழுமையாக தெரிந்து வைத்திருப்பதால், மதுரைக்கு புதிதாக வருவோர், ஆட்டோவில் ஏறும்போது, மதுரையின் வரலாறை சுவாரசியமாக சொல்கிறார். விரும்பு வோருக்கு, சம்பந்தப்பட்ட இடத்தை கூட்டிப்போய் காண்பிக்கிறார்.

தற்போது, தபால் மூலம், வரலாறு முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் இவர், 'என் தேவைக்கு ஏற்ப, வருமானம் கிடைக்கிறது. எனக்கு அது போதும். வேறு எந்த வேலைக்கு போயிருந்தாலும், இந்த அளவு நிம்மதியும், நட்பும், பாசமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே...' என்று சொல்கிறார்.

'செய்யும் தொழில் எதுவானாலும், அதில் திறமைதான் நமது செல்வம்' என்ற, பொன் மொழியின் இலக்கணமாக திகழும், மதனுடன் பேச விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 93677 92728.

***

ஸ்ரீநிதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us