தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு நாள் வாகினி ஸ்டுடியோவுக்குள் நடந்து போய்க் கொண்டிருந்தேன். புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதன் என்னை பார்த்து, 'நாகேஷ், வாகினியில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில், ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப்போகிற காட்சியின் துவக்கத்தில், ஒரு சர்வர், டேபிளை துடைப்பது போல, ஒரு காட்சி இருக்கிறது. அந்த ஒரு ஷாட்டில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்... 500 ரூபாய் போதுமில்லையா?' என்று கேட்டார்.

நான், 'சரி' என்றதும், காத்திருக்க சொன்னார். அப்போது, அந்தப் பக்கம், ஒரு வயதான மனிதர், தன் உடலை, வில் போல பின்னுக்கு வளைத்துக் கொண்டு, நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் என் கவனத்தை ஈர்த்தார். அவர் கையில், ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும் இருந்தது. என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா... கிடு கிடுவென்று, அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, 'ரொம்ப கஷ்டப் பட்டு, சிகரெட் பெட்டியைத் தூக்கிக்கிட்டு போறது போல இருக்கு. என்கிட்ட வேணும்ன்னா கொடுங்க. நான் எடுத்து கிட்டுவர்றேன்...' என்றேன். அவர், 'ஹா... ஹா' என்று, சுருக்கமாக சிரித்துவிட்டு, தன் பின்னோக்கிய, வில் நடையைத் தொடர்ந்தார்..

சிறிது நேரத்தில், எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன். ஜெகன்னாதன், 'ஒரு முறை, ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.

நான், ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டு, தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக் கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு டம்ளரை, மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளை சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வேகமாக வந்து கீழே விழப்போகும் டம்ளரை, லாவகமாக பக்கெட்டில் பிடித்துக் கொண்டேன்.

'சபாஷ், ரொம்ப நல்லா நடிக்கிறியேப்பா...' என்று, ஒரு குரல் கேட்டது... செட்டுக்கு வெளியே, ஒருவரின், நடையைக் கேலி பண்ணினேனே... அதே மனிதர்! வாகினி ஸ்டுடியோ அதிபரான சக்ரபாணி. 'சார் கொஞ்ச நேரத்துக்கு முன், நீங்க நடந்து வந்துகிட்டிருந்த போது, யாருன்னு தெரியாம உங்களைக் கேலி செய்துட்டேன். தயவு செய்து, மன்னிச்சிடுங்க...' என்று, காலில் விழாத குறையாக, கெஞ்சினேன்.

'அதை நான் எப்பவோ மறந்தாச்சு... நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே...' என்றவர், அடுத்தபடியாக, 'உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?' என்று கேட்டார். 500 ரூபாய் என்றார் ஜெகன்னாதன்.

'தமிழ்ல நடிக்கத்தானே, 500 ரூபாய் பேசியிருக்கு. நீயே தெலுங்கிலேயும், இந்த காட்சியை பண்ணிடு. இரண்டுக்குமா சேர்த்து, 1000 ரூபாய் வாங்கிக்கோ...' என்றார். எனக்கு நடப்பது எல்லாம் கனவா, நிஜமா என்ற, சந்தேகம் வந்து விட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகள் எடுக்கப் பட்டன.

புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதனைக் கூப்பிட்டு, 1000 ரூபாய்க்கு, செக் எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.

நான், 'சார் சார் செக்கெல்லாம் வேணாம்...' என்றேன். என்னைப் பார்த்து சிரித்தபடி, 'வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது; பயப்படாதே...' என்றார்.

'அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால், பணமா கொடுத்தீங்கன்னா ரொம்ப சவுகரியமா இருக்கும்...' என்றேன்.

'அப்படியா... சரி' என்று சொல்லி, ஜெகன்னாதனிடம், 'காரில் இவரை அழைச்சிட்டு நேரே பேங்குக்குப் போய், செக்கை பணமா மாத்தி, கொடுத்துவிடு. இவரையும், இவரது இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வா...' என்றார்.

அந்த ஆயிரம் ரூபாயை, என் வாழ்வில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில், ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பேண்ட் வாங்கி, நான் காதலித்த ரெஜினாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்.

— 'சிரித்து வாழ வேண்டும்' நூலில் நடிகர் நாகேஷ்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us