PUBLISHED ON : ஜூலை 25, 2021

ஜப்பான் தலைநகர், டோக்கியோ நகரில், ஜூலை 23ல் ஆரம்பித்து, ஆகஸ்ட் 8ம் தேதி வரை, 32வது ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. இந்த ஒலிம்பிக் சின்னம்: மிரய்டோர்.
'மிரய்' என்றால், எதிர்காலம்; 'டோர்' என்றால், முதலும் முடிவும் அற்ற காலம் என, பொருள். 'பாரம்பரியத்தை மதிப்போம்; புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம்' என்ற அடிப்படையில் இது எழுந்ததாம்.
* இந்த ஒலிம்பிக்கில், 206 நாடுகள் இடம்பெற்றுள்ளன. 11 ஆயிரத்து 91 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்
* தற்போதைய மார்டன் ஒலிம்பிக்ஸ், 1896ல் துவங்கியது
* 1900ம் ஆண்டு, உயிருடன் புறாவை சுட்டு வீழத்தும் போட்டி இருந்தது. ஆனால், அந்த ஒலிம்பிக்குடன் அது விலக்கிக் கொள்ளப்பட்டது
* கடந்த 1912 - 1948ம் ஆண்டு வரை, ஒலிம்பிக் போட்டிகளில் கலைஞர்களும் பங்கு பெற்றனர். பெயின்டர்கள், சிற்பிகள், கட்டட கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பாடகர்கள் என, பலர் போட்டிகளில் கலந்து, பதக்கங்களும் பெற்றுள்ளனர்
* டார்ஜான் - 12 படங்களில் டார்ஜானாக நடித்தவர், ஜானி வெயிஸ் சுமூர். சிறந்த நீச்சல் வீரரான இவர், 1920 ஒலிம்பிக்கில், ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார்
* கடந்த, 1936ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், போல்வால்ட் போட்டியில், இரண்டு ஜப்பானிய வீரர்கள், இரண்டாவது இடத்தில் சரிசமமாக இருந்தனர். மீண்டும் போட்டி நடத்தாமல், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வெட்டி, பாதி வெள்ளி + பாதி வெண்கலம் என இணைத்து, 'வெல்ட்' செய்து கொடுத்தனர்
* ஒலிம்பிக் சின்னத்தில், ஐந்து வண்ணங்கள் இருக்கும். அதிலுள்ள ஒரு வண்ணம், நிச்சயம் கலந்துகொள்ளும் நாடுகளின் கொடிகளில் இடம்பெற்றிருக்கும்.
மேலும் சில தகவல்கள்:
* விளையாட்டு போட்டிகளின் தாயகம், கிரீஸ்
* ஒலிம்பியா என்ற நகரில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்ததால், ஒலிம்பிக் என, பெயர் வந்ததாக கூறுவர்
* உலகப் போரால், மூன்று முறை கோடை கால ஒலிம்பிக் போட்டிகளும், இரண்டு குளிர்கால போட்டிகளும் ரத்தாகின
* லண்டனில், இதுவரை, 1908, 1948, 2012 என, மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன
* கடந்த, 1972ல், ஜெர்மனியின் மூனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் தான், அதற்கென, சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. 'வால்டி' என்ற ஒரு பிரபலமான நாய் தான், முதல் சின்னம்
* லண்டனில், 2012ல் நடந்த ஒலிம்பிக்கிற்கு தனி பெருமை உண்டு. எல்லா நாடுகளும், தங்கள் குழுவில் பெண் வீராங்கனைகளையும் சேர்த்து அனுப்பியிருந்தன.
* கடந்த, 2016ம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக் போட்டிதான், தென் அமெரிக்காவில் நடந்த முதல் ஒலிம்பிக் போட்டி.
ஒலிம்பிக்கில் சில காமெடிகளும் நடந்ததுண்டு...
* லண்டன் ஒலிம்பிக்கின் போது, பின்லாந்து வீரர்கள், ரஷ்ய கொடியின் பின்னால் அணிவகுப்பில் வர மறுத்து விட்டனர்
* அமெரிக்க வீரர்கள், இதே அணிவகுப்பில் ராணி அமர்ந்திருந்த ராயல் பாக்சை கடக்கும்போது, தங்கள் நட்சத்திர பதாகையை தாழ்த்த வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
* அமெரிக்கா மற்றும் 64 நாடுகள், அரசியல் காரணங்களுக்காக, 1980ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கு கொள்ளவில்லை
இதையடுத்து, 1984ல், லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், ரஷ்யா மற்றும் பல கீழை நாடுகள் பங்கு கொள்ளவில்லை.
* எதிர்பாராத விதமாக ஒலிம்பிக் தீபம் அணைந்தால், உடனே, அதை ஏற்ற அனுமதியில்லை. எரிந்து கொண்டிருக்கும் மற்றொரு தீபத்தை எடுத்து வந்து, நிஜ ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவர்
* வரும் 2022ல், குளிர்கால ஒலிம்பிக்ஸ், பிரான்சில் நடக்கப் போகிறது; 2024ல் கோடை
கால ஒலிம்பிக்ஸ், ஜூன் 26ல் துவங்க உள்ளது.
ராஜி ராதா
