PUBLISHED ON : ஜூன் 22, 2014

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வழக்கறிஞராக பணியாற்றிய சமயம், ஒரு ஏழை விதவைப் பெண், அவரை சந்தித்து, தன் மகன் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொண்டதாகவும், நிரபராதியான அவனுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அவனுக்காக வாதாட வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே இச்செய்தியை
செய்தித்தாளில் படித்திருந்த லிங்கன், அப்பெண்மணியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
நீதிமன்றத்தில் கொலையை நேரில் பார்த்த சாட்சியை, குறுக்கு
விசாரணை செய்ய துவங்கிய லிங்கன், 'நீங்கள் தானே, கொலையை நேரில் பார்த்தவர்...' என்று கேட்டார்.
'ஆம்!' என்றான் சாட்சியாளன்.
'கொலை நடந்த போது நேரம் என்ன?' என்று, லிங்கன் கேட்க, 'இரவு, ௧௦:௦௦ மணி...' என்றான், சாட்சியாளன்.
உடனே லிங்கன், 'இரவு என்றால், இருளாக இருந்திருக்குமே... நீங்கள் எந்த வெளிச்சத்தில் கொலையை பார்த்தீர்கள், தெரு விளக்கு வெளிச்
சத்திலா...' எனக், கேட்டார். அதற்கு அந்த சாட்சியாளன் மிகுந்த
ஜாக்கிரதையாய், 'விளக்கு வெளிச்சத்தில் இல்லை; நிலா வெளிச்சத்தில் பார்த்தேன்...' என்றான்.
அவனது கூற்றை உறுதி செய்து கொண்ட லிங்கன், நீதிபதியை பார்த்து, 'இவர் கூறிய கொலை நடந்த அந்த நாள், நியூ மூன் (அதாவது, அமாவாசை நாள்) முடிந்து, ஏழு நாட்களே ஆகியுள்ள முன்னிலவு வளர்பிறை காலம். அக்காலத்தில், நிலவு, இரவில் விரைவில் தோன்றி, விரைவில் மறைந்து விடும் என்பதை வானிலை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அதன்படி பார்த்தால், இவர் கொலையை பார்த்த இரவில் நிலவு, ௯:௦௦ மணிக்கு மறைந்திருக்கும். நிலவு மறைந்த பின், இருளில் கொலையை மட்டுமல்ல, எதையுமே பார்த்திருக்க
முடியாது. எனவே, பொய் சாட்சி கூறும் இவரை தண்டித்து, நிரபராதியை விடுவிக்க வேண்டும்...' என்று கூறினார்.
லிங்கனின் மதி நுட்பத்தால், அந்த ஏழை
நிரபராதிக்கு, நீதி கிடைத்தது.
அது மட்டுமல்லாமல், இந்த வழக்குக்காக, லிங்கன் பணம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும், குறிப்பிடத்தக்கது.
— படித்தது அ.ப.மலர்க்கொடிபலராமன், சென்னை
எட்டயபுரம் சமஸ்தானத்தில், 'கள்வர் தலைவன்' என்ற நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தனர் எங்கள் நாடக குழுவினர். இதில், திருடர்கள் மாறு வேடங்களில் தோன்றி, சந்தையில் சாமான்கள் விற்பது போல், ஒரு காட்சி. அதில் வடை விற்பவன், ஒரு திருடன். இக்காட்சிக்காக, நிஜ வடைகளையே தயாரித்துக் கொடுப்பர்.
அன்றைய தினம், மேற்படி
காட்சியில், வடை வியாபாரி வேடத்தில் நடித்த நடிகருக்கு, தன்னிடமிருந்த வடையின் மீது, ஆசை ஏற்பட்டுவிட்டது. இருட்டில், ஒரு வடையை எடுத்து, வாயில் போட்டு, மெல்ல ஆரம்பித்தார்.
தூக்கப்பட்டது திரை; வடைக்காரன் பாட வேண்டும். வாயில் வடை; எப்படி பாடுவார் அந்த நடிகர்?
நாடக ஆசிரியராக இருந்த கந்தசாமி முதலியார், திரைக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். நடிகர் வாயில் வடை இருப்பது தெரியாமல், நடிகருக்குப் பாட்டு நினைவுக்கு வரவில்லை போலிருக்கிறது என்று நினைத்து,
அடியெடுத்துக் கொடுத்து, நினைவுப் படுத்திப் பார்த்தார்.
ஆனால், அவர் பாடினால் தானே... நடிகர் பாட்டை மறந்து விட்டார் என நினைத்து, கந்தசாமி
முதலியாருக்குக் கோபம் வந்துவிட்டது. தன் கையிலிருந்த நாடகப் புத்தகத்தை, வீசி எறிந்து விட்டுப் போய் விட்டார்.
— அவ்வை சண்முகம், 'என் நாடக வாழ்க்கை' நூலில்.
இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஒருமுறை காந்திஜி சுயராஜ்ய இயக்கத்தை ஆரம்பித்தார். சுயராஜ்ய மந்திரத்தை கிராமம் கிராமமாகப் போய் சொல்ல வேண்டுமென்று, தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படி நானும், சில கிராமங்களுக்குப் போனேன். அப்படி, ஒரு கிராமத்தில், தண்டோரா அடித்து, 'கிராம சாவடிக்கு முன் கூட்டம் நடைபெறும்' என, அறிவித்த பின், குறிப்பிட்ட நேரத்தில், கையில் ஒரு அரிக்கேன் லாந்தருடன் சாவடிக்குப் போய் சேர்ந்தேன்.
அங்கே, ஒரே ஒரு நபர் மட்டுமே வந்திருந்தார். அந்த ஒருவராவது வந்திருக்கிறாரே என்ற நன்றி உணர்ச்சியுடன், பிரிட்டிஷ் சர்க்கார், இந்தியாவில் செய்துவரும் அட்டூழியங்களைப் பற்றி, கேட்பவரின் ரத்தம் கொதிக்கும்படியாக, ஒன்னேகால் மணி நேரம் பிரசங்கம் செய்தேன். பின், நானே வணக்கம் செய்து, உட்கார்ந்திருந்த ஒரே நபரைப் பார்த்து, 'ஐயா, தங்களின் தேச பக்தி என்னைப் பரவசப்படுத்துகிறது. தாங்கள் யாரோ, எந்த ஊரோ...' என்றேன்.
அதற்கு அந்த நபர், 'என்னைத் தெரிய வில்லையா... நான் உம்மை, கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து, கரூர் வரையில் தொடர்ந்து வந்திருக்கிறேன். நான் சி.ஐ.டி.,காரன்; உம்மைக் கண்காணிப்பதற்காக என்னை அனுப்பியுள்ளனர்...' என்றார் அவர்.
— கல்கி எழுதிய, 'இலங்கையில் ஒரு வாரம்' நூலிலிருந்து.
நடுத்தெரு நாராயணன்
