PUBLISHED ON : ஜூன் 22, 2014

''மனுசங்க மேல, கோபம் கோபமா வருது,'' என்றார் மணிவண்ணன். மீண்டும், எங்கோ அடி வாங்கியிருக்கிறார் என்று புரிந்தது. அவருக்கு, இது ஒன்றும் புதிதில்லை. நல்ல எண்ணத்தோடு, அவர் செய்கிற செயல்களுக்கெல்லாம், அபகீர்த்திதான் பரிசாக கிடைக்கும்; அது, அவர் ராசி.
மணிவண்ணன் எனக்கு அறிமுகமானதே, ஒரு மருத்துவமனையில் தான். என் மாமனாருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்திருந்ததால், மருத்துவமனையில், அவர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டேன். அப்போது, அங்கு வரும் மணிவண்ணன், எங்கள் அறையையும், எட்டிப்பார்த்து, 'ஏதாவது உதவி வேணுமா?' எனக் கேட்பார்.
முதலில், அவரை மருத்துவமனை சிப்பந்தி என்று தான் நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது, பக்கத்து அறையில் இருக்கும் பேஷன்ட்டைப் பார்க்கவே, அவர் வந்து போகிறார் என்று. ஒரு நாள், 'பேஷன்ட்டுக்கு என்ன...' என, நான் கேட்டபோது, 'ரோட் ஆக்சிடண்ட் சார்; கொண்டு வந்து சேர்த்திருக்கேன்...' என்றார்.
'உங்களுக்கு அவர் என்ன உறவு...' என்று கேட்டேன்.
'உறவா இருந்தாத்தான், உதவி செய்யணுமா சார்...' என்று, திருப்பிக் கேட்டார். அந்த நொடியே, மணிவண்ணனை எனக்கு பிடித்துவிட்டது.
'நம்ம தெரு ஆளு சார்; இங்கே தங்கி வேலை பாக்குறார். மனைவி, புள்ளைக எல்லாம் வெளியூரில இருக்காங்க. நான் கடைக்கு போயிட்டு வரும்போது, பைக்குகாரன் மோதிட்டுப் போய்ட்டான். மத்தவங்க போல, என்னால வேடிக்கை பாத்துட்டு போக முடியல. அதான் கொண்டு வந்து மருத்துவமனையில சேத்து, அவங்க வீட்டுக்கு தகவல் கொடுத்து வரவழைச்சு, ஒப்படைச்சேன். இருந்தாலும், பாருங்க... மனசு கேட்க மாட்டேங்குது. அதுதான், அப்பப்ப வந்து பாத்துட்டுப் போறேன். உங்களையும் நம்ம ஏரியா பக்கம் பாத்திருக்கேனே...' என்றார்.
என் விலாசத்தை சொன்னதும், 'அடடே.... நீங்க மூணாவது குறுக்குத் தெரு; நான் எட்டாவது குறுக்குத்தெரு. இவ்வளவு கிட்டத்துல இருந்தும், ஒருத்தரையொருத்தருக்கு தெரியலை பாருங்க... இதான்ங்க சிட்டி லைப்...' என்றார்.
மருத்துவமனையில் உண்டான அறிமுகம், வீடு வரை வளர்ந்தது.
ஒரு நாள் மணிவண்ணன் வீட்டிற்கு சென்றிருந்போது, அவர் மனைவி காஞ்சனா என்னிடம், 'ஆசுபத்ரியில இருக்கிறவங்களுக்கு உதவ நினைக்கிறது, நல்ல விஷயம்தாங்க; ஆனா, அதையும் ஆள் பாத்து செய்யணுமில்லே. வேண்டாதவங்களுக்கெல்லாம் ஓடி ஓடி செஞ்சு, இவர் சம்பாதிக்கிறதெல்லாம் கெட்ட பேருதான். அடிபட்ட நாயை காப்பாத்தினா, அதுக்கு நன்றி இருக்கும். காட்டுப்புலிக்கு அடி பட்டுதுன்னு உதவிக்கு போனா சும்மா விடுமா... போட்டுத் தள்ளிடாது...' என்றார். எனக்கு அந்த உவமை, ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், 'மயக்க ஊசி போட்டு வைத்தியம் செய்தாப்போச்சு...' என்றார்.
'அவ்வளவு சாமர்த்தியம் இருந்தால், நான் ஏன் குறை சொல்லப் போறேன்...' என்று கூறி, அவரை முறைத்தார், அந்த அம்மா.
'அப்படி என்னம்மா தப்பு செய்திட்டாரு...' என்று மணிவண்ணனுக்கு பரிந்து கொண்டு கேட்டேன்.
'அத ஏங்க கேட்குறீங்க... இங்க எதிர் பிளாட்டுல, ஒரு வயசான தம்பதி குடியிருங்காங்க; அந்த பெரியவருக்கு முதுகுத்தண்டுல பிரச்னையாகி, படுத்த படுக்கையா இருக்காரு. டாக்டர் வந்து போய்கிட்டிருக்கார். அவர் பக்கத்துலயே ஆள் இருக்கணும். எப்பயாவது, அந்த அம்மாவோட தம்பி துணைக்கு வந்துட்டு போவான். வேளா வேளைக்கு மருந்து, சாப்பாடு கொடுக்கணும்...'
திறந்திருந்த கதவு வழியாக, எதிர் பிளாட்டை பார்த்தேன்; அங்கே கதவு மூடியிருந்தது.
'அந்த வீட்டுக் கதவு எப்பவும் மூடித்தான் இருக்கும்; அந்த அம்மா, ஒரு டைப். யாரையும் நம்பாது; சாதாரணமா நல்லாயிருக்கீங்களான்னு கேட்டாலே... ஏன் கேட்குறாங்க, எதுக்கு கேட்கறாங்கன்னு சந்தேகப்படும்; ஒருத்தரையும் உள்ள விடாது. குடி வந்து, ஒரு வருஷம் ஆகியும் எங்க கிட்ட, முகம் கொடுத்து பேசினதில்ல.
'அப்பேற்பட்ட பொம்பள, ஒரு நாள் வந்து, 'ஒரு கல்யாணத்துக்காக திருத்தணி போக வேண்டியிருக்கு. ரொம்ப முக்கியமான கல்யாணம். இரண்டு நாள் பெரியவர கவனிச்சுக்க முடியுமா'ன்னு கேட்டது. 'டயத்துக்கு எட்டிப் பாத்து மருந்து சாப்பிடணும்ன்னு நினைவுபடுத்தினா போதும்; அவரே மாத்திரைய போட்டுக்குவார். சாப்பாடு நொய்க்கஞ்சி அல்லது ஓட்ஸ் கொடுத்தா போதும்'ன்னு சொன்னாங்க.
'பெரியவர் என்ன கண்டிஷன்ல இருக்காரோ... அது சரிப்படாதுன்னு தோணிச்சு. சாப்பாடு, மருந்துன்னாலும் பரவாயில்லை சார். பெரியவருக்கு பெட்பான் வைக்கணும், டவல் பாத் கொடுக்கணும். அதனால, 'ஒரு நர்ச ஏற்பாடு செய்திடுங்க'ன்னு சொன்னேன். அதுக்கு அந்த அம்மா, 'ரெண்டு நாளைக்குன்னாலும், ஆயிரம் ரூபா கேட்கறாங்க'ன்னுச்சு.
'இவர் சும்மா இருந்திருக்கலாமில்ல... 'அந்த பணம் இருந்தா, பெரியவருக்கு மருந்து மாத்திரை வாங்க யூஸ் ஆகும்; நீங்க போயிட்டு வாங்க, நான் பாத்துக்கறேன்'னார். அதையே அந்த அம்மா கெட்டியா பிடிச்சிகிட்டாங்க. 'சாரே சொல்லிட்டார்'ன்னு வீட்டுச் சாவியை கையில் கொடுத்துட்டு புறப்பட்டுப் போயிட்டாங்க.
'ரெண்டு நாள்ன்னு சொல்லிட்டுப் போனவங்க, நாலு நாள் கழிச்சு, சாவகாசமா வந்தாங்க. இதனால, நாங்க போக வேண்டிய இரண்டு பங்ஷனுக்கு போக முடியாம போச்சு. அதுக்கெல்லாம், அந்தம்மா ஒரு சாரி கூட சொல்லல; கவனிச்சுகிட்டதுக்கு நன்றியும் சொல்லல. வந்ததும் வராததுமா, வீட்ல வச்சுட்டுப்போன பணம் ஐயாயிரத்தைக் காணோம்ன்னு புகார் செய்தாங்க. எனக்கு, 'திக்கு'ன்னு ஆயிடுச்சு...' என்றார்.
எனக்கும், 'அடப்பாவமே... இப்படியுமா மனுசங்க இருப்பாங்க...' என்று தோன்றியது. தொடர்ந்து அந்த அம்மா பேசினார்...
'இத்தனைக்கும் பெரியவர் இருந்த அறை, பாத்ரூமைத் தவிர, சமையலறை உட்பட மத்த எல்லா ரூமையும் பூட்டிட்டு போயிட்டாங்க; கஞ்சியும், வெந்நீரும் நாங்கதான் போட்டுக் கொடுத்தோம்.
'பெரியவர்கிட்டயும் காலணா கொடுக்கல; எங்ககிட்டயும் கொடுக்கல. பிறகு எப்படி பணம் காணாமல் போகும்ன்னு கேட்டதுக்கு, 'அவசரத் தேவைக்கு இருக்கட்டும்ன்னு தலையணைக்கு கீழே வச்சிட்டு போனேன்'னாங்க. 'நான் தினமும் தலையணை, போர்வை எல்லாம் எடுத்து தூசு தட்டிப்போட்டேன். அங்கே பணம் ஏதும் இல்லையே'ன்னு, இவர் சொன்னத அந்த அம்மா காதில வாங்கவே இல்ல.
'நாலு நாள் பாத்துக்கிட்டதுக்கு ஆயிரம் வேணும்ன்னாலும் எடுத்துக்குங்க; நர்ஸ்சுக்கு கொடுத்ததா நினைச்சுக்கறேன். மீதி நாலாயிரத்தைக் கொடுத்துடுங்கன்னு கேட்டதுமில்லாம, ஒருத்தரோடும் பேசியிராத பொம்பள, ஒவ்வொரு பிளாட்டுக்கும் போய் எல்லாரிடமும், 'திருட்டு குடும்பம்; நான் பாத்துக்கறேன்னு, அந்த நபர் முன் வந்தபோதே சந்தேகம் வந்தது; அது சரியாப் போச்சு. உடம்புக்கு முடியாத மனுசன்கிட்டருந்த பணத்தை எடுக்க, எப்படிதான் மனசு வந்ததோ'ன்னு பரப்பிவிட்டுருச்சு. அவ்வளவு பேரும் விசாரிக்க ஆம்பிச்சுட்டாங்க. ஒரு வாரம் வெளியில தலை காட்ட முடியல. அப்புறம் தான் உண்மை தெரிஞ்சது...'
'என்ன உண்மை...' என்பதாகப் பார்த்தேன்.
'அந்த அம்மாவோட தம்பி, கல்யாணத்துக்கு அழைச்சுகிட்டு போக வந்தபோது, எடுத்திருக்கான்; 'உன்கிட்ட கூட சொன்னேனே அக்கா'ன்னு எங்க முன்னாடியே, அந்த அம்மாளிடம் கேட்டான்.
'திருடிட்டாங்கன்னு ஓடி ஓடி எல்லார்கிட்டயும் சொன்ன அந்த பொம்பள திருடலைங்கற உண்மையை மட்டும் ஒருத்தருக்கும் சொல்லல; எப்படியிருக்கு பாருங்க... ஓரளவுக்கு எங்களைப் பத்தி தெரிஞ்சவங்க, அவங்க புகாரை நம்பலன்னாலும், ஒருத்தர் ரெண்டு பேரு நம்பியிருக்கலாமில்லயா... இன்னைக்கும் விசாரிக்கிறாங்க. நாங்கள் நிரபராதிகன்னு கழுத்துல போர்டு கட்டிகிட்டா சார் திரிய முடியும்...' என்று கேட்டார்.
'அவங்க பழி போடும்போது, நம்ம தரப்பு நியாயத்த சத்தம் போட்டு, நாலு பேரை கூட்டி உண்மைய இவரு சொல்ல வேண்டாமா சார். அதெல்லாம் செய்ய மாட்டார்; எதிர்த்து கேட்க தைரியமும் வராது; ஆனால், இப்படி பழி போட்டுட்டாங்களேன்னு உட்கார்ந்து மருகிகிட்டிருப்பார். நாலு நாளைக்கு, சோறு தண்ணி உண்ணாம, 'குய்யோ'ன்னு, உட்காந்துகிட்ருப்பாரு. மன தைரியம் இல்லாதவரு, ஏன் இந்த மாதிரி காரியங்கள்ல இறங்கணும்ன்னு கேட்கறேன்...' என்று ஆற்றாமையுடன் பேசிய காஞ்சனா, தொடர்ந்து, கீழ் வீட்டு விவகாரத்தையும் சொன்னார்...
'இதே மாதிரி தான், கீழ் வீட்ல ஒரு குடும்பம்; அவர் பேங்குல வேலை செய்றார். அவர் மனைவி டீச்சரா இருக்காங்க. ஒரு நாள் ராத்திரி, அவர் மனைவி போன் செய்து, எங்க 'வீட்டுக்காரரு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்றாரு... பயமா இருக்கு, கொஞ்சம் உதவிக்கு வாங்களே'ன்னு அழுதா. நாங்களும் பதறியடிச்சு ஓடினோம். அந்த மனிதர் வேர்த்து கொட்ட மார்பை பிடிச்சுக்கிட்டே, 'ப்ளீஸ் ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ'ன்னு கதறினார். சுத்து வட்டாரத்துல, எந்த டாக்டரும் இல்ல; இவர் கால் டாக்சிக்கு சொல்லி, கைவசம் இருந்த பணத்தை எடுத்துகிட்டு கூட்டிப்போய் போரூர் மருத்துவமனையில் சேர்த்து, கையிலிருந்த பணத்தைக் கட்டிட்டு, ராத்திரி முழுக்க துணைக்கு இருந்து, காலையில அவங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்த பின், வீடு திரும்பினார். தாமதம் செய்யாமல் உடனடியாய் கொண்டு போய் சேர்த்ததினால, அந்த மனுஷன காப்பாத்த முடிஞ்சது.
'எங்களுக்கும் சந்தோஷம். அவங்க நல்லபடியா வீடு திரும்பி, நன்றி சொல்லி, பெரிய உதவின்னெல்லாம் பாராட்டினாங்க. ஆனா, பண விஷயத்த பத்தி கண்டுக்கவேயில்லை. 'நிறைய செலவாகியிருக்கும்... இந்த நேரத்துல, நம் பணத்த கேட்டு தொந்தரவு செய்ய வேணாம்ன்னு இருந்தோம். கொஞ்ச நாள் கழிச்சு நினைவுபடுத்தினா... 'சான்சே இல்லை... எல்லா செலவையும், எங்க அப்பாதான் செய்தாரு. கொண்டு போய், 'அட்மிட்' செய்தபோது, நானும் பக்கத்தில தானே இருந்தேன். யாரும் பணம் கட்டச்சொல்லலையே'ன்னு வாதிட்டா, அந்தப் பெண்.
'உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. நீ, உன் புருஷன் பக்கத்திலேயே இருந்தே. எமர்ஜென்சி வார்டுல போனதுமே, என்னை தடுத்து முன்பணம் கட்டச்சொல்லிட்டாங்க. என்கிட்ட அப்போ பத்தாயிரம் இருந்தது. கட்டி அந்த ரசீதை அக்கவுண்ட்சுல கொடுத்த பின்தான் டெஸ்ட்டுகளை ஆரம்பிச்சாங்க. எங்கு போனாலும், இதுதான் நடைமுறை'ன்னு விளக்கிச் சொன்னார். 'அப்படி கட்டியிருந்தா, உடனே கேட்டிருப்பிங்களே... இவ்வளவு நாள் கழிச்சு கேட்கறிங்களே... ஏமாத்தப் பாக்கறிங்களா... நோயாளிகள் விஷயத்துல பணம் பாக்கறது, உங்களுக்கு ஒண்ணும் புது விஷயமில்லையே... எதிர் போர்ஷன்காரர்களிடம் அப்படிதானே ஐயாயிரம் அடிச்சிங்க...' என்றாள்.
'அப்புறம் யார் எடுத்துச் சொன்னாங்களோ... பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனா. அன்றிலிருந்து எங்களோடு அந்த பெண் பேசுறதே இல்ல. உதவப் போய் உறவு கெட்டது. தேவையா இதெல்லாம்...' என்றார்.
அவர் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மணிவண்ணனைப் பார்த்தேன். 'என்ன சார் செய்றது. எனக்கு சிக்கல்ல மாட்டணும்ன்னு ஆசையா... ஏதோ ஒண்ணு, என்னை இப்படி ஆட்டி வைக்குது...' என்றார்.
''இப்போ புலம்பும்படியாக என்ன நடந்தது,'' என்று கேட்டு, அவரை ஏறிட்டேன்.
''நீங்க உங்க மாமனாரை மருத்துவமனையில சேர்த்திருந்தபோது, பக்கத்து அறையில ஒருத்தரை சேர்த்திருந்தேன்ல சார்...''
''ஆமாம். இப்ப அவர் எப்படி இருக்கார்?''
''டிஸ்சார்ஜாகி, ஜம்முன்னு வீட்டுக்கு வந்துட்டார் சார். அப்பார்ட்மென்ட் படி ஏறி எங்க வீட்டுக்கு வர்ற அளவுக்கு தேறிட்டார்.''
''பரவாயில்லையே. சரியான நேரத்துக்கு, அவரை மருத்துவமனையில சேத்து, உயிரை காப்பாத்திட்டிங்களே...''
''நீங்கதான் மெச்சிக்கணும். அந்த மனுசன் வந்து காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சிட்டார் சார். பெரிய மருத்துவமனையில சேத்து, நிறைய செலவ இழுத்துவிட்டுட்டேனாம்; ஆயிரம்ரூபாயில சரி செய்திருக்க முடியுமாம். 'உன்னை யாருய்யா என்னை தூக்கிட்டு போகச் சொன்னது'ன்னு சண்டை பிடிக்கிறார். என் மனைவி பார்வையாலேயே. எரிக்கிறா. இனி, எவன் செத்தாலும் எட்டிகூட பார்க்க மாட்டேன் சார்,'' என்று எழுந்து போனார்.
அடுத்த வாரமே, காய்ச்சலில் கிடந்த யாரோ ஒரு நபரை தோளில் போட்டுக்கொண்டு, மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருந்தார் மணிவண்ணன். காப்பாற்றி விடுவார் சந்தேகமில்லை. ஆனால், அதன் பின், என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
தேள் அடுத்தடுத்து கொட்டினாலும், மீண்டும் மீண்டும் காப்பாற்ற மகான்கள் மட்டுமல்ல, மணிவண்ணன்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.
எஸ்.தனஞ்ஜெயன்
