
ராஜாஜி, 1952ல் சென்னை மாகாண முதல்வர் ஆனதும், அவருக்கு பல வாழ்த்து செய்திகள் வந்தன. அதில், கழிவறைகள் சுத்தம் செய்வோர் சங்கத்து வாழ்த்து பற்றி ராஜாஜியின் கருத்து: 'என்னை பாராட்டி, பல செய்திகள் வந்தன; அவற்றுள் ஒன்று, தோட்டிகள் சங்கத்திலிருந்து வந்தது. அதற்கு மட்டும் தான் பதில் எழுதினேன். என்னையும், அவர்களுள் ஒருவனாக கருதுவதால், அவர்களுடைய பாராட்டு செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியும், திருப்தியும் அளிப்பதாக இருக்கிறது...' என்றார் ராஜாஜி.
மறைந்த எழுத்தாளர் லட்சுமி, ஒரு மருத்துவர் என்பது, வாசகர்கள் பலருக்கு தெரியாது. அவர் தன், 'நினைவுகள்' கட்டுரையில் எழுதுகிறார்: டாக்டர் படிப்பில் பாஸ் செய்து, கிளினிக் துவங்கி, வாசலில் போர்டை மாட்டி உட்கார்ந்து விட்டேன். ஆனால், துவக்கத்தில் என்னிடம் குறைவான நோயாளிகளே வந்தனர். சில சமயம், நோயாளிகள் யாராவது அகப்பட மாட்டார்களா என்று ஏங்கியதும் உண்டு.
என் சிகிச்சை திறமையில் நம்பிக்கை வைத்து, ஒரு நாள், இளம் கர்ப்பிணி பெண் ஒருவள் என்னை நாடி வந்தாள். அவளை நன்கு பரிசோதித்துப் பார்த்தேன். பேறு காலம் முழுவதும் அவளை கவனித்துக் கொள்ளும்படியும், பிரசவ சமயத்தில், வைத்திய உதவி செய்யவும், ஆவலுடன் ஒப்புக் கொண்டேன்.
வைத்தியரின் கட்டணத்தை பற்றி முன்கூட்டியே பேசி, அப்பெண் என்னுடன் ஒரு முடிவும் செய்து கொண்டாள். அவளுக்கு பிரசவ வேதனை ஆரம்பமானவுடன், உற்சாகமாக என் மருந்துப் பெட்டியை தூக்கியபடி, அவள் வீட்டிற்கு விரைந்தேன்.
மருத்துவமனையில், எந்த விதமான கஷ்டப் பிரசவங்களையும் கையாள, எனக்கு சிரமம் ஏற்பட்டதில்லை. உதவி செய்ய நர்சுகளும், டாக்டர்களும், தக்க ஆலோசனை கொடுத்து உதவ பெரிய ஸ்பெஷலிஸ்ட்களும் அருகில் இருக்கும் போது, தைரியம் தானாகவே ஏற்பட்டு விடுகிறது.
ஆனால், தன்னந்தனியே சிகிச்சை செய்ய வேண்டி வரும் போது நிலைமை வேறு. பொறுப்பு முழுவதையும் நாமே ஏற்க வேண்டி வந்தால், தைரியம் குறைந்து விடுகிறது. ஆரம்ப காலத்தில் வைத்தியர்கள் பலருக்கு ஏற்படும் அனுபவம் இது.
நான் அன்று ஏற்றுக் கொண்ட கேஸ், ஆரம்பத்தில் சுலபமாக தென்பட்ட போதிலும், முடிவில் மிகவும் கஷ்டமான பிரசவ கேசாக மாறி விட்டது.
நேரம் செல்ல செல்ல, பெற்றோர் முகத்தில் கவலை திரையிட்டது. எனக்கோ, என் திறமையை பற்றி சந்தேகம் வலுக்கத் துவங்கியது. உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்தது. என் இஷ்ட தெய்வங்களை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டேன். முடிவில், பிரசவம் சுகமாக நடந்தேறியது. 'குவா குவா' என்று குழந்தை அலறியதை கேட்டதும், தாய், 'அப்பா... பிழைத்தேன்...' என்று கூறி, ஆனந்தப் பெருமூச்சு விட்டாள். நானும், 'பிழைத்தேன்...' என்று எண்ணி, நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
'கலைவாணர் வாழ்விலே' நூலிலிருந்து: ஒருமுறை, ரஷ்யாவிலிருந்து அந்நாட்டு திரைப்படக் கலைஞர்கள், வந்திருந்தனர். அவர்களுக்கு சென்னை ஸ்டுடியோக்களை சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு கலைவாணர், என்.எஸ்.கிருஷ்ணனிடம் தரப்பட்டிருந்தது.
சோவியத் கலைஞர்கள், நம் ஸ்டுடியோக்களில் இருந்த படத் தயாரிப்பு சாதனங்களை எல்லாம் பார்த்து, 'இவை எல்லாம் எங்கு செய்யப்பட்டவை?' என்று கேட்டனர்.
'இது இங்கிலாந்தில் செய்தது; இது அமெரிக்க இறக்குமதி...' என்று சொல்லிக் கொண்டே வந்தார் கலைவாணர்.
'உங்க நாட்டில் தயாரான பொருள் ஒன்றும் இல்லையா?' என்று கேட்டார் ஒரு ரஷ்யக் கலைஞர்.
கலைவாணர் சிரித்துக் கொண்டே, 'ஏன் இல்லை... இந்த ஸ்டுடியோவில் உள்ள சுவர்களை, நாங்கள் தான் கட்டினோம்; இங்குள்ள மரங்கள் நாங்கள் நட்டது தான்; அதோ நிற்கிற கார் டயர் டியூபுக்கு நாங்கள் தான் காற்றடித்தோம்...' என்றார்.
'தெரிந்து கொள் தம்பி' நூலிலிருந்து: மனிதர்களின் ரத்தம், பல வகைகளை கொண்டது என்பதை முதலில் கண்டறிந்து கூறியவர், கார்ல் லாண்ட்ஸ் டெயினர். ரத்தத்தில் ஆன்டிஜென் ஏ, பி ஆகிய இரு புரோட்டீன்கள் காணப்படுகின்றன.
ஆன்டிஜன், 'ஏ' இருந்தால், அதை, 'ஏ' வகை ரத்தம் என்றும், ஆன்டிஜன், 'பி' இருந்தால், அதை, 'பி' வகை ரத்தம் என்றும், ஆன்டிஜன், 'ஏ' மற்றும் 'பி' ஆகிய இரண்டும் இருந்தால், அதை, 'ஏபி' வகை என்றும், இரண்டுமே இல்லாதிருந்தால், அதை, 'ஓ' வகை ரத்தம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நடுத்தெரு நாராயணன்