sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 11, 2015

Google News

PUBLISHED ON : அக் 11, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா அவர்களுக்கு—

நான் பி.இ., பட்டதாரி; தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடந்தது. நானும், என் மனைவியும் நன்றாக தான் வாழ்க்கை நடத்தினோம். திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் கர்ப்பமானாள் என் மனைவி. எங்கள் துரதிர்ஷ்டம்... அது நிலைக்கவில்லை. பின், மீண்டும் ஒரு மாதம் கழித்து, கருவுற்றாள். நான்கு மாதத்திற்கு பின், அதுவும் நிலைக்கவில்லை.

இதனால், என் மனைவி குடும்பத்தார், நாங்கள் தான் ஏதோ செய்து விட்டோம் என, என் குடும்பத்தின் மீது பழி சுமத்தி, சண்டையிட்டனர். இத்தனைக்கும் என் மனைவி பி.காம்., மற்றும் சி.ஏ., முடித்திருக்கும் பட்டதாரி; ஆனால், அவள் நல்லவள். தன் பெற்றோரிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாள்; அவர்கள் அதை, தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எங்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, 'நம் திருமணத்தை, பதிவு செய்ய வேண்டும்...' என்று கூறினாள் என் மனைவி. நான் தான், 'பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணத்திற்கு, எதற்கு பதிவு...' என்று கூறினேன்.

திருமணம் முடிந்தவுடன், ரேஷன் கார்டு மாற்றித் தருமாறு, என் மாமனாரிடம் கூறினேன்; அவர், 'இப்போது முடியாது; மெதுவாக பார்த்துக் கொள்ளலாம்...' என்றார். அத்துடன், என் மனைவியின் ஒரிஜினல் சர்டிபிகேட் கேட்ட போதும், அதை தர மறுத்ததுடன், 'எப்போது தர வேண்டுமோ அப்போது தருகிறேன்...' என்று கூறி விட்டார்.

இதை, என் மனைவியிடம் கூறிய போது, 'என் அம்மா தான் தர வேண்டாம் என்று கூறியிருப்பார்; எங்க அம்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே உங்கள பிடிக்கல. எங்க அப்பா சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது. நீங்கள் வேலைக்கு சென்றவுடன், என்னிடம் போனில் கண்டதைப் பேசி என்னை அழ வைப்பார் என் அம்மா.

'அதனால் தான், நம்ம கல்யாணத்தை பதிவு செய்திடலாம்ன்னு கூறினேன்...' என்றாள். இப்போது, என் பிரச்னை என்னவென்றால், இரண்டாவது கரு கலைந்த நிலையில், அவள் உடல் நிலை சரியாகட்டும், இரண்டு, மூன்று நாட்கள் தன் தாயார் வீட்டில் இருந்தால் சந்தோஷமாக இருப்பாளே என நினைத்து, மாமியார் வீட்டில் என் மனைவியை விட்டு வந்தேன். பின், இரண்டு நாட்களுக்குப் பின், அவளை அழைக்கச் சென்ற போது, என் மனைவியை என்னுடன் அனுப்ப மறுத்து விட்டனர் அவளது பெற்றோர். ஏன் என்று கேட்ட போது, 'என் மகளுக்கு வேற திருமணம் செய்யப் போகிறோம்...' என்று கூறினர்.

என் பெற்றோருடன் சென்று நியாயம் கேட்ட போது, எங்களுடன் சண்டை போட்டனர். அக்கம், பக்கத்தினர், 'சிறிது நாட்களுக்கு பின் பேசிக் கொள்ளலாம்...' என்றனர். கோபத்தில் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்காது என்று, நாங்களும் வீட்டிற்கு வந்து விட்டோம்.

ஒரு வாரம் சென்ற பின், என் இரு வீட்டார் உறவினர்கள் விசாரித்ததற்கும், ஏதேதோ பேசி, அனுப்ப மறுத்து விட்டனர்.

பின், மீண்டும் 10 நாட்கள் இடைவெளி விட்டு கூப்பிட்டதற்கு, 'என் மகளுக்கு உங்களுடன் வாழ விருப்பமில்லை...' என்று கூறினார் என் மாமனார்.

என் வீட்டுப் பெரியவர்கள், 'நாங்கள் அவளை அழைத்து பேச வேண்டும்...' என்றதற்கு, என் மனைவி அவர்களிடம், 'என் அப்பா வாழ சொன்னார் வாழ்ந்தேன்; இப்போது, என் அப்பா வாழக்கூடாது என்று சொல்கிறார். நான் வாழ மாட்டேன். வேற எதுவும் என்னால் கூற முடியாது...' என்றாள்.

பெரியவர்கள் என்னை அழைத்து, இந்த விவரத்தைக் கூறினர். நான், 'என் மனைவியிடம் நேரடியாக பேச வேண்டும்...' என்றேன். ஆனால், அதற்கு, 'உன்னை பார்த்து பேச விருப்பம் இல்லை...' என்று கூறுகிறாள். அதனால், 'இருவரும் பிரிய சம்மதித்து கையெழுத்து போடுங்கள்...' என்று பெரியவர்கள் கூறினர்.

அப்போதும், 'என் மனைவியிடம் பேச வேண்டும்...' என்றேன்; மறுத்து விட்டனர். என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர். என் மனைவியிடமும் கையெழுத்து வாங்கினர்.

இப்போது இருவரின் சம்மதத்தின் பேரில் கோர்ட்டில் விவாகரத்து பெற தாக்கல் செய்து இருக்கின்றனர்; ஆனால், எனக்கு பிரிய சம்மதமில்லை. அதை, என் மனைவியிடம் கூற முடியவில்லை. போன் செய்தால் என் மனைவியின் நம்பர், அவரது அப்பாவுக்கு கால், 'டைவர்ட்' ஆகிறது.

இதில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. தயவு செய்து ஒரு நல்ல முடிவு சொல்லுங்கள்.

இப்படிக்கு,

மனைவியுடன் வாழ நினைக்கும் கணவன்.


அன்பு மகனுக்கு —

நீ, உன் மனைவியுடன், தொடர்ந்து ஆறு மாதங்கள் கூட குடும்பம் நடத்தியிருக்க மாட்டாய் என நம்புகிறேன். இருமுறை, உன் மனைவியின் கர்ப்பம் நிலைக்காததற்கு, ஆர்ஹெச் பேக்டர் கூட காரணமாய் இருக்கலாம் அல்லது உனக்கு நீண்டநாள் குடிப்பழக்கம் இருந்தால், அது கூட காரணமாய் இருக்கலாம். இருவரும் ரத்த பரிசோதனை செய்து தகுந்த மருத்துவம் மேற்கொண்டால், குழந்தை ஆரோக்கியமாய் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எதிராளி சூனியம் வைத்து விட்டான் என படிக்காதவர் மட்டுமல்ல படித்தவரும் நம்புகின்றனர். தங்களுக்கு விரும்பத்தகாதது ஏதாவது நடந்தால், பழியை யார் மீதாவது சுமத்தும் மனோபாவம் நமக்கு உள்ளது.

திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என உன் மனைவி கூறியதில் எந்த தவறும் இல்லை. திருமண பதிவு அவசியம். ரேஷன்கார்டு மாற்றித்தருமாறு நீ கேட்டதை குடும்பத்தை பிரிக்க பார்க்கிறாய் என, உன் மனைவி வீட்டார் தவறாக கருதுகின்றனர். மனைவியின் கல்வி சான்றிதழ் கேட்டதையும் அவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கின்றனர்.

உனக்கும், உன் மனைவி வீட்டாருக்குமான முட்டல் மோதலுக்கு என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்பதை பார்ப்போமா?

ஏற்கனவே, உன் மாமியாருக்கு உன் மீது அதிருப்தி. மாமனாரின் மனம் புண்படும் படி, உன் நடத்தையோ, உன் பேச்சோ இருந்திருக்கிறது. நீ பணி செய்யும் இடத்தில் உனக்கு நல்ல பெயர் இல்லாமலோ அல்லது குடிப்பழக்கமோ இருந்திருக்க கூடும்.

உன் மனைவிக்கு நிலையான மனம் இருப்பதாக தெரியவில்லை. அவள் ஒரு இரண்டும் கெட்டான். அவளுக்கு, உன்னுடன் வாழவும் விருப்பம்; அப்பாவின் பேச்சை கேட்டு, உன்னை விட்டு நிரந்தரமாக பிரியவும் விருப்பம். அவர்கள், தங்கள் மகளுக்கு விவாகரத்து வாங்கி, மறுமணம் செய்து வைக்க தயாராகி விட்டனர் என்றே தோன்றுகிறது.

நீ, உன் மனைவியிடம் நேரடியாக பேச விரும்புகிறாய். உன்னை நேரில் பார்த்தால், தன் மனம் மாறினாலும் மாறி விடும் என, உன் மனைவி பயப்படுகிறாள்.

'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்...' என முகத்தில் அறைந்தது போல் கூறிவிட்டாள். கிட்டாதாயின் வெட்டென மற மகனே!

விவாகரத்து கோரி, இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறீர்கள். உடைந்த உறவு இனி ஒட்டாது. ஏதாவது ஒரு கட்டாயத்தின் பேரில், நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் அது நிலைக்காது. அதனால், குடும்ப நீதிமன்றம் மூலம், விவாகரத்து பெற்றுக் கொள். உனக்கு ஒத்துப்போகிற, நல்ல பெண்ணாக பார்த்து மறுமணம் செய்து கொள். உன்னிடம் ஏதாவது தவறுகள் இருந்தால், அதை திருத்திக் கொள். பிறரின் மனம் புண்படாமல் நாசூக்காய் பேச பழகு.

என்ன தான் ஒரு ஆண், ராமனாய் இருந்தாலும், அவனுக்கேத்த மனைவி அமைவது பூர்வஜென்ம புண்ணியம் தான். மறுமணமாவது ஜெயிக்க இறைவனை பிரார்த்தி; வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தாலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us